/* */

மகாத்மா காந்தியின் அரசியல் குரு கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள்...

Gopalakrishna Gokhale in Tamil-என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?

HIGHLIGHTS

Gopalakrishna Gokhale in Tamil-"என்னை நம்பியுள்ளவர்களை எப்படி ஏமாற்றுவது?" மகாத்மா காந்தியின் அரசியல் குரு கோபால கிருஷ்ண கோகலே பிறந்தநாள் இன்று..

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், மகாத்மா காந்தியின் அரசியல் குரு என்று போற்றப்படுபவருமான கோபாலகிருஷ்ண கோகலே (Gopal Krishna Gokale) பிறந்த தினம் இன்று (மே 9).

"அழுவது எனக்குப் பிடிக்காது; அழுவதானால் இந்த இடத்தைவிட்டுச் செல்லுங்கள்" - உடல்நிலை மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு... காலன், கணக்கை முடிக்க காத்திருந்த காலகட்டத்தில், ஆறுதல் சொல்ல வந்த நண்பர்களிடம்... 'பாரத மணி' என்று அழைக்கப்பட்ட கோபாலா சொன்ன வார்த்தைகள்தான் அவை. பெருமாளின் பெயர்களில் ஒன்றான கோபாலா என்ற பெயரை, தன் சிறுவயதில் கொண்டிருந்த அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல... பின்னாட்களில் சுதந்திரப் போராட்டக் களத்தில் உயிரைநீத்த கோபால கிருஷ்ண கோகலேதான். அவருடைய பிறந்த தினம் இன்று.

மகாராஷ்டிர மாநிலம் கோதாலுக் என்ற இடத்தில் (1866) பிறந்தார். இளம் வயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், அண்ணன் வேலை பார்த்து இவரைப் படிக்கவைத்தார். மின்சாரம் இல்லாததால் தெரு விளக்கில் படித்தார்.

தம் பெயரான கோபாலனையும், தன் தந்தையின் பெயரான கிருஷ்ண ராவில் உள்ள கிருஷ்ணாவையும், தம் வம்சத்தின் பெயரான கோகலே என்பதையும் ஒன்றாக இணைத்து கோபால கிருஷ்ண கோகலே என்று மாறினார் அந்தக் கோபாலன். ''ஒரு துறவியின் மனநிலையுடன் எல்லாவற்றையும் துறந்து தேச சேவையில் பலர் ஈடுபட்டு இந்தத் தேச உயர்வுக்குப் பாடுபட வேண்டும்'' என்று எண்ணினார்; அதற்காக அல்லும்பகலும் அயராது உழைத்தார். இந்திய - இங்கிலாந்து பொருளாதார உறவுகளைப் பரிசீலிக்க 'வெல்பி கமிஷன்' எனும் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு முன், இந்தியாவில் உள்ள பொது நிறுவனங்களைச் சாட்சியம் அளிக்க பிரிட்டிஷ் அரசு கேட்டுக்கொண்டது. அதற்காக இங்கிலாந்து சென்று தன் வாதத்தை வைத்தார் கோகலே. ''இந்தியாவின் வருமானத்தில் பெரும் பகுதி ராணுவத்துக்கும், உயர் பதவி வகிப்பவர்களுக்கான சம்பளம் மற்றும் பென்ஷன் ஆகியவற்றுக்குமே செல்கிறது. இதனால் சுகாதாரம் மற்றும் அடிப்படைத் தேவைகளுக்குப் பணம் செலவழிக்க முடிவதில்லை. இந்நிலை மாற வேண்டும்; பிரிட்டிஷ் அரசு ஏழைகளாய் உள்ள அடிப்படை வசதிகளற்ற இந்தியர்களின் நிலையை அறிய வேண்டும்; இந்நிலை மாற வழிவகை செய்ய வேண்டும்'' என்பதுதான் அவர் வைத்த வாதமாகும். இப்படி ஆங்கிலேயர் முன் அவர் அளித்த வாதத்துக்கு அன்றே வெற்றி கிடைத்தது.

உண்மையின் உறைவிடத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர் கோபால கிருஷ்ண கோகலே. அதற்கு உதாரணமாய் அவரது வாழ்வில் நடந்த எத்தனையோ சம்பவங்களைச் சொல்லலாம்... அதில், சிலவற்றை இப்போது காண்போம்.

தன்னுடையச் சிறுவயதில் நண்பர்களோடும், தன் சகோதரரோடும் விளையாடுவது வழக்கம். ஒருநாள் தம் அண்ணன் ஓர் அணியாகவும், தான் ஓர் அணியாகவும் பிரிந்து விளையாடிக்கொண்டிருந்தார் கோகலே. அப்போது, இவருடைய அணி வெற்றிபெறும் தருவாயில் இருந்தது. அந்த நேரத்தில் கோகலேயின் சகோதரரான கோவிந்தா, கோகலேயை அழைத்து... ''உன்னைவிடப் பெரியவன் நான்; என்னோடு நீ போட்டிபோடுவதால் உன் அணி வென்றுவிடும்போல் உள்ளது. எனது அணி தோற்றால் எனக்கு அவமானம்; உன் அண்ணன் தோற்பதை நீ விரும்புகிறாயா? எனவே, எனக்காக நீ கொஞ்சம் விட்டுக்கொடுத்து விளையாடு. என் அணி தானாக வெற்றிபெறும்'' என்றார். தன் சகோதரர் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த கோகலே, ''அண்ணா... தாங்கள் கூறினால் இந்த விளையாட்டில் இருந்துகூட விலகிக்கொள்கிறேன். ஆனால், என்னை நம்பியுள்ள எனது குழுவினரை நான் எப்படி ஏமாற்றுவது... அது தவறல்லவா'' என்றார்.

பால்ய பருவத்தில், அண்ணன் தம்பி இருவருமே ஒரே பள்ளியில் படித்துவந்தனர். அப்போது, கணக்கு ஒன்றைக் கொடுத்து... அதை வீட்டுப்பாடம் செய்துகொண்டு வரச் சொன்னார் வகுப்பாசிரியர். மறுநாள், கோகலேயைத் தவிர வேறு எவரும் அந்தக் கணக்கைச் செய்யவில்லை. ஆகையால், அவரைச் சிறப்பித்தார் வகுப்பாசிரியர். அப்போது, கோகலேயின் கண்களிலிருந்து நீர் கசிந்தது. காரணம் புரியாத ஆசிரியர், ''ஏன் கோபால் அழுகிறாய்? நீதான் கணக்குச் சரியாகப் போட்டிருக்கிறாயே'' என்றார். அதற்கு கோகலே, ''இல்லை... ஐயா! என்னை மன்னித்துவிடுங்கள். இந்தக் கணக்கை நான் மட்டும் தனியாகச் செய்யவில்லை. என் அண்ணன் உதவியுடன்தான் இதைச் செய்தேன்'' என்று உண்மையை ஒப்புக்கொண்ட கோகலேதான், பின்னாளில் உலகம் போற்றும் தேச பிதாவாக உயர்ந்த மகாத்மா காந்திக்குக் குருவாக இருந்தார்.

'கோகலே என் அரசியல் குரு' என தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார் காந்தி. 'அவர் ஸ்படிகம் போன்று தூய்மையானவர், ஆட்டுக்குட்டிபோல மென்மையானவர், சிங்கம் போல வீரம் படைத்தவர், பெருந்தன்மை உடையவர், அரசியல் அரங்குக்கு பொருத்தமானவர்' என்றும் பாராட்டியுள்ளார் காந்தி. அரசியலை ஆன்மிகமாக்கல், சமூக மேம்பாடு, அனைத்தையும் உள்ளடக்கிய கல்வி ஆகியவற்றின் மீது கோகலே கொண்டிருந்த திடமான நம்பிக்கை காந்திஜியை வெகுவாக கவர்ந்தது.

ஒரே டிராயர், ஒரு சட்டை, ஒருவேளை சாப்பாடு, அதையும் இவரேதான் சமைக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் மும்பை எல்பின்ஸ்டோன் கல்லூரியில் 1884-ல் பட்டப் படிப்பை முடித்தார். அரசு வேலைவாய்ப்புகள் வந்தன. அதில் விருப்பமின்றி, சமூக மறுமலர்ச்சியாளர் மகாதேவ் கோவிந்த ரானடேவின் ஆதரவாளராக மாறினார்.

விழா ஒன்றில், அரங்கத்துக்குள் வருபவர்களை டிக்கெட் பரிசோதனை செய்து அனுப்பும் பணியில் தீவிரமாக இருந்தார் கோகலே. அந்தச் சமயத்தில் டிக்கெட் கொண்டுவராமல் வந்த ஒருவரை வாசலிலேயே நிறுத்திவிட்டார் கோகலே. அவருடைய நேர்மையையும், திறமையையும் பற்றிக் கேள்விப்பட்டு மிகவும் வியந்துபோனார் டிக்கெட் கொண்டுவராதவர். பின்னர், அவரைப்பற்றி நன்கு அறிந்த ஒரு நண்பர், கோகலேயிடம் விளக்கிக் கூறினார். அதன்பின்பே, அவரை உள்ளே அனுப்பினார் கோகலே. உள்ளே சென்ற அந்த நபர் வேறு யாருமல்ல... குரு மகாதேவ் என்று அழைக்கப்பட்ட மகாதேவ கோவிந்த ரானடேதான். இவர்தான், கோகலேயின் குருவாக இருந்தார். இந்தச் சந்திப்புதான் அவர்களுக்குள் ஒரு நீண்டகால தொடர்பை ஏற்படுத்தியது.

''என் தாய்நாடே! நீ அரசியல், சமயம், இலக்கியம், விஞ்ஞானம், கலை, தொழில் என எல்லா வளமும் பெற்றுத் திகழவேண்டும். இதுவே என் மனப்பூர்வமான ஆசை'' என்று சொன்ன கோகலேயின் ஆசை இன்று ஓரளவு இந்தியாவில் நிறைவேறியிருந்தாலும், இதைவிட முழுதாக மாற வேண்டும்; முன்னேற வேண்டும் என்பதுதான் அனைவருடைய விருப்பமாக இருக்கிறது.

1912-ல் அமைக்கப்பட்ட பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் கோகலேயின் பணி மிகவும் முக்கியமானது. இந்தியர்கள் உயர்வான அரசுப் பணிகளுக்குத் தகுதி உடையவர்களா, இல்லையா என ஆராய்வது இந்தக் கமிஷனின் நோக்கம். இதற்கு வாக்குறுதி அளிக்க வந்தவர்களை விசாரிக்க வேண்டிய பணி கோகலேவுடையது. இதன் ஓயாத உழைப்பு, அவருக்கு உடல்நலக் குறைவை உண்டாக்கியது. மருத்துவர்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுரை கூறினர். அவரோ, ''இது கர்ம பூமி; ஓய்வெடுக்க வேண்டிய இடம் வேறு எங்கோ உள்ளது'' என்று சொல்லி ஓய்வில்லாமல் உழைத்த அந்த கோகலேவை, அவர் சொன்ன அந்த ஓய்வெடுக்க வேண்டிய இடம் அவரை நிரந்தரமாக அழைத்துக்கொண்டது.

தன் வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்து மக்கள் பணியாற்றி வந்த கோகலே 49 வயதில் (1915) மறைந்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 April 2024 9:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்