/* */

பிரதமரின் கிசான் திட்டம்: 10 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு மேல் வழங்கப்பட்டது

151 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ரூ.14 கோடிக்கும் மேற்பட்ட பங்கு மானியத்தையும் பிரதமர் விடுவித்தார்.

HIGHLIGHTS

பிரதமரின் கிசான் திட்டம்: 10 கோடி விவசாயக் குடும்பங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு மேல்   வழங்கப்பட்டது
X

இந்திய பிரதமர் நரேந்திர மோடி

விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டங்களான பிரதமரின் கிசான் சம்மான் நிதியின் 10-வது தவணை நிதிப் பயன்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக விடுவித்தார்.

இதன் மூலம் ரூ.20,000 கோடிக்கும் மேற்பட்ட தொகை 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பயனாளிக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது 351 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கான பங்கு மானியமாக ரூ.14 கோடிக்கும் மேற்பட்ட தொகையையும் பிரதமர் விடுவித்தார், இந்த உதவித் தொகை மூலம் 1.24 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள். இந்த நிகழ்ச்சியின் போது உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், வேளாண் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த விவசாயிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உத்தராகண்டை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புடன் கலந்துரையாடிய பிரதமர், இயற்கை விவசாயத்தை தேர்வு செய்தது குறித்தும், இயற்கை விளைப் பொருட்களுக்கு சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியும் அவர்களிடம் கேட்டறிந்தார். இயற்கை உரங்களை எவ்வாறு சேகரிக்கிறோம் என்பது குறித்து உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் பிரதமரிடம் எடுத்துரைத்தன. அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக இயற்கை விவசாயம் பரவலாக ஊக்குவிக்கப்படுவதுடன் ரசாயன உரங்களை விவசாயிகள் பெருமளவு சார்ந்திருப்பதை குறைப்பதோடு, விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கச் செய்கிறது என்றார்.

பஞ்சாப்பை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், பரலியை (பயிர்க் கழிவுகளை) எரிக்காமல் அப்புறப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தனர். அத்துடன் சூப்பர்சீடர் மற்றும் அரசு அமைப்புகளின் உதவிகள் குறித்தும் அவர்கள் பேசினர். பரலி மேலாண்மை தொடர்பான அவர்களது அனுபவங்களை அனைத்துப் பகுதிகளிலும் பின்பற்றலாம் என பிரதமர் பாராட்டினார்.

ராஜஸ்தானை சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், தேன் உற்பத்திக் குறித்துப் பேசினர். நாஃபெட் உதவி காரணமாக, உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்றும் குறிப்பிட்டனர்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், விவசாயிகளின் வளமைக்கு அடித்தளமிடும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை உருவாக்கியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர். அமைப்பின் உறுப்பினர்களுக்கு விதைகள், இயற்கை உரங்கள், பல்வேறு தோட்டக்கலைப் பொருட்களை வழங்கி உதவுவது குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன் அரசுத் திட்டங்களில் பலன்களை பெறுவது விவசாயிகளுக்கு எவ்வாறு உதவியாக உள்ளது என்பது குறித்தும் அவர்கள் பேசினர். அவர்கள் இ-நாம் வசதிகளையும் பெற்று வருகின்றனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வை நிறைவேற்றப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதற்கு பதிலளித்த பிரதமர், விவசாயிகளின் மனஉறுதியே நாட்டின் முக்கிய வலிமையாகத் திகழ்கிறது என்றார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர் பேசுகையில், நபார்டு ஒத்துழைப்பு காரணமாக, அதிக விலை பெறுவதற்காக உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை ஏற்படுத்தியிருப்பதுடன் இந்த அமைப்புகள் முற்றிலும் பெண்களுக்கு சொந்தமானதாக, முழுவதும் அவர்களால் இயக்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர். இப்பகுதியில் நிலவும் தட்பவெப்ப சூழல் காரணமாக, சோளப் பயிர்களை சாகுபடி செய்வதாக பிரதமரிடம் தெரிவித்தனர். அப்போது பேசிய பிரதமர், பெண்களின் வெற்றி, அசைக்க முடியாத அவர்களது மனஉறுதியின் வெளிப்பாடு என்றார். சிறுதானிய சாகுபடி செய்து பயன்பெறுமாறும் அவர் விவசாயிகளைக் கேட்டுக் கொண்டார்.

குஜராத்தைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், இயற்கை விவசாயம் மற்றும் பசுமாடு சார்ந்த விவசாயம், செலவுகளையும், மண்ணின் சுமையை எவ்வாறு குறைக்கிறது என்பது பற்றியும் எடுத்துரைத்தனர். இந்தத் திட்டத்தால் இப்பகுதி பழங்குடியின மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை பிரதமர் தெரிவித்துக் கொண்டார். காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுடன் பேசியதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இன்று நாம் புத்தாண்டில் அடியெடுத்து வைப்பது பற்றி குறிப்பிட்ட பிரதமர், முந்தைய ஆண்டுகளின் சாதனைகளிலிருந்து பெற்ற ஊக்கத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய பயணத்தை தொடங்க வேண்டியது அவசியம் என்றார். பெருந்தொற்று பாதிப்பை எதிர்கொள்ள நாடு மேற்கொண்ட முயற்சிகள், தடுப்பூசி செலுத்தும் பணி மற்றும் நெருக்கடியான தருணத்தில் அதிகம் பாதிக்கப்படக் கூடிய மக்களுக்கான ஏற்பாடுகளை பிரதமர் நினைவு கூர்ந்தார். அதிகம் பாதிக்கப்படக் கூடிய தரப்பினருக்கு உணவுப்பொருட்கள் வழங்குவதற்காக இந்த நாடு 2 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டது. நாட்டின் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த அரசாங்கம் அயராது பாடுபட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள், புதிய மருத்துவக் கல்லூரிகள், நலவாழ்வு மையங்கள், ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு இயக்கம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் சுகாதார இயக்கம் போன்ற மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மாற்றியமைக்கும் திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரும் முயற்சிப்போம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் நாடு சென்று கொண்டிருக்கிறது. மக்களில் பலர் தங்களது வாழ்நாளை நாட்டிற்காக செலவிட்டு வருகின்றனர், அவர்கள்தான் தேசத்தை உருவாக்குகின்றனர். முன்பே அவர்கள் இந்தப் பணியை மேற்கொண்ட போதிலும் தற்போதுதான் அவர்களது பணிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். "இந்த ஆண்டு நாம் நமது சுதந்திரத்தின் 75-வது ஆண்டைப் பூர்த்தி செய்ய இருக்கிறோம். நாட்டின் உறுதிப்பாடுகளுடன் வலிமையான புதிய பயணத்தைத் தொடங்க இதுவே உரிய தருணம், புதிய வீரியத்துடன் முன்னோக்கிச் செல்வோம்" என்று அவர் தெரிவித்தார். கூட்டு முயற்சிகளின் வலிமை குறித்து விவரித்த பிரதமர், "130 கோடி இந்தியர்களும் ஒரே நடவடிக்கையை மேற்கொண்டால், அது வெறும் ஒரு அடி அல்ல, மாறாக 130 கோடி அடிகளுக்கு சமமானது" என்று தெரிவித்தார்.

பொருளாதாரம் குறித்துப் பேசிய பிரதமர், பல அளவுகோள்களில், இந்திய பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய காலத்தை விட சிறப்பாகக் காணப்படுகிறது. ''இன்று நமது பொருளாதார வளர்ச்சி விகிதம் 8%-ம் அதிகமாக உள்ளது. வெளிநாட்டு முதலீடும் இந்தியாவுக்கு சாதனை அளவாக வந்துள்ளது. நமது அந்நியச் செலாவணி கையிருப்பு சாதனை அளவை எட்டியுள்ளது. ஜிஎஸ்டி வசூலில் முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியிலும், குறிப்பாக வேளாண் ஏற்றுமதியில், புதிய சாதனையை நாம் படைத்துள்ளோம்'' என்று ஆவர் கூறினார். 2021-ல் யுபிஐ மூலம் 70 லட்சம் கோடிக்கும் மேல் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் இந்தியாவில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள். இதில் 10 ஆயிரம் கடந்த ஆறு மாதங்களில் வந்தது என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் கலாச்சாரத்தை வலுப்படுத்திய ஆண்டு 2021 என பிரதமர் கூறினார். காசி விஸ்வநாதர் ஆலய வளாகம், கேதார் நாத் வளாகம் ஆகியவற்றை அழகுபடுத்தி, மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள், ஆதி சங்கராச்சார்யாவின் சமாதியை சீரமைத்தது, களவாடப்பட்ட அன்னபூர்ணா சிலையை மீட்டு அமைத்தது, அயோத்தியில் ராமர் ஆலய கட்டுமானம், தோலாவிரா, துர்கா பூஜைக்கு உலகப் பாரம்பரிய அந்தஸ்து பெற்றது ஆகியவை இந்தியாவின் பாரம்பரியத்தை வலுப்படுத்தியுள்ளதுடன், சுற்றுலாவையும், புனித யாத்திரையையும் அதிகரித்துள்ளது.

மாத்ரா-சக்திக்கும் 2021-ம் ஆண்டு நம்பிக்கையான ஆண்டாகும். பெண்களுக்கு சைனிக் பள்ளிகள் திறக்கப்பட்டதுடன், தேசிய பாதுகாப்பு அகாடமியின் கதவுகளும் திறக்கப்பட்டன. சற்று முன்பு முடிவடைந்த இந்த ஆண்டில், பெண்களின் திருமண வயதை ஆண்களுக்கு இணையாக, 21 ஆக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய விளையாட்டு வீரர்களும் 2021-ல், நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ளனர். விளையாட்டு உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா முதலீடு செய்துள்ளது என பிரதமர் தெரிவித்தார்.

பருவநிலை மாற்ற விவகாரத்தில் உலகுக்கே முன்னோடியாக, இந்தியா 2070-க்குள் கார்பன் உமிழ்வற்ற நிலையை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியா உரிய காலத்திற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்தியா இன்று ஹைட்ரஜன் இயக்கத்துக்காக பாடுபட்டு வருகிறது. மின்சார வாகனங்களில் முன்னணி நிலையை எடுத்துள்ளது. பிஎம் கதிசக்தி தேசிய பெருந்திட்டம், நாட்டின் உள்கட்டமைப்பு கட்டுமாணத்தின் வேகத்தை புதிய அளவுக்கு கொண்டு செல்லவுள்ளதாக பிரதமர் கூறினார். ''மேக் இன் இந்தியா-வுக்கு புதிய பரிமாணத்தை அளிக்கும் வகையில், சில்லு தயாரிப்பு, செமிகண்டக்டர் போன்ற புதிய துறைகளில் லட்சியமிக்கத் திட்டங்களை நாடு செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

''நாடுதான் முதலில்'' என்ற உணர்வு இன்று ஒவ்வொரு இந்தியருக்கும் வந்துள்ளதாகக் கூறிய பிரதமர், நமது முயற்சிகளில் ஒற்றுமையும், உறுதிப்பாடும் வந்துள்ளதாகத் தெரிவித்தார். சாதிப்பதற்கு பொறுமையின்மை மாறி, நமது கொள்கைகளில் நிலைத்தன்மையும், தொலைநோக்கும் இப்போது வந்திருப்பதாக அவர் கூறினார்.

பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு நிதி, இந்திய விவசாயிகளுக்குப் பெரும் ஆதரவாக உள்ளது என்று தெரிவித்த பிரதமர், இன்றைய ஒதுக்கீட்டையும் சேர்த்தால், 1.80 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட தொகை, நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் மூலம், கூட்டு வலிமையின் அதிகாரத்தை சிறு விவசாயிகள் உணர்ந்துள்ளனர் என பிரதமர் தெரிவித்தார். இந்தப் பயன்கள் பேர வலிமை, விற்பனை, புத்தாக்கம், அபாய மேலாண்மை, சந்தை நிலையை அறிந்து கொள்ளுதல் ஆகியவற்றை அதிகரித்துள்ளன. எஃப்பிஓ-க்களின் (விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள்) பயன்களைக் கருத்தில் கொண்டு, அரசு அதனை ஒவ்வொரு மட்டத்திலும் மேம்படுத்தி வருகிறது. இந்த எஃப்பிஓ-கள் 15 லட்சம் ரூபாய் வரை உதவியைப் பெற்று வருகின்றனர். இதன் பயனாக, இயற்கை எஃப்பிஓ-கள், எண்ணெய் வித்துக்கள் எஃப்பிஓ-கள், மூங்கில் தொகுப்புகள், தேன் எஃப்பிஓ-கள் போன்றவை நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. ''இன்று 'ஒரு மாவட்டம், ஒரு பொருள்' போன்ற திட்டங்களால் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். உள்நாட்டு மற்றும் உலக சந்தைகள் அவர்களுக்காக திறக்கப்பட்டுளன'' என்று பிரதமர் கூறினார். 11 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீட்டுடனான தேசிய பனை எண்ணெய் இயக்கம் போன்ற திட்டங்கள் இறக்குமதி மீதான சார்பை குறைத்துள்ளதாக அவர் கூறினார்.

வேளாண் துறையில் கடந்த சில ஆண்டுகளில், பல சாதனைகள் எட்டப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர், உணவு தானிய உற்பத்தி 300 மில்லியன் டன்னை எட்டியது, இதேபோல, தோட்டக்கலை மற்றும் மலர் உற்பத்தி 330 மில்லியன் டன்னை எட்டியது, கடந்த 6-7 ஆண்டுகளில், பால் உற்பத்தி 45 சதவீதம் அளவுக்கு உயர்ந்ததாகக் கூறினார். நுண்ணீர் பாசனத்தின் கீழ், சுமார் 60 லட்சம் ஹெக்டேர் நிலம் கொண்டு வரப்பட்டுள்ளது; பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், வெறும் 21 ஆயிரம் கோடி பிரிமியம் மட்டும் பெற்று, ஒரு லட்சம் கோடிக்கும் மேற்பட்டத் தொகை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் எத்தனால் உற்பத்தி 40 கோடி லிட்டரில் இருந்து, 340 கோடி லிட்டராக உயர்ந்துள்ளது. உயிரி எரிவாயுவை மேம்படுத்தும் கோபர்தான் திட்டம் பற்றி பிரதமர் விளக்கினார். பசுஞ்சாணத்துக்கு மதிப்பு இருக்குமானால், பால் தராத விலங்குகள் விவசாயிகளுக்கு பாரமாக இராது. மத்திய அரசு காமதேனு ஆணையத்தை உருவாக்கி, பால் பண்ணைத் துறை கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறது.

பிரதமர் மீண்டும் இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவது பற்றி வலியுறுத்தினார். ரசாயனம் அற்ற விவசாயம் மண் வளத்தைப் பாதுகாப்பதற்கான பெரிய வழி என்று அவர் கூறினார். இந்த திசையை நோக்கிய முக்கிய நடவடிக்கை இயற்கை வேளாண்மை என்று கூறிய அவர், இதன் முன்னேற்றம் மற்றும் பயன்கள் பற்றி ஒவ்வொரு விவசாயியும் அறியச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். விவசாயிகள் வேளாண்மையில் தொடர்ந்து புதுமையைப் புகுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், தூய்மை போன்ற இயக்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

Updated On: 1 Jan 2022 3:18 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்