/* */

ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு

மக்களவை 3-ஆம் கட்ட இத்தேர்தலில் சுமார் 64.40 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
X

கோப்பு படம்

மக்களவை 3-ஆம் கட்ட தேர்தலையொட்டி, குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 7) வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தேர்தலில் சுமார் 64.40 சதவீத வாக்குகள் பதிவானதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில், பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாக்களித்தனர்.

நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) தேர்தல் நடைபெற்று வருகிறது.

முதல் இரு கட்ட தேர்தல்களைத் தொடர்ந்து, மூன்றாம் கட்டமாக குஜராத்தில் 25, கர்நாடகத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 11, உத்தர பிரதேசத்தில் 10, மத்திய பிரதேசத்தில் 9, சத்தீஸ்கரில் 7, பிகாரில் 5, அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் தலா 4, கோவாவில் 2, தாத்ரா-நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில் 2 என மொத்தம் 93 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் குமார் தலால் போட்டியின்றி தேர்வானதால், மீதமுள்ள 25 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது.

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்றது.

17.24 கோடி வாக்காளர்கள்: 120 பெண்கள் உள்பட 1,300-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்கிய 3-ஆம் கட்ட தேர்தலில் மொத்த வாக்காளர்கள் சுமார் 17.24 கோடி. இவர்களுக்காக 1.85 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்கு வந்து வரிசையில் நின்றவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இத்தேர்தலில் சுமார் 64.40 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

அஸ்ஸாமில் அதிகபட்சமாக 81.61 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 75.79 சதவீதமும், கோவாவில் 75.20 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

உத்தர பிரதேசத்தில் குறைந்த அளவாக 57.34 சதவீத வாக்குகளே பதிவாகின. குஜராத்தில் சுமார் 58.98 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத், ஜாங்கிபூர் தொகுதிகளில் பல இடங்களில் திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக தொண்டர்கள் இடையே மோதல்கள் நிகழ்ந்தன.

அரசியல் வன்முறை, வாக்காளர்களுக்கு மிரட்டல், வாக்குச்சாவடி முகவர்கள் மீதான தாக்குதல் என தேர்தல் ஆணையத்தில் 182 புகார்கள் அளிக்கப்பட்டன.

உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடும் மெயின்புரி தொகுதியில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற பாஜகவினர் முயன்றதாகவும், சில இடங்களில் வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் அகிலேஷ் குற்றம்சாட்டினார்.

இம்மாநிலத்தில் ஃபெரோஸாபாத் தொகுதியில் 3 கிராமங்களில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இக்கிராமங்களில் ஒரு வாக்குகூட பதிவாகவில்லை.

3-ஆம் கட்டத் தேர்தலில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா (காந்தி நகர்), ஜோதிராதித்ய சிந்தியா (குணா), மன்சுக் மாண்டவியா (போர்பந்தர்), புருசோத்தம் ரூபாலா (ராஜ்கோட்), பிரஹலாத் ஜோஷி (தார்வாட்), மத்திய பிரதேச முன்னாள் முதல்வர்கள் சிவராஜ் சிங் சௌஹான் (விதிஷா), திக்விஜய் சிங் (ராஜ்கர்) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

செவ்வாய்க்கிழமை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்தகட்ட தேர்தல்கள் நடைபெறவுள்ளன. ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Updated On: 8 May 2024 1:56 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...