/* */

நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி செய்து தரக்கோரி மனு

நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்

HIGHLIGHTS

நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி செய்து தரக்கோரி மனு
X

 நெல்லை மாநகராட்சி வாரந்தோறும் செவ்வாய்கிழமை அன்று நடைபெறும்  குறைதீர் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியினர் மனு அளித்தனர்

தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயமான நெல்லை நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநகராட்சி மேயரிடம் மனு அளித்தனர்.

நெல்லை டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயில் தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் இங்கு நடத்தப்பட்டு வரும் நிலையில், பல ஆண்டுகளாக இங்கு பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில்அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு தங்கும் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததால் அவர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 வது வார்டு கிளை செயலாளர் நம்பிக்குமார் தலைமையில் அக்கட்சியினர் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனிடம் இன்று மனு அளித்தனர்.

இதுகுறித்து நம்பி குமார் கூறியதாவது: கோவிலில் பக்தர்களுக்கு குடிநீர் கழிப்பிடம், தங்கும் வசதி உள்பட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. குறிப்பாக தற்போது கோடைகாலம் ஏற்பட்டுள்ள நிலையில் குடிநீர் வசதி இல்லாததால் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. எனவே குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க நாங்களாகவே நடவடிக்கை எடுத்து கொள்கிறோம் என்றும் மேயரிடம் அனுமதி கேட்டுள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.

நெல்லையப்பர் கோவிலின் புகழ்பெற்ற திருவிழாவான ஆனிப் பெருந்திருவிழா விரைவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்குள் கோயிலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Updated On: 10 May 2022 10:15 AM GMT

Related News