/* */

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்துவதாக நெடுஞ்சாலைத் துறை மீது புகார்..

நெடுஞ்சாலைத் துறையினரின் செயல்பாட்டால் மக்கள் மத்தியில் காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கெட்டப்பெயர் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்துவதாக நெடுஞ்சாலைத் துறை மீது புகார்..
X

காஞ்சிபுரம் மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் பங்கேற்றோர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 1 ஆம் தேதி முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கடந்த 14 தினங்களில் காஞ்சிபுரம் பகுதியில் 304 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 308 மில்லி மீட்டர், உத்திரமேரூர் 433 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 204 மில்லி மீட்டர், செம்பரம்பாக்கம் பகுதியில் 380 மில்லி மீட்டரும், குன்றத்தூர் பகுதியில் 380 மில்லி மீட்டர் என மொத்தம் 2112 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று காஞ்சிபுரத்தில் 33.8 மில்லி மீட்டர், ஸ்ரீபெரும்புதூரில் 11.60 மில்லி மீட்டர் , உத்தரமேரூரில் 31 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 13 மில்லி மீட்டரும், குன்றத்தூரில் 15.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளிலும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் அவசரக் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கலந்து கொண்டார்.

கூட்டத்தின்போது, கடந்த பருவ மழை காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகள் குறித்தும் அடுத்து வரும் பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டு பகுதிகளிலும் பருவமழைக்கு முன்பே மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டதால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என்றும் சில குறிப்பிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது குறித்து மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தெரிவித்ததை மேயர் குறிப்பெடுத்துக் கொண்டார்.

குறிப்பாக, 25 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சந்துரு பேசும்போது, பருவ மழை காலங்களில் அனைத்து மாநகராட்சி ஊழியர்களும் சிறப்பாக பணியாற்றியதாகவும், குறிப்பாக ஆணையர் மற்றும் பொறியாளர்கள் பல்வேறு யோசனைகளை தெரிவித்து பொதுமக்களை பருவமழையில் இருந்து பாதுகாத்தனர் என்றும் அவர்களுக்கு மாமன்றம் சார்பாக வாழ்த்துகள் தெரிவிப்பதாகவும் கூறினார்.

மேலும், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு சாலைகள் நெடுஞ்சாலைத் துறை வசம் இருப்பதால் அவர்கள் பணி மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்துவதாகவும், இதனால், மக்கள் மத்தியில் மாநகராட்சியின் பெயர் கெடுவதற்கு நெடுஞ்சாலைத்துறை காரணம் என்றும் சந்துரு குற்றம் சாட்டினார்.

மாமன்ற உறுப்பினர் சுப்புராயன் பேசும்போது, கடந்த 15 ஆண்டுகளாக மேட்டுத் தெரு பகுதியில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்த நிலையில் தற்போது மேற்கொண்ட மழை கால்வாய் பணி காரணமாக வாகன ஓட்டிகளுக்கு எந்த சிரமமும் இல்லாமல் இருந்ததால் பொதுமக்கள் பெரிதும் வரவேற்றனர் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாமன்ற உறுப்பினர்கள் பலர் தங்கள் பகுதியில் புதிய கால்வாய் அமைக்கும் பணி, அங்கன்வாடி மையங்கள் மற்றும் கழிவறை குறித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இந்தக் கூட்டத்தில் துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகராட்சி பொறியாளர் கணேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Nov 2022 3:00 PM GMT

Related News