/* */

காஞ்சிபுரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்... இரவு நேரத்தில் அகற்றப்படுமா கழிவுகள்?

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் பகல் நேரத்தில் கழிவுகள் அகற்றப்பட்டு லாரிகளில் கொண்டுச் செல்லப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்... இரவு நேரத்தில் அகற்றப்படுமா கழிவுகள்?
X

மஞ்சள்நீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள்.

பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற வாக்கியம் நாம் அன்றாட வாழ்வில் அடிக்கடி கேட்கும் ஒன்றாக அமைந்துவிட்டதே தவிர அதை தவிர்க்க எந்தவித முயற்சியும் எடுப்பதில்லை என்பதே நிதர்சனம். நம்மைச் சுற்றி அமைந்துள்ள அனைத்து பொருட்களிலும் பிளாஸ்டிக் ஏதாவது ஒருவிதத்தில் கலந்து உள்ளது.

சிறிய பொருள் முதல் மிகப் பெரிய இயந்திரங்கள் வரை பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் பழக்கம் மனித அறிவியல் வளர்ச்சியில் மிகப்பெரிய இடத்தை பிடித்து விட்டது. இருந்த போதிலும் அதிகப்படியான பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டின் காரணமாக நமது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது இயல்பான ஒன்றானது. அதன் காரணமாக ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.

நெகிழி எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் நமது அன்றாட வாழ்வில் இடம்பெறக்கூடிய ஒரு பொருளாக அமைந்துவிட்டது. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் இந்த நெகிழிப் பைகள் ஆறுகள், குளங்கள் மற்றும் மண் வளங்களை அடைந்து அவற்றை மாசுபடுத்துகின்றன .

குப்பைகளாக சேரும் நெகிழிப் பைகள் மழை வரும் காலங்களில் மழை நீரை மண்ணுக்குள் அனுப்பாமல் தடுக்கிறது . ஆற்றில் கலக்கும் நெகிழிப் பைகள் அங்கு உள்ள மீன் வளத்தை குறைப்பதுடன் நன்னீர் மாசுபாட்டையும் அதிகரிக்கிறது என ஆய்வுகள் கூறுகிறது.

மேலும், குடியிருப்பு பகுதிகளை ஒட்டி உள்ள கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அனைத்து கால்வாய்களிலும் பொதுமக்கள் தங்கள் கழிவுகளை பிளாஸ்டிக் பையில் அடைத்தும், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் வீட்டு உபயோக கழிவுகள் அனைத்தையும் கால்வாய்களில் கொட்டப்படுவது வாடிக்கையாக ஒன்றாகி உள்ளது. இதனால், அந்த பிளாஸ்டிக் கழிவுகள் கால்வாய் மேல் தேங்கி நீர் செல்வதை தடுத்து சுகாதார சீர்கேட்டை விளைவிக்கிறது.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் நகரின் மையப் பகுதியில் செல்லும் மஞ்சள் நீர் கால்வாய் பல கிலோ மீட்டர் தொலைவக்கு அமைந்துள்ளது. அதில் வரும் கழிவு பொருட்கள் அனைத்தும் மிதந்து நீர் செல்லாத வண்ணம் அதனை தடுத்து நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வப்போது மாநகராட்சி நிர்வாகம் அதனை சுத்தம் செய்தாலும், மீண்டும்.. மீண்டும்.. அது போன்ற பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் கால்வாயில் வீசுவதால் எப்போதும் கால்வாய் இணைப்பு பகுதிகளில் அவை மலைபோல் குவிந்து காணப்படுகிறது.

இதனை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி கழிவு பொருட்களை லாரிகளில் ஏற்றிச் செல்லும் போது நகரில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனைத் தவிர்க்கும் வகையையில், மாநகராட்சி ஊழியர்கள் அதிகாலை நேரங்கள் அல்லது இரவு நேரங்களில் கழிவுப் பொருள்களை அகற்றும் பணியை மேற்கொள் வேண்டும் என்றும் அந்த சமயத்தில் காவல்துறை உதவியுடன் லாரிகள் செல்லும் பாதையை ஒருவழிப் பாதையாக பாதுகாப்பு உபகரணங்கள் தடுப்பு உபகரணங்கள் வைத்து செயல்பட்டால் போக்குவரத்து நெரிசலும் வெகுவாக குறையும் என போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளும், பொதுமக்களும் கருதுகின்றனர்.

காஞ்சிபுரத்தில் இன்று காலை இது போன்ற பணி மேற்கொண்ட போது ஏற்பட்ட சிறு சம்பவத்தால் குறைந்தது 20 நிமிடம் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு விழிப்புணர்வு அளித்த பிறகும் பிளாஸ்டிக் கழிவுகளை குடியிருப்பு வாசிகள் அருகில் உள்ள கால்வாயில் வீசுவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பிளாஸ்டிக் கழிவுகளால் மாநகராட்சிக்கு கூடுதல் பணி சுமையை ஏற்படுத்துவதும், அவற்றை அகற்றும் பணியை மேற்கொள்ளும் ஊழியர்களின் நிலையை கருத்திக் கொண்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 Nov 2022 4:15 AM GMT

Related News