/* */

ஊராட்சி மன்ற தலைவர் தாக்கப்பட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

காவந்தண்டலம் ஊராட்சி தலைவரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஊராட்சி மன்ற தலைவர் தாக்கப்பட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
X

ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவாருத்ரய்யா தலைமையில் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

இந்தக் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம் ,காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம்.காவாந்தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவராக ராதா விஜயகுமார் (வயது 35 ) என்பவர் உள்ளார். அவர் மக்கள் பணியாற்றி, எந்தவித அதிகார துஷ் பிரயோகமும் இன்றி பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இதே ஊராட்சி துணைத்தலைவராக இருப்பவர் சரஸ்வதி சீனிவாசன். இவர் பதவியேற்றதில் இருந்தே சரஸ்வதியை பணி செய்ய விடாமல் அவரது கணவர் சீனிவாசன் அனைத்து பணிகளிலும் இடையூறு செய்து வந்தார். நிர்வாக பணிகளில் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 5 மாத்திற்கு மேல் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடாக 50 முதல் 100 வேலைவாய்ப்பு கார்டுகள் மூலம் பணம் பெற்றுள்ளார். இதனை அறிந்து இது போன்ற செயல்களை செய்யாதே என்று ஊராட்சி மன்றத் தலைவர்பல முறை எச்சரித்தும், அந்த பணியில் பணிபுரியும் பணிதளப் பொறுப்பாளர்களை மிரட்டி முறைகேடாக நடந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 13.10.2022 அன்று காலை 10 மணியளவில் மேற்கண்ட ராதா ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது துணைத்தலைவர் சரஸ்வதியின் கணவர் சீனிவாசன் என்பவர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து நான் ஒவ்வொரு வாரமும் 100 கார்டுகள் வரை போலியாக போடுவேன், நீ இதைக் கேட்கக் கூடாது. மீறி கேட்டால் உன்னை ஒழித்து விடுவேன். நிர்வாக செயல்களில் நான் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேன். நான் சொல்லும் பணியாளர் தான் பணிதளப் பொறுப்பாளராக இருக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். ஊராட்சி மன்றத் தலைவர் இதை தட்டி கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் திட்டி பெண் தலைவர் என்றும் பாராமல் முகத்திலும் அடித்துள்ளார்.

இதில் ரத்தம் கொட்டியதில் நிலை குலைந்துள்ளார் அவரை அக்கம்பக்கத்தினர் வந்து தடுத்து ஊராட்சி மன்றத் தலைவரை மீட்டு, முகத்தில் இரத்த காயத்துடன் இருந்த ஊராட்சி மன்றத் தலைவி ராதாவை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து மாகரல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஐந்து நாட்கள் ஆகியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேற்படி தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்காமல் ஊராட்சி மன்றத் தலைவரை அவரது கணவர் மற்றும் மாமனார் ஆகியோரையும் மிரட்டும் விதமாக இருந்து வருகிறார்கள். எனவே, இது போன்ற மக்கள் பணியாற்றக் கூடிய ஊராட்சி மன்றத் தலைவரை தாக்கும் செயல் அதிலும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து தாக்கியது சட்ட விரோதமாகும்.

மேற்கண்ட ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி அலுவலகத்திலும் அரசு சார்பில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும் காவாந்தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவி ராதாசை தாக்கிய நபர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து நீதி வழங்குமாறு கிராம ஊராட்சி மன்றத் தலைவர் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Updated On: 17 Oct 2022 1:30 PM GMT

Related News