/* */

பொங்கல் கொண்டாடுவது எப்படி தொடங்கியது..? வரலாறு அறிவோமா..?

Pongal History in Tamil-வித விதமாக பொங்கல் வைத்து சாப்பிட்ட நாம் இன்று பொங்கல் வரலாறு மற்றும் எப்படி கொண்டாடுகிறோம் என்பதை பார்ப்போம்.

HIGHLIGHTS

Pongal History in Tamil
X

Pongal History in Tamil

Pongal History in Tamil

பொங்கல் பண்டிகை என்பது தமிழர் திருநாள், உழவர் திருநாள் என்றெல்லாம் கூறுவது வழக்கம். ஆனால் இந்த பொங்கல் பண்டிகை எப்படித்தொடங்கியது? அதன் வரலாறு என்ன என்று நாம் யோசித்திருக்கமாட்டோம். அதை இன்று தெரிந்துகொள்வோம்.

தைப்பொங்கல் வரலாறு

சங்ககாலத்தில் பொதுவாகவே மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செழித்தது. காரணம், சங்க காலத்தில் பருவ மழை தப்பாமல் பெய்தது. அதனால் கிணறு போன்றவைகள் அப்போது கிடையாது. அதனால், விவசாயம் செழிக்க நல்ல மழை பெய்து அறுவடை பெருகவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்து வந்தனர்.

மார்கழி மாதத்தில் தொடங்கும் அவர்களது விரதத்தை தை முதல் நாளில் முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் தேடிவிதைத்து உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வருவார்கள். அவர்களது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். அந்த விழாவே பொங்கல் விழாவாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது.

முதல் நாள் போகி

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று இது கொண்டாடப்படுகிறது. அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் போகி கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்களை அப்புறப் படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதன் உள்ளார்ந்த தத்துவமாகும்.

இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். இன்றும் கிராமங்களில் பொங்கல் மாதத்தில் வீடுகள் புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் அற்புதக் காட்சியாகும். பாளை பொருட்கள் கழிக்கப்படுவதுடன் விடாது துரத்தும் பழைய துயரங்களையும் அழிப்பதற்கான அடையாளமாகவே இதை "போக்கி' என்றனர். போக்கி அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்று சுருங்கிப்போனது.

அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசி நாள் என்பதால் நடந்து முடிந்த நல்ல நிகழ்வுகளுக்கு நன்றி கூறி அந்த ஆண்டை மகிழ்ச்சியாக அனுப்பி வைக்கும் நாளே போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு படைத்து நிவேதனம் செய்வது வழக்கம்.

ஒப்பாரிக்கு காரணம்

போகி தினத்தன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அப்படி ஒப்பாரி வைப்பதற்கான காரணம் பல ஆண்டுகளாக தெரியாமல் இருந்த நிலையில் வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்ததில் அந்த தினம், புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர். அதனால், புத்தரின் இறப்புக்காக ஒப்பாரி நிகழ்வு சில இடங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

2ம் நாள் தைப்பொங்கல்

தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே பொங்கல் கொண்டாட்டத்தின் அடையாளமாக கொண்டாட்டங்கள் கிராமங்களில் தொடங்கிவிடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை சேகரிப்பதில் முனைப்பு காட்டுவர். பொதுவாக புதுப்பானையில் பொங்கல் வைப்பதே வழக்கம். அதனால், புதுப்பானை, கரும்பு, வெல்லம் என போன்களுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவதும் உண்டு.

பொங்கல் தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து முடிப்பார்கள். அதிகாலை முதலே வீட்டுப்பெண்கள் மற்றும் இளம் பெண்குழந்தைகள் ஆர்வத்துடன் வீட்டு வாசலில் கோலம் போட்டு அதன் நடுவில் புதுப்பானை வைப்பர்கள். புதுப்பானையில் புது அரிசியிட்டு வாசலில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர்.

வீட்டு வாசலில் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி சூரியனை வணங்கி பொங்கல் வைப்பார்கள். இந்துத் தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பது வழக்கம். வாசலில் வைத்து பொங்கல் வைப்பதால் இதை வாசப்பொங்கல் என்றும் கிராமத்தில் கூறுவது வழக்கம். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்.. பொங்கலோ பொங்கல்.." என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை சூரியனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே அவர்கள் உண்பார்கள். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு இருந்து வருகிறது.

3ம் நாள் மாட்டுப் பொங்கல்

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகளை சீவி வர்ணம் பூசுவார்கள். கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்து தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல சுத்தம் செய்து பூஜைக்கு தயார் அவர்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர் போன்ற தானியங்களை வைத்து, தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

இந்த நாளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறும். ஏறுதழுவுதல் என்று அழைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு இன்றளவும் நடந்து வருகிறது.

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் பசு மற்றும் மாடுகளுக்கு நன்றி கூறும் நாளே மாட்டுப் பொங்கலாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல்.. மாட்டுப் பொங்கல்.. பட்டி பெருக.. பால் பானை பொங்க.. நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பது வழக்கமாக உள்ளது.

4ம் நாள் காணும் பொங்கல்

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் நடக்கும் விழாவாகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பார்கள். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோரிடம் ஆசி பெறுதல் என்பன இதில் அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் என்று பல வீர சாகசப் போட்டிகளும் இன்றைய தினம் நடத்தபப்டும்.

காணும் பொங்கல் பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து வாழ்ந்து அனுபவித்த வயதான தீர்க்க சுமங்கலிகள் ஐந்து பேரின் கையில் கொடுத்து ஆசி பெறுவார்கள். பின்னர் அந்த மஞ்சளை கல்லில் உரசி பாதம் மற்றும் முகத்தில் பூசிக்கொள்வார்கள். இதன் மூலமாக அவர்களும் சுமங்கலிகளாக மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 March 2024 5:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  3. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  4. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  5. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  6. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  7. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  10. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!