/* */

அஜினோமோட்டோ ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்.. தெரிந்து கொள்ளுங்கள்...

உணவில் ஒரு நாளைக்கு அஜினோமோட்டோ எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம் என்ற விவரம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

அஜினோமோட்டோ ஒரு நாளைக்கு எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்.. தெரிந்து கொள்ளுங்கள்...
X

அஜினோமோட்டோ என்ற மோனோசோடியம் குளுட்டமேட். (மாதிரி படம்).

அஜினோமோட்டோ என்ற மோனோசோடியம் குளுட்டமேட் என்ற உணவு சேர்க்கை இன்றை உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இருப்பினும், அதை ஒருநாளைக்கு எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம், அதில் ஏதேனும் பாதிப்புகள் உள்ளனவா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார். அந்த விவரங்கள் வருமாறு:

நூறு கிராம் அஜினோமோட்டோ என்ற மோனோசோடியம் குளுட்டமேட்டில் 282 Kcal, சோடியம் 12300 மிகி (12.3 கிராம்), கால்சியம் 21.2 கிராம் உள்ளது. கார்போஹைட்ரேட் கண்டறியும் அளவில் இல்லை. ஒரு கிராம் அஜினோமோட்டோ என்ற மோனோசோடியம் குளுட்டமேட் சாப்பிட்டால், சோடியத்தின் நமது தினசரி தேவையில் 5 சதவீதத்தைப் பூர்த்தி செய்ததாக இருக்கும்.


சர்வதேச உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு அஜினோமோட்டோ என்ற மோனோசோடியம் குளுட்டமேட்டின் பாதுகாப்பான அளவாக அதிகபட்சமாக 120 மிகி/கிகி உடல் எடை என்று நிர்ணயித்து உள்ளது. இங்கிலாந்தின் எப்.டி.ஏ (Food and Drug Administration) துறையானது, அஜினோமோட்டோ என்ற மோனோசோடியம் குளுட்டமேட்டின் பாதுகாப்பான அளவாக அதிகபட்சமாக 30 மிகி/ கிகி உடல் எடை என்று நிர்ணயித்து உள்ளது.

சில ஆராய்ச்சிகளில், அஜினோமோட்டோ என்ற மோனோசோடியம் குளுட்டமேட் குடல் பகுதியில் நன்மை தரும் பாக்டீரியாக்களை (probiotics) அதிகரித்து, குடல் நலனை காப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அஜினோமோட்டோ என்ற மோனோசோடியம் குளுட்டமேட் ஹீமோகுளோபினை அதிகரிக்கவும் செய்வதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.

சோதனைச் சாலை எலிகளிடத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சி:

100 மிகி/கிகி என்ற அளவில் NaCl-ஐ ஒரு எலி குழுவிற்கும் (Control Group), 30 மிகி/கிகி (Low), 300 மிகி/கிகி (Moderate), 1500 மிகி/கிகி (High) என்ற அளவில் அஜினோமோட்டோ என்ற மோனோசோடியம் குளுட்டமேட்டை மற்ற மூன்று வகை எலி குழுவிற்கும் வாய் வழியாக செலுத்தி ஆய்வு செய்யப்பட்டது. வாய்வழியாக செலுத்தப்பட்டவுடன், அஜினோமோட்டோ என்ற மோனோசோடியம் குளுட்டமேட் ஆனது, குளுட்டமிக் அமிலமாகவும், சோடியமாகவும் பிரிந்துவிடும்.

300 மிகி/கிகி (Moderate) என்ற அளவு வரை அஜினோமோட்டோ என்ற மோனோசோடியம் குளுட்டமேட் எடுத்துக் கொண்டாலும், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான அபாயத்தினை அதிகரிக்கவில்லை. 1500 மிகி/கிகி (High) என்ற அதிகபட்ச அளவில் அஜினோமோட்டோ என்ற மோனோசோடியம் குளுட்டமேட் எடுத்துக்கொண்டால், நரம்புக் கோளாறு, சிறுநீரக பிரச்சினை, இனப்பெருக்க பிரச்சினை ஆகியவை ஏற்படுகின்றது.


பல்வேறு ஆய்வுகள், 300 மிகி/கிகி உடல் எடை வரை அஜினோமோட்டோ என்ற மோனோசோடியம் குளுட்டமேட் எடுத்துக்கொண்டாலும் பாதிப்பில்லை என்பதை உறுதி செய்துள்ளது. குளுட்டமிக் அமிலம் நிறைந்த பால், இறைச்சி, காய்கறிகள் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களையும் மற்றும் அவற்றுடன் சோடியம் நிறைந்த உப்பினையும், நாம் நமது உணவில் தினமும் எடுத்து வருகின்றோம்.

எனவே, தாவர மூலக்கூறுகளில் இருந்து அஜினோமோட்டோ என்ற மோனோசோடியம் குளுட்டமேட் தயாரிக்கப்பட்டு இருந்தாலும், 300 மிகி/கிகி வரை தினமும் எடுத்துக் கொண்ட பின்னரும், பெரிய அளவில் உடல் நலப் பிரச்சினைகள் இல்லை என்று அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுகள் கூறுகிறது. இருந்தாலும், மனிதர்களின் உடல் நலத்தில் மிதமான அளவில் எடுத்துக் கொள்ளப்படும் அஜினோமோட்டோ என்ற மோனோசோடியம் குளுட்டமேட் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதற்கு ஸ்திரமான ஆதாரம் இல்லை.

அதனால், அதிகபட்ச அளவாக, தினசரி ஒரு கிலோ உடல் எடைக்கு 30 மிகி அதாவது, 60 கிலோ எடை உள்ள மனிதன் ஒரு நாளைக்கு 1800 மிகி (1.8 கிராம்) வரை அஜினோமோட்டோ என்ற மோனோசோடியம் குளுட்டமேட்டை தனது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு மேல் வேண்டாம். ஏனெனில், போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Updated On: 3 March 2023 4:48 AM GMT

Related News