/* */

கிரண் மஜும்தார் இந்தியாவின் உயிரி மருந்துத் துறையின் முன்னோடி

கிரண் மஜும்தார் வெற்றிகரமான இந்திய தொழிலதிபராக பலர் அறிந்திருந்தாலும், அவர் ஒரு எளிய பின்னணியில் இருந்து கோடீஸ்வரராக மாறியது பற்றி பலருக்கும் தெரியாது

HIGHLIGHTS

கிரண் மஜும்தார் இந்தியாவின் உயிரி மருந்துத் துறையின் முன்னோடி
X

கிரண் மஜும்தார் 

70 வயதான கிரண் மிகப்பெரிய வெற்றிகரமான தொழிலதிபராக இருந்த போதிலும் கிரண் மஜும்தார் ஷாவின் வாழ்க்கையை பற்றி பலருக்கும் தெரிய வில்லை. கிரண் மஜும்தார்-ஷா பயோ கான் லிமிடெட் என்ற பயோ கெமிக்கல் நிறுவனத்தை நிறுவியவர் என்பது மட்டுமே பலருக்கும் தெரியும். தற்போது அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.34700 கோடிக்கு மேல் உள்ளது.

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான தொழிலதிபர்களில் ஒருவரான கிரண் மஜும்தார்-ஷா, அதிகம் அறியப்படாத உயிரி மருந்துத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அசைக்க முடியாத உறுதி, புதுமை சிந்தனை, சமூகத்தின் மீதான தீராத அக்கறை ஆகியவை அவரது மிகப்பெரிய பலங்களாகும். இந்த குணங்களே இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் மற்றும் சிறந்த பெண் தொழிலதிபர்களில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியுள்ளது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

கிரண் மஜும்தார் 1953 ஆம் ஆண்டு, பெங்களூரில் குஜராத்தி பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார். ஆர்வமுள்ள மாணவியான அவர், நகரத்தின் மதிப்புமிக்க பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர், பெங்களூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் உயிரியல் மற்றும் விலங்கியலை முக்கிய பாடங்களாக தேர்வு செய்தார். மருத்துவத் துறையில் அடி எடுத்து வைக்க விருப்பமிருந்தபோதும், நிதி பற்றாக்குறையினால் மருத்துவப் படிப்பினை அவரால் தொடர முடியவில்லை. இருப்பினும், பயோடெக்னாலஜி துறை மீதான அவரது ஆர்வம், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் ப்ரூவிங் மற்றும் மாலட்டிங் பாடங்களைத் தொடர அவரை வழிநடத்தியது.

தொழில் முனைவோர் பயணத்தின் ஆரம்பம்

தனது படிப்பை முடித்த கிரண் மஜும்தார்-ஷா, இந்தியா திரும்பி, புகழ்பெற்ற ப்ரூவரிகளில் ஒரு பயிற்சியாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த பயிற்சி காலத்தில்தான் அவர் ஆச்சின்லோஸ் என்ற ஐரிஷ் தொழிலதிபரை சந்தித்தார். இந்த சந்திப்பு அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கிரண் மஜும்தார்-ஷாவின் அறிவு, உத்வேகம் மற்றும் லட்சியத்தால் ஈர்க்கப்பட்ட ஆச்சின்லோஸ், 1978 இல் தொடங்கப்பட்ட பயோகான் இந்தியாவில் இணைந்து புதிய முயற்சியைக் கையில் எடுக்க முடிவு செய்தார். நிறுவனத்தில் கூட்டாளராக இணைந்து கொண்ட கிரண், பயோகானின் தொடக்ககால வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தார்.

சவால்களுக்கு மத்தியில் தொடர் வளர்ச்சி

தொழில்முனைவோர் பயணத்தின் ஆரம்ப கட்டங்களில் கிரண் மஜும்தார்-ஷா பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். உயிரி மருந்துத் துறை, குறிப்பாக இந்திய சூழலில் என்பது, அப்போது ஓர் அறியப்படாத களமாகவே இருந்தது. மேலும், ஒரு பெண் நிறுவனத்தை வழிநடத்துவது என்பது அந்தக் காலகட்டத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படாததாக இருந்தது. கிரண் தனது வங்கியாளர்களிடமிருந்தும், சாத்தியமான முதலீட்டாளர்களிடமிருந்தும் நிராகரிப்புகளையே பெரும்பாலும் சந்தித்தார். அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, போதிய நிதி ஆதரங்கள் இல்லாதது மற்றும் பாலினப் பாகுபாடு என அவர் சந்தித்த தடைகளின் பட்டியல் நீளமானது.

இருப்பினும், இந்த சவால்கள் அவரது உறுதியைக் கரைத்து விடவில்லை. பயோகான் நிறுவனத்தை உயிரி மருந்துத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வெற்றிகரமாக நிலைநிறுத்தினார். அவரது நம்பிக்கைக்கு ஏற்றவாறு, மலிவு விலையில் சிகிச்சை அளிப்பதற்கு மையமாக கொண்டு பயோகான் செயல்பட ஆரம்பித்தது. நீரிழிவு, புற்றுநோய் மற்றும் தன்னுடல் தாக்க நோய்கள் போன்ற கடுமையான நோய்களுக்கான மருந்துகளை நிறுவனம் உருவாக்கியது. இன்சுலின் மருந்துகளை சந்தைக்குள் கொண்டு வரும் புதுமையான சாதனங்களையும் நிறுவனம் வடிவமைத்தது.

பயோகானின் வெற்றிப்பயணம்

கிரண் மஜும்தார்-ஷா 1978 இல் பயோகான் நிறுவனத்தைத் தொடங் கினார். அவர் ஒரு சிறிய கேரேஜில், மொத்தமே, வெறும் 10,000 ரூபாய் முதலீட்டில் பயோகான் நிறுவனத்தைத் தொடங்கினார்.

பப்பாளியில் இருந்து பாப்பைன் என்ற நொதியைப் பிரித்தெடுப்பதன் மூலம் பயோகான் தனது வணிகத்தைத் தொடங்கியது. இறைச்சியை எளிதாக வேக வைப்பதற்கு பாப்பைன் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் பீர் தெளிவுபடுத்தலுக்குப் பயன்படுத்தப்படும் ஐசிங்க்ளாஸ் நொதியை பிரித்தெடுக்கும் தொழிலிலும் இறங்கியது இவர் நிறுவனம்.

கிரண் மஜும்தார் ஷா ஒரே வருடத்துக்குள் வெற்றியடைந்தார். பயோகான் இந்த நொதிகளை அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு வெற்றி கரமாக ஏற்றுமதி செய்த முதல் நிறுவன மாக ஆனது. தற்போது, பயோகான் சந்தை மதிப்பு ரூ.34700 கோடி ஆகும். கிரண் மஜும்தார்-ஷாவின் சொந்த நிகர மதிப்பு ரூ.23247 கோடி என ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

கிரண் மஜும்தார்-ஷாவின் விடாமுயற்சி மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் மனப்பான்மை, மிகக் குறுகிய காலத்தில் இந்திய உயிர் மருத்துவத் துறையில் பயோகானை முன்னணி நிறுவனமாக ஆக்கியது. இன்று, பயோகான் யுனைடெட் ஸ்டேட்ஸ் உட்பட உலகம் முழுவதும் சந்தை வாய்ப்புகளை கொண்டுள்ளது. புதுமையான ஆராய்ச்சி மற்றும் உயர் தரமான மருந்துகளை மலிவாக வழங்கும் நிறுவனம் என்ற நற்பெயரை சம்பாதித்துள்ளது. இந்நிறுவனத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் பெரிய அளவிலான பணியாளர் குழுவும் பயோகானின் வெற்றிக்கு அடித்தளமாக உள்ளது.

அசைக்க முடியாத சமூக அக்கறை

அசாதாரணமான தொழிலதிபராக மட்டுமல்லாமல், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தன்னலமற்ற பங்களிப்புகளை வழங்கியுள்ளார். மலிவான சுகாதார சேவைகளின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இவர், மருந்துகள் அனைத்து இந்திய குடிமக்களையும் சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறார். மருந்துகளின் விலை உயர்வை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதுதவிர, புற்றுநோய்க்கான மலிவு விலையில் சிகிச்சை மையத்தை நடத்தும் 'மஜும்தார் ஷா மெடிக்கல் சென்டர்' எனும் மருத்துவமனையையும் இவர் தொடங்கியுள்ளார்.

அசைக்க முடியாத அங்கீகாரங்கள்

கிரண் மஜும்தார்-ஷாவின் அளப்பரிய பங்களிப்புகள் பலதரப்பட்ட பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத் தந்துள்ளன. உயிரி தொழில்நுட்பத் துறைக்கான அவரது சேவைகளுக்காக, பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷண் போன்ற இந்திய அரசின் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். 'ஃபார்ச்சூன்' மற்றும் 'ஃபோர்ப்ஸ்' உள்ளிட்ட முக்கியமான சர்வதேச இதழ்கள் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக அவரை அங்கீகரித்துள்ளன. டைம் பத்திரிகையின் உலகின் 100 செல்வாக்கு மிக்க நபர்கள் பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.

Updated On: 24 Feb 2024 11:00 AM GMT

Related News