/* */

பழனியில் இருந்து, கொடைக்கானல் செல்ல 'ஒன்லி 30 மினிட்ஸ்' - ரோப்காரில் 'பறக்கலாம்'

Palani Rope Car -கொடைக்கானலில் இருந்து பழனிக்கு இனி 30 நிமிடத்தில் ரோப்காரில் பயணிக்கலாம். அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியது.

HIGHLIGHTS

பழனியில் இருந்து, கொடைக்கானல் செல்ல ஒன்லி 30 மினிட்ஸ் -  ரோப்காரில் பறக்கலாம்
X

பழனியில் மலைக்கோவிலுக்கு செல்ல, ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதே போல், பழனியில் இருந்து, கொடைக்கானலுக்கு ரோப் கார் திட்டம் விரைவில் துவங்கப்படுகிறது.

Palani Rope Car -உலகம் முழுவதும் தற்போது ரோப்கார் போக்குவரத்து பிரபலமடைந்து வருகிறது. எளிய பயணம், வாகன புகையில்லாத, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் ஒலி மாசு, ஒளி மாசு, புகை மாசு இல்லாத பயணம். தவிர, பயணிக்க வேண்டிய இடத்திற்கு எளிதில் செல்லும் வசதி, பெரும்பாலும் உயர்ந்த மலைக்குன்றுகளுக்கு இடையே அமைக்கப்படுவதால், வனநிலங்களை அழித்து ரோடு போட வேண்டிய அவசியம் இல்லை. வனவிலங்குகளுக்கு எந்த தொல்லையும் ஏற்படாது. ரோப்காரில் பயணிக்கும் போது, வனத்திற்கு மேலே பயணிப்பதால், வனவிலங்குகளையும், ஆறுகள், ஏரிகள், ஓடைகள், அருவிகள், அடர்ந்த வனங்கள் என இயற்கை சூழலை ரசித்துக் கொண்டே பயணிக்கலாம். மிகவும் பாதுகாப்பான பயணம். குறுகிய நேர பயணம் என பல்வேறு பயன்கள், ரோப்கார் பயணத்தில் இருப்பதால், இன்று ஒட்டுமொத்த உலகமும் ரோப்கார் பயணத்தை கொண்டாடுகிறது.

இந்தியாவில், இந்த நிதி ஆண்டில் மத்திய அரசு நாடு முழுவதும் 18 இடங்களில் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 90 கி.மீ., துாரம் ரோப்கார் கேபிள்கள் அமைக்கப்படுகின்றன. இதில் கொடைக்கானல்- பழனி இடையேயான ரோப்கார் திட்டம் தான் மிகவும் நீளமானது.

கொடைக்கானல்- பழனி இடையே ரோப்கார் கேபிள்கள் நேராக செல்வதால், 12 கி.மீ., துாரத்தில் கொடைக்கானலில் இருந்து பழனியை அடைந்து விடலாம். ரோப்கார் கேபிள்கள் நிலத்தில் இருந்து 20 மீட்டர் உயரத்தில் வனத்திற்கு மேலே செல்கின்றன. 12 கி.மீ., துாரத்தை, 30 நிமிடத்தில் கடந்து விடும். ஒரு மணி நேரத்தில் 8 ஆயிரம் பேர், கொடைக்கானலில் இருந்து பழனிக்கு செல்ல முடியும். இதே எண்ணிக்கையில் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்ல முடியும். ஆக பகலில் மட்டும் 80 ஆயிரம் பேர் கொடைக்கானலில் இருந்து பழனிக்கும், 80 ஆயிரம் பேர் பழனியில் இருந்து கொடைக்கானலுக்கும் பயணிக்க முடியும். (படிப்படியாக இந்த திட்டம் விரிவாக்கப்பட்டு அதிக பயணிகள் செல்ல வழிவகை செய்யப்பட உள்ளது). இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு 500 கோடி ரூபாய். ஆஸ்திரியா நாட்டு கம்பெனி இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. ரோப்கார் ஸ்டேஷன் கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகிலும், பழனியில் தேக்கன் தோட்டத்திலும் அமைகிறது. இந்த வழித்தடத்தில் செல்லும் போது அடர்ந்த வனங்களையும், வரதமா நதியினையும் கடந்து செல்ல முடியும். வனவிலங்குகளை ரசிக்கலாம்.

இந்த திட்டப்பணிகள் குறித்த ஆய்வு முழுமையாக நிறைவடைந்து விட்ட நிலையில் பணிகளை தொடங்கிய நாளில் இருந்து, 18 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரிய நாட்டு கம்பெனி இதற்கான முழுமையான ஆய்வு பணிகளை முடித்து மத்திய அரசிடம் அறிக்கை கொடுத்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து, சிக்னல் கிடைத்ததும் இந்த பணிகள் தொடங்கும்.

தற்போது கொடைக்கானலில் இருந்து பழனிக்கு செல்ல வேண்டுமானால், கொடைக்கானலில் இருந்து காட்டு ரோடு வழியாக வந்து வத்தலக்குண்டு, செம்பட்டி, ஒட்டன்சத்திரம் வழியாக பழனி செல்ல வேண்டும். இந்த வழித்தடத்தில் பயணித்தால் குறைந்தபட்சம் 4 மணி நேரத்திற்கு மேல் ஆகும். 96 கி.மீ., துாரத்திற்கும் அதிகமாக சுற்ற வேண்டும். கொடைக்கானலில் இருந்து ஆபத்தான மலைப்பாதை வழியாகவும் பழனிக்கு செல்லலாம். இந்த வழித்தடம் 64 கி.மீ., துாரம் கொண்டது. இந்த பாதையில் 12 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த வழித்தடத்தில் 3 மணி நேரம் பயணிக்க வேண்டும்.

இந்நிலையில் இந்த ரோப்கார் திட்டம் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள ஒரு திட்டமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை கொடைக்கானல்- பழனி மக்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழகமும் வரவேற்றுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 Nov 2022 6:00 AM GMT

Related News