/* */

கோடை சாகுபடிக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

வைகை அணையில் இருந்து கோடைகால சாகுபடிக்கு நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

HIGHLIGHTS

கோடை சாகுபடிக்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
X

வைகை அணை பைல் படம்.

ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் தலைவர் எஸ்.ராஜசேகர், ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: வைகை அணையில் முழு கொள்ளளவான 71 அடியை எட்டுவதற்கு இன்னும் ஒரு அடியே பாக்கியுள்ளது. தேனி- மதுரை தேசிய நெடுஞ்சாலை குறுக்கிடும் குன்னூர் ஆற்றுப் பாலம் வரை தண்ணீர், யாருக்கும் பலனின்றி, பல மாதங்களாக நின்று கொண்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் உட்புறங்களில் கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால், பெரியாறு அணைக்கு மட்டுமின்றி, மூல வைகையில் இருந்தும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடும் வெப்பத்தில் சிக்கித்தவித்த வருசநாட்டு தென்னை மரங்களுக்கு, கடந்த ஆண்டு தொடர்ச்சியாக பெய்த மழை , ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.

கம்பம் பள்ளத்தாக்கு பாசனமும் நிறைவோடு நடந்தேறியது. பதினெட்டாம் கால்வாயும், 58 ம் கால்வாயும் கூட ஓரளவு தாக்குப்பிடித்தது. திருமங்கலம் கால்வாய்க்கு சொல்லவே வேண்டியதில்லை... வழக்கம்போல் கூடுதல் தண்ணீர் வழங்கப்பட்டது. பேரணையிலிருந்து குறிச்சிப்பட்டி வரை, ஒரு போக பாசனம் ஓரளவு தாக்குப்பிடித்த நிலையில், நிலத்தடி நீர்மட்டமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே எகிறியது. குறிச்சி பட்டியில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு செல்லும் கட்டாணிப்பட்டி 1 மற்றும் 2, லெஸிஸ் மற்றும் ஷீல்டு உள்ளிட்ட ஐந்து கால்வாய்களில் ஓரளவு நீர் திறந்து விடப்பட்டாலும், 100 விழுக்காடு தண்ணீர் கடைமடை வரை சென்றடையும் முன் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

தண்ணீர் இருப்பை காரணம் காட்டி மறவமங்கலம் நீட்டிப்பு கால்வாய், சிலந்தகுடி வரை செல்லும் மாணிக்கம் கால்வாய், சிங்கம்புணரி கால்வாய் உள்ளிட்ட ஏழு கால்வாய்களுக்கும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நினைத்திருந்தால் இரண்டு மாதங்களுக்கு தண்ணீரை வழங்கியிருக்க முடியும். பிரதான கால்வாய்களே தண்ணீருக்காக காத்துக்கிடக்க, நீட்டிப்பு கால்வாய்களில் தண்ணீரே விடவில்லை என்பது வேதனையானது. பெரியாறு பிரதான கால்வாய் களில் வரும் சிவகங்கை மாவட்ட கிராமங்கள் ஓரளவு செழிப்புடனும், நீட்டிப்பு கால்வாய்கள் அமைந்திருக்கும் கிராமங்கள் காய்ந்து கிடப்பதும் ஏற்புடைய ஒன்று அல்ல.

வைகை அணையில் போதுமான நீர் இருப்பு இல்லை என்றால் நாம் இந்தக் கோரிக்கையை முன் வைக்க போவதில்லை என்பதை முதல்வர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். தென்மேற்கு பருவமழைக்கான கூறுகள் இப்போதே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இந்த ஆண்டு நல்ல மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையமும் அறிவித்திருக்கிறது. அணையின் மொத்த நீர் மட்டத்தில் 30 அடி சேரும் சகதியுமாக கழிந்தால் கூட, தற்போதைய நிலவரப்படி 40 அடிக்கும் கூடுதலாகவே நீர் இருப்பு இருக்கிறது. இதோடு பெரியாறு பிரதான கால்வாய்களில் விடுபட்ட கிராமங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கும், கீழப்பூங்குடி,பிரவலூர், ஒக்கூர் புதூர் உள்ளிட்ட 11 கிராமங்களை, பிரதான பெரியாறு ஆயக்கட்டில் சேர்க்க வேண்டும் என்று கடந்த நான்கைந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக, ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் வாயிலாக கோரிக்கை வைத்து வருகிறோம். போர்க்கால அடிப்படையில் இதுவும் நிறைவேற்றப்படவேண்டும். ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை கோடைகால பாசனத்திற்கு வைகை அணையில் இருக்கும் நீரை திறந்து விடுவதற்கு தாங்கள் ஆவன செய்ய வேண்டுமாய் வேண்டுகிறோம். அணையில் இருக்கும் நீர் அடிக்கும் வெயிலில் ஆவியாவதை விட, கோடைகால பாசனத்திற்கு திறந்து விட்டால், விவசாயமும் செழிக்கும், விவசாயியும் மகிழ்ச்சியுறுவான். இவ்வாறு கூறியுள்ளனர்.

Updated On: 21 March 2022 3:02 AM GMT

Related News