/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த தொடர் திருட்டுகளால் மக்கள் அச்சம்

பெரம்பலூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த தொடர் திருட்டு சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த  தொடர் திருட்டுகளால் மக்கள் அச்சம்
X

கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள இரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் விவசாயி. இவரது மகன் சதீஷ்குமார்(35). இவர் நேற்று ஆயுத பூஜையை முன்னிட்டு அதே ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றார். மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 11 சவரன் தங்க நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் நகர பகுதியான துறைமங்கலம் 3 ரோடு அருகே மளிகை கடை நடத்தி வரும் வைத்தியலிங்கம் என்பவரது, பூட்டியிருந்த மளிகை கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையினுள் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கப்பணமும், பால், சாக்லேட், உள்ளிட்ட ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மளிகைப் பொருட்களையும் திருடிச் சென்றனர்.

4 ரோடு அவ்வையார் தெரு மணிகண்டன் என்பவரது மளிகை கடையை உடைத்து உள்ளே சென்றவர்கள் கடையின் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர். இருப்பினும் இவரது கடையில் வேலை செய்து வரும் ஊழியர் ராஜு என்பவர் கடையின் உள்ளே படுத்து உறங்கி உள்ளார்.

நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் ராஜூ பாக்கெட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர். இந்த மூன்று சம்பவங்கள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவங்களினால் வணிகர்கள், பொதுமக்கள் மற்றும் பெண்கள் அச்சத்தில் உள்ளனர்.

பொது மக்களுக்கு போதிய பாதுகாப்பு வேண்டும் என்றும் அனுமதியின்றி விற்கப்படும் கஞ்சா மது உள்ளிட்ட போதைப் பொருட்களை தடை செய்து திருடர்களை கண்டுபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 15 Oct 2021 2:02 PM GMT

Related News