/* */

RTPCR சோதனை, தடுப்பூசி. விரிவுபடுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்நடவடிக்கை

RTPCR சோதனை,  தடுப்பூசி. விரிவுபடுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்நடவடிக்கை
X

அரியலூர் மாவட்டம் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.தரேஸ் அஹமது, நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை பொதுமக்கள் அணுக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னா, தலைமை தாங்கினார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.தரேஸ் அஹமது கலந்துகொண்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுமேற்கொண்டு ஆலோசனைகளை கூறினார்.

இக்கூட்டத்தில், அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்தும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மருத்துவ வசதிகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.தரேஸ் அஹமது பேசியபோது,

வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம், அண்டை மற்றம் இதர வெளிமாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கொண்டு, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் 30.04.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் நிகழ்ச்சிகள், விழாக்கள், கூட்டங்கள் போன்ற காரணங்களினாலும் மற்றும் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதைத் தவிர்ப்பதாலும், பணியிடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் முறையாக பின்பற்றத் தவறுவதாலும் சமீப காலத்தில் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதை காணமுடிகிறது.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் RTPCR சோதனைகளை அதிகப்படுத்தியும், தடுப்பூசி போடுவதை மேலும் விரிவுபடுத்தவும் மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறியும் வகையில் RTPCR சோதனைகளை அதிகப்படுத்தவும், கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிபடுத்தப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் தேவையான வசதிகளை ஏற்படுத்தவும், மேலும் கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் தொடர்புடைய நபர்களுக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் முககவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு மேற்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, நோய்த் தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். இதனை கடைப்பிடித்து. கோவிட் நோய்த் தொற்று பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், கோட்டாட்சியர்கள் ஏழுமலை (அரியலூர்), அமர்நாத் (உடையார்பாளையம்), இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) திருமால், துணை இயக்குநர் (சுகதாரப்பணிகள்) வீ.சி.ஹேமசந்த்காந்தி மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 10 April 2021 3:08 AM GMT

Related News