/* */

மத்திய பிரதேசத்தில் பழங்குடி தொழிலாளி மீது சிறுநீர் கழித்தவர் கைது..!

சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவின் தந்தையான ரமாகாந்த் சுக்லா, தனது மகன் பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லாவின் பிரதிநிதி என்று கூறியதாக கூறப்படுகிறது.

HIGHLIGHTS

மத்திய பிரதேசத்தில் பழங்குடி தொழிலாளி மீது சிறுநீர் கழித்தவர் கைது..!
X

சிறுநீர் கழிக்கும் வீடியோ காட்சி.

மத்திய பிரதேசத்தில் குடிபோதையில் ஒருவர் பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழித்து அவமானப்படுத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீர் கழித்தவர் பா.ஜ.க எம்.எல்.ஏ -வின் உதவியாளர் என்று கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினரின் மீது சிறுநீர் கழிக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு பழங்குடியினத்தைச் சேர்ந்தவரின் மீது சிறுநீர்கழித்தவர் பிரவேஷ் சுக்லா, என்பது தெரியவந்தஉள்ளது. அவருக்கு எதிராக சமூக வலை தளங்களில் கருத்துகள் பரவி ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது அவருக்கு எதிராக கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை (என்எஸ்ஏ) செயல்படுத்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டதை அடுத்து, நேற்று இரவு (4ம் தேதி) கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், பிரவேஷ் சுக்லாவின் தந்தை ரமாகாந்த் சுக்லா, தனது மகன் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏ கேதார்நாத் சுக்லாவின் உதவியாளர் என்று கூறியதாக கூறப்படுகிறது.

"அவர் பாஜக எம்.எல்.ஏ-வின் பிரதிநிதி, அதனால்தான் அவர் எதிர்க்கட்சிகளால் குறிவைக்கப்படுகிறார். இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடைபெற்று, நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்," என்று ராமகாந்த் கூறியதாக இந்தியா டுடே பத்திரிகை தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் கேதார்நாத் சுக்லாவின் கூட்டாளி என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் குற்றம் சாட்டி ஆளும் கட்சியின் நற்பெயரை கெடுக்கப்பார்க்கிறது என்று கூறி இந்த குற்றச்சாட்டை ஆளும் கட்சி மறுத்துள்ளது.

“பழங்குடியினரைக் கொடுமைபடுத்துவதில் மத்தியப் பிரதேசம் ஏற்கனவே முதலிடத்தில் உள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேசம் முழுவதையும் அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.பிரவேஷ் சுக்லா பாஜகவுடன் தொடர்புடையவர் ” என்று காங்கிரஸ் எம்.பி கமல்நாத் குற்றம் சாட்டினார்.

எனினும் சுக்லா குற்றச்சாட்டை நிராகரித்தார். “பிரவேஷ் என்னுடைய உதவியாளராக இருந்ததில்லை. எனக்கு அவரைத் தெரியும். அவ்வளவுதான்.'' என்றார்.

சிறுநீர் கழித்தவர் (வட்டத்திற்குள் இருப்பவர்)

பிரவேஷ், குடிபோதையில் பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழிப்பதாக வீடியோ காட்சி காட்டுகிறது. அவர் சிகரெட் புகைப்பதையம் காண முடிந்தது. இந்த சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்தது. ஆனால் போலீசார் நேற்று மாலை (4ம் தேதி) தான் வீடியோவைக் கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் சித்தி மாவட்டத்தின் குபாரி சந்தையில் நடந்துள்ளது.

“சித்தி மாவட்டத்தில் இருந்து ஒரு வைரல் வீடியோ என் கவனத்திற்கு வந்துள்ளது. உடனே குற்றவாளியை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவும், தேசிய பாதுகாப்பது சட்டத்தை பயன்படுத்தவும் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று முதலமைச்சர் சவுகான் ட்வீட் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை உறுதிப்படுத்திய சித்தி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர வர்மா, “அவர் மீது (சுக்லா) SC/ST சட்டப் பிரிவு 294 (ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல்), 504 (அமைதியை கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்) மற்றும் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டுவிட்டார்." என்று கூறியுள்ளார்.

Updated On: 5 July 2023 5:13 AM GMT

Related News