/* */

சென்னை ஐஐடி.,யில் பிடெக் மாணவர்கள் கல்வியை தொடர நிதியுதவி

சென்னை ஐஐடி.,யில் பிடெக் மாணவர்கள் கல்வியை தொடர முன்னாள் மாணவர்கள் நிதியுதவி அளித்துள்ளனர்.

HIGHLIGHTS

சென்னை ஐஐடி.,யில் பிடெக் மாணவர்கள் கல்வியை தொடர நிதியுதவி
X

பைல் படம்.

சென்னை ஐஐடி-யில் தகுதியான அனைத்து பிடெக் மாணவர்களும் கல்வியைத் தொடர முன்னாள் மாணவர்கள் மற்றும் சிஎஸ்ஆர் பங்களிப்போர் மூலம் நிதியுதவி பெறுகின்றனர்.

சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) முன்னாள் மாணவர்களும், சமூகப் பொறுப்பு நிதி பங்களிப்போரும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை உள்ள பிடெக் மாணவர்களுக்கு 100 சதவீத நிதியுதவியை இரண்டு ஆண்டுகளுக்கு (2022-23 & 2023-24) தொடர்ச்சியாக வழங்க முன்வந்துள்ளனர்.

இத்தகைய நிதியுதவியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, "தேவையுள்ள மாணவர்களுக்கு நிதியுதவி கிடைப்பதற்கு இயன்றவரை நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். இதனை செயல்படுத்த உதவிய நன்கொடையாளர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

இந்தக் கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டில் 490 மாணவர்களுக்கு ரூ.3.26 கோடி வழங்கப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டான 2023-24-ல் 495 மாணவர்களுக்கு ரூ.3.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகையான ரூ.66,667 இரண்டாகப் பிரிக்கப்பட்டு, கல்வியாண்டின் இரு செமஸ்டர்களுக்கும் சரிபாதியாக வழங்கப்படுகிறது.

மாணவர்களின் நலனுக்கான பங்களிப்புக்காக முன்னாள் மாணவர்கள், நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்த ஐஐடி மெட்ராஸ் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்னுலா, "நிதித் தேவையுள்ள எந்த மாணவரும் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு முழு கல்வித்தொகை பெறுவதில் விடுபடவில்லை என்பதில் எங்களது அலுவலகத்திற்கு மிக்க மகிழ்ச்சி. இத்திட்டத்தை செயல்படுத்த ஆதரவளித்த அனைத்து முன்னாள் மாணவர்கள், பெருநிறுவனக் பங்களிப்போருக்கு மனம்நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்தார்.

கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்கள் கருத்து

பணபிரச்சனையால் ஏற்பட்ட அழுத்தத்தில் இருந்து விடுபட எம்சிஎம் கல்வி உதவித்தொகை எவ்வாறு உதவியது என்பது குறித்து அதனால் பயன்பெற்ற ஐஐடி மெட்ராஸ் மாணவ அக்சித் கூறுகையில், "எனது குடும்பத்தில் முறையான பொறியியல் பட்டம் பெற்ற முதலாவது நபர் நான்தான். இதனால் என் குடும்பம் பெருமையடைந்தது. எனது குடும்பத்திற்கு எவ்வித சுமையையும் ஏற்படுத்தாமல் கல்விக் கட்டணம், விடுதிக்கட்டணத்தை செலுத்த ஐஐடி மெட்ராஸ் கல்வி உதவித்தொகை உதவுகிறது” என்றார்.

சாய்ஸ்ரீ கூறும்போது, "ஐஐடி மெட்ராஸ்-ல் என்னை சேர்த்தே ஆக வேண்டும் என்ற என் தந்தையின் கனவை நிறைவேற்ற முடிந்திருக்கிறது. நான் பிறப்பதற்கு முன்பே அவர் இங்குதான் பணிபுரிந்து வந்தார். தினக்கூலியாக வேலை செய்தபோது ஐஐடி மெட்ராஸ்-ஐ சுற்றிப்பார்த்த அவர், இது மிகவும் மதிப்புவாய்ந்த கல்வி நிறுவனம் என்பதைக் கண்டார். எனவே, என்னை இங்கே படிக்க வைத்தே தீருவது என்பது அவரது கனவாக இருந்தது. அந்தக் கனவுதான் உண்மையிலேயே ஐஐடி மெட்ராஸ்-ல் நான் நுழைவதற்கும் காரணமாக அமைந்தது. பாடத்திட்டம், கல்விக் கட்டணம் போன்ற விவரங்களை ஐஐடி மெட்ராஸ் இணையதளத்தில் பார்வையிட்டபோது, முன்னாள் மாணவர்களின் கல்வி உதவித்தொகை வாயிலாக ஏசிஆர் அலுவலகம் கட்டண விலக்கு பெற்றுத் தருவது தெரிய வந்தது. இங்கு நான் சேர்ந்தபின், இந்த கல்வி உதவித்தொகை குறித்து இமெயில் மூலம் எனக்குத் தகவல் வந்தது” என்றார்.

அனீஷ் அமுலோஜு கூறுகையில், “தற்போது நிதிச்சுமை நீங்கிவிட்டதால் எனது படிப்புகள், இலக்குகள், கனவுகள் ஆகியவற்றைப் பற்றி சிந்திக்கவும், கவனம் செலுத்தவும் முடிகிறது. அத்துடன் என் வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய இலக்குகள் குறித்து சிந்திக்க முடிகிறது” எனக் குறிப்பிட்டார்.

சோஹம் ஷா கூறும்போது, “முதலில் கல்வி உதவித்தொகை குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாதபோது, அதுபற்றி தேடத் தொடங்கலாம் என சிந்தித்தோம். ஆனால், உதவித் தொகை பற்றிய மின்னஞ்சல் வந்தபோது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். கல்வி உதவித் தொகை கிடைத்தன் மூலம் படிப்பைப் பற்றியும், ஹார்வர்டு போன்ற எந்த கல்வி நிறுவனத்திலும் மேற்படிப்பைத் தொடருவது பற்றியும் சிந்திக்கும்போது குடும்பத்தின் பணப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தக் கூடாது, மாறாக கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்தது. எனது வேலையை நான் முறையாக செய்யும் பட்சத்தில், மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்கள் போன்ற எத்தனையோ பேர் எனக்கும், பிற மாணவர்களுக்கும் கைகொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

இதர நிதியுதவிகள்

ஐஐடி மெட்ராஸ்-ல் பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் கல்வியைத் தொடரும் சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, ஃபெலோஷிப் வடிவில் நிதியுதவி வழங்கப்படுகிறது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அவரவர் கல்வித்திறன் அடிப்படையில் முன்னாள் மாணவர்களின் நிதியுதவித் தொகை கிடைக்கும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு ஐஐடி மெட்ராஸ்-ல் முழு கல்விக் கட்டணத் தள்ளுபடி உண்டு.

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.50 லட்சத்திற்கும் குறைவாக உள்ள எஸ்சி/எஸ்டி மாணவர்கள் எம்.ஏ. பாடத்திட்டத்தில் சேரும்போது, அவர்களுக்கு இலவச மெஸ் வசதி, மாதம் ரூ.250 கைச்செலவுப் பணம், கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக்கான வாடகை ஆகியவற்றை செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், ரூ. 4.50 லட்சத்திற்கும் குறைவாக பெற்றோரின் ஆண்டு வருமானம் உள்ள எம்.ஏ. பாடத்திட்ட மாணவர்களில் 25 சதவீதம் பேருக்கு தகுதி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

இதுதவிர, ஐஐடி மெட்ராஸ் பிடெக் பாடத்திட்டத்தில் சிறந்த மாணவர்களுக்கு என்சிஇஆர்டி, மத்திய-மாநில அரசுகளால் அனுமதிக்கப்படும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாடு கல்வி உதவித்தொகை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநரகம் மூலம் வழங்கப்படுகிறது.

பொறியியல் பட்டதாரி திறனறித் தேர்வு மூலம் எம்.டெக் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு பகுதிநேர கற்பித்தல் உதவியாளர்கள் என்ற முறையில் மாதந்தோறும் ரூ.12,400 வழங்கப்படுகிறது. எம்.எஸ்சி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 தகுதி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது.

பொறியியல் முழுநேர பிஎச்.டி. ஆராய்ச்சிப் படிப்பில் சேர்க்கப்படும் கல்வியாளர்களுக்கு பகுதிநேர கற்பித்தல்/ஆராய்ச்சி உதவியாளர்கள் என்ற முறையில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.37,000 வீதமும், அடுத்த மூன்றாண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.42,000 வீதமும் அனுமதிக்கப்படுகிறது. ஆராய்ச்சி அறிஞர்கள் சர்வதேச மாநாடுகளில் கட்டுரைகளை சமர்ப்பிக்க நிதியுதவி வழங்கி இக்கல்வி நிறுவனம் ஊக்குவிக்கிறது. எம்.எஸ், பிஎச்டி கல்வியாளர்களுக்கு பதிவுக் கட்டணம் உள்பட ரூ.1,50,000 உச்சவரம்பாக நிதியுதவி வழங்கப்படுகிறது.

Updated On: 8 Feb 2024 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  10. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?