/* */

தீரன் பட பாணியில் கொள்ளை: 6 ஹரியானா கொள்ளையர்கள் கைது

தீரன் பட பவாரியா கொள்ளை கும்பல் பாணியில் ஏ.டி.எம் மெஷினை அடித்த 6 ஹரியானா கொள்ளையர்கள் கைது.

HIGHLIGHTS

தீரன் பட பாணியில் கொள்ளை: 6 ஹரியானா கொள்ளையர்கள் கைது
X

திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள கூளிபாளையம் நால்ரோடு அருகே பேங்க் ஆப் பரோடா வங்கி உள்ளது. வங்கி கிளையின் வளாகத்தில் ஏடிஎம்முக்கு தனி அறை வைக்கப்பட்டு ஏடிஎம் மெஷின் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி 6 லட்சம் பணம் ஏ.டி.எம் மெஷினில் நிரப்பப்பட்ட நிலையில் தற்போது 28ம் தேதி அன்று ஒரு லட்சத்து 100 ரூபாய் பணம் இருந்துள்ளது. 28ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் டாடா சுமோ வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த கொள்ளையர்களில் ஒருவன் சிசிடிவி கேமராவை கருப்பு பெயிண்ட் ஸ்பிரே அடித்து விட்டு பின்னர் ஏ‌.டி.எம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றுள்ளார். ஆனால் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் இயந்திரத்தை இரும்பு கம்பி மூலம் கட்டி மற்றொரு முனையை டாடா சுமோ வாகனத்தில் கட்டி இழுத்துள்ளனர். இதில் மெஷின் அடியோடு பெயர்ந்து வந்து வெளியே விழுந்தது. அதனை சாவகாசமாக வாகனத்தில் ஏற்றிய கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். காலையில் அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் வங்கியில் இருந்து மற்ற சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. மோப்ப நாய் மற்றும் பாரன்சிக் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஏ.டி.எம் மையத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் இந்த ஏடிஎம் மையத்திற்கு பாதுகாப்பிற்கு காவலாளி இல்லை என்பது தெரிய வந்தது.

போலீசாரின் தொடர் தேடுதல் வேட்டையில் ஏடிஎம் மெஷினை எடுத்துச் சென்ற கொள்ளையர்கள் தாங்கள் சென்ற காரை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே மூங்கில் தோட்டம் பிரிவில் நிறுத்திவிட்டு மெஷினை மட்டும் எடுத்துச் சென்றது தெரியவந்தது. டாடா சுமோ வாகனம் குறித்து விசாரிக்கையில் அதன் உரிமையாளர் பாலமுருகன் என்பதும் மின்வாரியத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வாகனத்தை இயக்கி வந்ததும் தெரிய வந்தது. இந்த வாகனத்தை திருடிய கொள்ளையர்கள் கொள்ளைக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது. மறுநாள்

1ம் தேதி அன்று விஜயமங்கலம் அருகே ஏ.டி.எம் மெஷினின் உடைந்த பாகங்களை போலீசார் கண்டறிந்தனர். அதில் இருந்த பணம் திருடப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கண்டெய்னர் லாரி ஒன்று பெருந்துறையை கடந்து செல்வதும் மீண்டும் அதிகாலை திரும்பி பெருந்துறை நோக்கி வருவதையும் கண்டறிந்தனர். அந்த கண்டெய்னர் லாரியின் பதிவெண்களை வைத்தும் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் உபயோகத்தில் இருந்த மொபைல் எண்களையும் ஆய்வு செய்த போது இரண்டும் ஒரே நேரத்தில் அந்த பகுதிகளில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து. ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் தனியாருக்கு சொந்தமான குடோன் அருகே நின்றிருந்த கண்டெய்னர் லாரியை அடையாளம் கண்டு அதனை சுற்றி வளைத்த போலீசார் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ராகுல் (24), ரபீக்(24), ஷாகித்(25), ஷாஜித்(21), இர்சாத்(38), காசிம் கான்(45) என்ற 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து கண்டெய்னர் லாரி, 2 நாட்டு கைத்துப்பாக்கிகள், 9 தோட்டாக்கள், வெல்டிங் மெஷின், கேஸ் சிலிண்டர், ஆக்ஸிஜன் சிலிண்டர், கேஸ் கட்டர், பெயிண்ட் ஸ்பிரே மற்றும் 69 ஆயிரத்து 120 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் 6 பேரும் ஹரியானா மாநிலத்தில் இருந்து பெங்களூருக்கு சரக்கு ஏற்றி வந்துள்ளனர். அங்கிருந்து காலி வண்டியாக ஈரோட்டிற்கு வந்த அவர்கள் ஈரோட்டில் இருந்து துணி பண்டல்களை ஏற்றிக்கொண்டு ஹரியானா செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட முயன்றுள்ளனர். முதலில் பெருந்துறை அருகே டாடா சுமோ வாகனத்தை திருடிய இவர்கள் தங்கள் லாரியை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு திருடிய டாடா சுமோ வாகனம் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை கொள்ளையடித்தனர். பின்னர் மீண்டும் தங்கள் லாரி இருந்த இடத்திற்கு சென்ற அவர்கள் அங்கேயே டாடா சுமோ வாகனத்தை நிறுத்தி விட்டு தங்கள் லாரியில் ஏ.டி.எம் மெஷினை மாற்றி கொண்டு சென்றுள்ளனர். இரண்டு நாட்களில் சொந்த ஊருக்கு சென்று விடுவோம் யாராலும் கண்டு பிடிக்க முடியாது என நினைத்த கொள்ளையர்களை இரண்டே நாளில் பிடித்து அசத்தி உள்ளனர் திருப்பூர் மாவட்ட போலீசார்.




Updated On: 2 March 2021 4:49 PM GMT

Related News