/* */

'தீபாவளி விடுமுறை முடிந்தது'- திருப்பூர் திரும்பும் பனியன் தொழிலாளர்கள்

தீபாவளி பண்டிகை கொண்டாட, சொந்த ஊர்களுக்கு சென்ற பனியன் தொழிலாளர்கள் நாளை, திருப்பூருக்கு திரும்பி வருகின்றனர். இதற்காக தேனி, கம்பம் உள்பட பல இடங்களில் இருந்து, திருப்பூருக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது.

HIGHLIGHTS

தீபாவளி விடுமுறை முடிந்தது- திருப்பூர் திரும்பும் பனியன் தொழிலாளர்கள்
X

சொந்த ஊர்களில், தீபாவளி கொண்டாட சென்ற பனியன் தொழிலாளர்கள், நாளை திருப்பூருக்கு திரும்புகின்றனர். (கோப்பு படம்)

திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் அதிக எண்ணிக்கையில் பணிசெய்கின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு, திருப்பூரில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். பண்டிகை முடிந்ததையடுத்து தொழிலாளர்கள் பலர் திருப்பூருக்கு வந்தபடி உள்ளனர். குறிப்பாக நாளை (31-ம்தேதி) பெரும்பாலான தொழிலாளர்கள், திருப்பூருக்கு திரும்பி வர உள்ளனர்.

இதனால் நெல்லை, நாகர்கோவில், மதுரை, சேலம், தேனி, கம்பம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து, திருப்பூருக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது. தொழிலாளர்கள் திரும்ப உள்ளதையடுத்து திருப்பூரில் மீண்டும் ஆடை உற்பத்தி வேகமெடுக்கும் வாய்ப்பு உருவாகும்.

தீபாவளி பண்டிகை காலத்தில், குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு மேல் தொழிலாளர்கள், விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. இதன் பின், பண்டிகையை முடித்துவிட்டு திருப்பூருக்கு திரும்பி வருவர். இதிலும் ஆர்டர்கள் மிகவும் அவசரமாக இருக்கிற சில நிறுவனங்கள், பண்டிகை முடிந்த ஓரிரு நாட்களிலேயே தொழிலாளர்களை வேலைக்கு வருமாறு அழைப்பது உண்டு. ஆனால், தற்போது நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக, எதிர்பார்த்த ஆர்டர்கள் இல்லை. இதன் காரணமாக, பல நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு மேல் விடுமுறை அளித்துள்ளது. இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள், நாளை திருப்பூர் வந்து விடுவார்கள். இதன் பின்னர் ஆடை தயாரிப்பு முன்பு போல் தொடங்கி விடும்.

தற்போதைய நிலவரப்படி ஏற்றுமதி நிறுவனங்களில், அவசரமாக முடித்து அனுப்ப வேண்டிய ஆர்டர்கள் எதுவும் இல்லை. பெரிய நிறுவனங்களிடம், ஆர்டர் எடுத்து ஆடை தைத்து கொடுக்கும் குறு, சிறு பனியன் யூனிட்களிலும் பணி குறைவாகவே உள்ளது. இதனால் திருப்பூரில் உள்ள பெரும்பாலான குறு, சிறு பின்னலாடை யூனிட்களுக்கு நவம்பர் 10ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள் கைவசம் உள்ள தொழிலாளரை கொண்டு, உற்பத்தியை தொடர திட்டமிட்டுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு பிறகு, பின்னலாடை உற்பத்தியைத் துவக்கினாலும் அது வேகமாக இல்லை. சொந்த நிலம் உள்ள வெளி மாவட்ட தொழிலாளர்கள், தீபாவளி பண்டிகைக்கு சென்று, போனஸ் தொகையை பயன்படுத்தி, விவசாய பணிகளை துவக்குவது வழக்கம்.இந்தாண்டு பருவமழையும் கைகொடுத்துள்ளதால், பண்டிகைக்கு சென்ற தொழிலாளர் விவசாய பணியை துவக்கியிருப்பர். ஒரு சிலர் அங்கேயே தங்கிவிட்டு, மற்றவர்கள் திருப்பூருக்கு திரும்புவதும் உண்டு. பெரும்பாலான நிறுவனங்களில் 10 நாட்கள் வரை தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக பணிக்கு வர விரும்பினால் வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்களில், வடமாநில தொழிலாளரை கொண்டு உற்பத்தி தொடர்கிறது. சில நிறுவனங்கள் கைவசம் உள்ள தொழிலாளரை கொண்டு, பராமரிப்பு பணியை செய்து வருகின்றன. வரும் நவம்பர் மாத இறுதியில் புதிய ஆர்டர் வந்து உற்பத்தி முழு வேகமெடுக்கும்.அதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.

Updated On: 30 Oct 2022 9:01 AM GMT

Related News