/* */

தர்மபுரி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த தேர்தல் மன்னன் பத்மராஜன்

239வது முறையாக தேர்தலில் மனுத்தாக்கல் செய்த பத்மராஜன், இதுவரை தேர்தல் டெபாசிட் கட்டி ரூ.1 கோடி இழந்துள்ளேன் என கூறினார்

HIGHLIGHTS

தர்மபுரி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்த தேர்தல் மன்னன் பத்மராஜன்
X

வேட்புமனு தாக்கல் செய்யும் தேர்தல் மன்னன் பத்மராஜன் 

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியுள்ளது. தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் இன்று காலை தொடங்கியது.

இதில் முதல் நபராக மேட்டூரைச் சேர்ந்த அனைவராலும் பிரபலமாக அறியப்படும் தேர்தல் மன்னன் பத்மராஜன் தனது வேட்பு மனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் தாக்கல் செய்தார். நாடு முழுவதும் எங்கு தேர்தல் நடந்தாலும், அதில் போட்டியிடுவதை வழக்கமாக வைத்துள்ள மேட்டூரைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன், இன்று, 239வது முறையாக தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இவர் கடந்த 1988 ம் ஆண்டு முதல் இந்தியநாட்டில் நடக்கும் பல்வேறு தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.

இந்தியா முழுவதும் சட்டசபை, நாடாளுமன்றம் உள்ளிட்ட பல தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார். கடந்த 2003 ம் ஆண்டு லிம்கா சாதனைப் புத்தகத்திலும், கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

தேர்தல் மன்னன் பத்மராஜன் ஒரு சாதனையாளர் ஆவார். சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த இவர் ஒரு ஹோமியோபதி மருத்துவர். இவர் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் பல முறை போட்டியிட்டு லிம்கா, புக் ஆஃப் ரிக்கார்டு போன்ற சாதனைப் புத்தகங்களில் மூன்று முறை சாதனையாளராக இடம் பெற்றிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பத்மராஜன், “இதுவரை 239 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். உலக சாதனை படைக்கும் நோக்கத்திற்காகத் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறேன். ஒரு தேர்தலில் அதிகபட்சமாக 6000 வாக்குகளைப் பெற்றுள்ளேன். இதுவரை வாஜ்பாய், அத்வானி, கருணாநிதி, ஜெயலலிதா, எடியூரப்பா, எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற பலரை எதிர்த்துப் போட்டியிட்டுள்ளேன். இதுவரை துணை ஜனாதிபதி பதவிக்கு மூன்று முறை போட்டியிட்டு உள்ளேன்.

மேலும் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று இல்லை, தோல்வியை மட்டுமே விரும்புகிறேன். வெற்றி என்றால் அதை ஒருமுறை தான் அனுபவிக்க முடியும். தோல்வி என்பது தொடர்ந்து தாங்கிக் கொண்டே இருக்கலாம். 1988 முதல் இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை தேர்தல் வேட்பு மனுவிற்காக டெபாசிட் செய்துள்ளேன்.

நான் ஒரு சிறிய பஞ்சர் கடை வைத்துப் பிழைப்பு நடத்தி வருகிறேன். அதன் மூலம் கிடைக்கின்ற வருவாய் வைத்து இந்த டெபாசிட் தொகைகளைக் கட்டுகிறேன். ஜனாதிபதி தேர்தல், கூட்டுறவுத் தேர்தல், வார்டு உறுப்பினர் போன்ற எல்லா தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளேன். ஒரே ஒரு வார்டு தேர்தலில், ஒரு ஓட்டு கூடப் பெறவில்லை” எனத் தெரிவித்தார்.

அரசியல் கட்சி வேட்பாளர்கள் தனது ஆதரவாளர்களுடன் வேட்பு மனு தாக்கலுக்கு வருகை தந்து பரபரப்பு ஏற்படுத்தும் நிலையில், தேர்தல் மன்னன் பத்மராஜன் தனது மகனை மட்டும் உடன் அழைத்து வந்து காவல்துறையிடம் அனுமதி பெற்று எளிமையாக வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 20 March 2024 11:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு