/* */

Sultan of burunei in tamil-7 ஆயிரம் கார்கள்..! புருனே சுல்தானின் ஆடம்பர வாழ்க்கை..!

பணம், வாழ்க்கை சக்கரத்தின் அச்சாணி.இந்த உலகத்தில் எல்லா வேலையையும் செய்யக்கூடிய மிகச்சிறந்த வேலைக்காரன்.

HIGHLIGHTS

Sultan of burunei in tamil-7 ஆயிரம் கார்கள்..!  புருனே சுல்தானின் ஆடம்பர வாழ்க்கை..!
X

sultan of burunei in tamil-புருனே நாட்டின் மன்னர்.

Sultan of burunei in tamil, sophisticated life of Burunei Sultan, World Richest Sultan,World News, World Trending News

உலக பணக்காரர்களில் ஒருவர் தான் புருனே சுல்தான். யார் இந்த புருனே சுல்தான்? அப்படி அவர் என்னதான் செய்கிறார்? ஆடம்பர வாழ்வில் திளைக்கும் அவரது பெயர் ஹசனல் போல்கியா. மன்னர் ஆட்சி நடைபெறும் புருனே நாட்டின் 29-வது சுல்தான் ஆவார். நாட்டின் மன்னர், பிரதமர், நிதி மந்திரி, வெளியுறவு மந்திரி, ராணுவ மந்திரி, ராணுவ தலைமை தளபதி, காவல் துறையின் தலைவர் எல்லாம் இவர் தான்.

உலகின் 2-வது பெரிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர், உலகின் 98-வது கோடீஸ்வரராக விளங்குகிறார். இவருடைய சொத்து மதிப்பு 30 பில்லியன் அமெரிக்க டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.2 லட்சத்து 46 ஆயிரம் கோடி. முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலகின் நம்பர்-1 பணக்காரர் ஆகும் வரை, அந்த இடத்தில் புருனே சுல்தான் தான் இருந்தார்.

உலகின் 5-வது பணக்கார நாடான புருனே தென்கிழக்கு ஆசியாவில் போர்னியோ தீவில் அமைந்துள்ள ஒரு குட்டி நாடு. அடுத்தடுத்து சிறிது இடைவெளியில் இரு தனித்தனி பிரதேசங்களாக உள்ள புருனேயின் வட பகுதியில் தென் சீனக் கடல் உள்ளது. மற்ற 3 பகுதிகளையும் சுற்றி மலேசியாவின் சரவாக் மாநிலம் அமைந்துள்ளது. இந்த நாட்டின் தலைநகர் பெயர் பந்தர் செரி பெகவான். இதுதான் பெரிய நகரமும் கூட.


Sultan of burunei in tamil

1984-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி இங்கிலாந்திடம் இருந்து புருனே விடுதலை பெற்றது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் 1967-ம் ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி புருனேயின் மன்னராக பொறுப்பேற்ற ஹசனல் போல்கியா, தொடர்ந்து 55 ஆண்டுகளாக அந்த பதவியில் நீடித்து வருகிறார்.

புருனே விடுதலை பெற்றபோதிலும் அந்த நாட்டின் ராணுவ பாதுகாப்பு, வெளியுறவு ஆகியவை பல ஆண்டுகள் இங்கிலாந்தின் கையில் தான் இருந்தது. இங்கிலாந்தில் ஜனநாயக ரீதியாக நாடாளுமன்ற ஆட்சிமுறை இருந்தாலும் இன்னும் அங்கு அரச குடும்பம் உள்ளது. ராணிக்கு தனி அந்தஸ்து வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் புருனேயிலோ இன்னும் மன்னராட்சி முறைதான் நீடிக்கிறது.

தற்போது 76 வயதாகும் புருனே சுல்தான் 1946-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதி பிறந்தார். இவருக்கு மூன்று மனைவிகள். முதல் மனைவியின் பெயர் ராஜா இஸ்தேரி பென்கிரான் அனக் ஹாஜா சலேஹா. இவர்கள் திருமணம் 1965-ம் ஆண்டு நடைபெற்றது.


அதன்பிறகு இரண்டாவதாக, புருனேயின் ராயல் ஏர்லைன்சில் பணியாற்றி வந்த ஹாஜா மரியம் அப்துல் அஜீஸ் என்பவரை 1982-ம் ஆண்டு திருமணம் செய்த சுல்தான், 2003-ல் அவரை விவாகரத்து செய்தார். பின்னர் மூன்றாவதாக, மலேசிய டி.வி.யில் வேலைபார்த்த அஜ்ரினாஸ் மசார் ஹக்கீம் என்ற பெண்ணை 2005-ல் மணந்தார். அவரை 2010-ல் விவாகரத்து செய்து விட்டார். எனவே முதல் மனைவியான சலேஹாதான் ராணியாக இருக்கிறார்.

புருனே சுல்தானுக்கு 3 மனைவிகள் மூலம் 5 மகன்களும், 7 மகள்களும், 18 பேரப்பிள்ளைகளும் உள்ளனர். அவர் வசிக்கும் இஸ்தானா நூருல் இமான் அரண்மனை உலகில் உள்ள அரண்மனைகளிலேயே மிகப்பெரியது. 'கின்னஸ் சாதனை' புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்த அரண்மனையின் பரப்பளவு 21 லட்சத்து 52 ஆயிரத்து 782 சதுர அடி. 1984-ம் ஆண்டில் 1.4 பில்லியன் டாலர் (ரூ.27 ஆயிரத்து 480 கோடி) மதிப்பில் கட்டப்பட்டு பூலோக சொர்க்கம் போல் ஜொலிக்கும் இந்த அரண்மனையின் தற்போதைய மதிப்பு ரூ.36 ஆயிரத்து 847 கோடி.

Sultan of burunei in tamil

இதில் 1,788 அறைகள், 257 குளியல் அறைகள், 5 நீச்சல் குளங்கள், 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய விருந்து மண்டபம், 18 லிப்ட்டுகள், 1,500 பேர் அமரக்கூடிய மசூதி போன்றவை உள்ளன. அரண்மனையில் 51 ஆயிரம் பல்புகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. 110 கார்களை நிறுத்தும் வசதியும் அரண்மனை வளாகத்தில் உள்ளது.

அதிக ரோல்ஸ்ராய்ஸ் கார்கள்

புருனே சுல்தான் ஒரு கார் பிரியர். சந்தைக்கு புதிதாக எந்த சொகுசு கார் வந்தாலும் உடனே அதை வாங்கிவிடுவார். உலகில் உள்ள அத்தனை வகை சொகுசு கார்களும் இவரிடம் இருக்கின்றன. 600 ரோல்ஸ்ராய்ஸ், 450 பெராரி, 380 பென்ட்லேஸ் உள்பட 7 ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை வைத்து இருக்கிறார். இவற்றின் மொத்த மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.41 ஆயிரம் கோடி). இவரது ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் ஒன்று தங்கத்தால் இழைக்கப்பட்டது.


அதிக ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வைத்திருப்பவர் என்ற முறையில் இவரது பெயர் 'கின்னஸ் சாதனை' புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது. புருனே சுல்தான் தனது சொந்த பயணத்துக்கென்றே தனியாக போயிங்-747, போயிங்-767, ஏர்பஸ்-ஏ340 என்று 3 பெரிய விமானங்கள் மற்றும் 6 சிறிய விமானங்களை வைத்திருக்கிறார். இதில் 545 கோடி ரூபாய் மதிப்புள்ள போயிங்-747 ரக விமானத்தை 'பறக்கும் அரண்மனை' என்றே சொல்லலாம். இந்த விமானத்தின் உள்பகுதியில் மட்டும் ரூ.645 கோடி செலவில் அலங்காரம் (இன்டீரியர்) செய்யப்பட்டு உள்ளது. இதிலுள்ள கைகழுவும் பேசின் தங்கத்தால் அமைக்கப்பட்டு இருக்கிறது. இருக்கைகளில் தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. உலகிலேயே ஆடம்பரமான விமானம் இதுதான்.


இதுதவிர 2 ஹெலிகாப்டர்களும் அவரிடம் உள்ளன. நாட்டுக்குள் அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

புருனே சுல்தான் ஒரு முறை தனது மகளுக்கு, ஏர்பஸ்-340 ரக விமானத்தை பிறந்தநாள் பரிசாக வழங்கினார். அனேகமாக, உலகிலேயே அதிக மதிப்புள்ள பிறந்தநாள் பரிசு இதுவாகத்தான் இருக்கும்.

Sultan of burunei in tamil

மைக்கேல் ஜாக்சன் இசைக் கச்சேரி

புருனே சுல்தான், மறைந்த பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர். கடந்த 1996-ம் ஆண்டு ஜூலை மாதம் சுல்தான் தனது 50-வது பிறந்த நாளை 2 வாரங்கள் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடினார். இதற்காக அவர் செலவிட்ட தொகை 27 மில்லியன் டாலர் (ரூ.222 கோடி). இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உள்ளிட்ட 3,000 ஆயிரம் பிரமுகர்கள் அவரது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டனர். இந்த கொண்டாட்டத்தை பார்த்து உலகமே வியப்பில் ஆழ்ந்தது.


இந்த விழாவில் இசை நிகழ்ச்சி நடத்த மைக்கேல் ஜாக்சனை சுல்தான் அழைத்து இருந்தார். இதற்காக அவருக்கு 17 மில்லியன் டாலர் (ரூ.139 கோடி) கொடுத்தார். புருனேயில் உள்ள ஜெருடோங் பார்க் ஸ்டேடியத்தில் ஜூலை 16-ந் தேதி 2 மணி நேரம் நடைபெற்ற மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சியை காண 60 ஆயிரம் பேர் திரண்டு இருந்தனர். சுல்தானின் சிறப்பு விருந்தினர்களுக்காக தனியாக இரு இசை நிகழ்ச்சிகளையும் மைக்கேல் ஜாக்சன் நடத்தினார்.

தனது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு சுல்தான் தங்க நாணயம் பரிசாக வழங்கினார். சுல்தான் தனது மூத்த மகள் திருமணத்துக்காக அமெரிக்காவைச் சேர்ந்த பாடகி விட்னி ஹூஸ்டனை வரவழைத்து கச்சேரி நடத்தினார். இதற்காக, ''உங்களுக்கு எவ்வளவு தொகை வேண்டுமோ எழுதிக்கொள்ளுங்கள்" என்று கூறி விட்னி ஹூஸ்டனிடம் அவர் ஒரு ''பிளாங் செக்''கை (வெற்று காசோலை) கொடுத்தார். அதில் பாடகி எழுதிய தொகையை கேட்டால் மலைத்துப் போவீர்கள். இந்திய மதிப்புக்கு 51 கோடி ரூபாய்.


புருனே சுல்தானுக்கு சிறு வயதிலேயே விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் உண்டு. குதிரையில் அமர்ந்து பந்தை அடிக்கும் போலோ விளையாட்டு அவருக்கு ரொம்ப பிடிக்கும். இதற்காக அர்ஜென்டினா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பிரபல போலோ வீரர்களை வரவழைத்து போலோ விளையாடுவார். இதற்காக அவர்களை அங்கிருந்து அழைத்து வருவது, நட்சத்திர ஓட்டலில் தங்க வைப்பது என்று கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைப்பார்.

இளம் வயதில் இந்திய ராணுவத்தின் 61-வது குதிரைப்படை அணியில்கூட அவர் ஒருமுறை போலோ விளையாடி இருக்கிறார். அவரிடம் 200 குதிரைகளுக்கு மேல் உள்ளன. அந்த குதிரைகள் குளிர்சாதன வசதி கொண்ட லாயங்களில் வைத்து பராமரிக்கப்படுகின்றன.

Sultan of burunei in tamil

புருனே சுல்தானுக்கு அவரது தம்பி இளவரசர் ஜெப்ரி மீது மிகுந்த பாசமுண்டு. மிகவும் ஆடம்பர பிரியரான ஜெப்ரி ஒரு காலத்தில் ஒரு நாளைக்கு 7 லட்சத்து 47 ஆயிரம் டாலர் வரை ஆடம்பரமாக செலவு செய்தார் என்றும், இப்படி தொடர்ந்து 10 ஆண்டுகள் பணத்தை விரயம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சுல்தானின் சொத்து கரையத் தொடங்கியது.


தம்பி ஜெப்ரியின் போக்கு பிடிக்காததால் உஷாரான சுல்தான், அவருக்கு சொந்தமான 500 சொத்துகளை தன்வசம் எடுத்துக் கொண்டார். இதில் 2,000 கார்கள், 9 ஜெட் விமானங்கள், 5 ஆடம்பர கப்பல்கள், 100 விலையுயர்ந்த ஓவியங்கள், லண்டன், பாரீஸ், ரோம் நகரங்களிலும் மற்றும் அமெரிக்காவில் உள்ள நட்சத்திர ஓட்டல்களும் அடங்கும். 5 ஆடம்பர கப்பல்களில் ஒரு கப்பலின் மதிப்பு மட்டும் ரூ.3,684 கோடி ஆகும்.

முடி வெட்ட ரூ.18 லட்சம் செலவு. நாம் முடி வெட்டிக் கொள்ள 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் கொடுப்போம். அதுவும் கொரோனா காலத்தில், வேறு வழியில்லாமல் பலர் தன் கையே தனக்கு உதவி என்று தங்களுக்கு தாங்களே முடி வெட்டிக்கொள்ள கற்றுக்கொண்டார்கள்.


ஆனால் புருனே சுல்தான் ஒரு முறை முடி வெட்டிக் கொள்ள 18 லட்சம் ரூபாய் செலவு செய்கிறார். முடி வெட்ட இவ்வளவு செலவா என்று மலைக்கவேண்டாம். ஆம் உண்மைதான்...

முடி வெட்டுவதற்காக இவர் ஒவ்வொரு முறையும் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து கென் மாடஸ்டு என்ற சிகை அலங்கார நிபுணரை வரவழைக்கிறார். புருனே வந்து செல்ல அவருக்கு விமானத்தில் 'பிசினஸ்' வகுப்பில் (சொகுசு வகுப்பு) டிக்கெட் எடுத்து கொடுக்கப்படுகிறது. புருனே வரும் அவரை 5 நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கிறார்கள். மேலும் முடி வெட்ட கட்டணம் எல்லாவற்றையும் சேர்த்துத்தான் ரூ.18 லட்சம் ஆகிறது.

Sultan of burunei in tamil

பணத்தை தண்ணீராக செலவழிக்கிறார். செல்வம் கொழிக்கும் நாடு. பணக்கார நாடாக விளங்கும் புருனேயின் மொத்த பரப்பளவே 5,765 சதுர கிலோ மீட்டர் தான். ஈரோடு மாவட்டத்தை (6,035 ச.கி.மீ.) விட சிறியது, அவ்வளவுதான். 2020-ம் ஆண்டின் நிலவரப்படி புருனேயின் மக்கள் தொகை 4 லட்சத்து 60 ஆயிரத்து 345. இவர்களில் 80.9 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். கிறிஸ்தவர்கள் 7.1 சதவீதமும், பவுத்தர்கள் 7 சதவீதமும், பிற மதத்தினர் 5 சதவீதமும் உள்ளனர்.


பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு மூலம் புருனேயில் செல்வம் கொழிக்கிறது. இங்கு ஒரு நாளைக்கு 1 லட்சத்து 67 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெயும், 25.3 மில்லியன் கனமீட்டர் திரவ எரிவாயும் உற்பத்தியாகிறது.

இந்த நாட்டு நாணயத்தின் பெயர் புருனே டாலர். புருனேயின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 18,464 பில்லியன் அமெரிக்க டாலர். தனி நபர் ஆண்டு வருமானம் 42,939 அமெரிக்க டாலர்.

1990-க்கு பிறகு இந்த நாடு அபார வளர்ச்சி கண்டது. சர்வதேச நிதியம் 2011-ல் வெளியிட்ட மதிப்பீட்டின்படி, உலகில் கடனே வாங்காத இரு நாடுகளில் புருனேவும் ஒன்று. மற்றொரு நாடு லிபியா. புருனே 1984-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி ஐ.நா. சபையில் 159-வது உறுப்பினராக இடம் பெற்றது. ரூ.570 கோடிக்கு வாங்கிய ஓவியம் புருனே சுல்தான் ஒரு ஓவிய பிரியர். தனது அரண்மனையில் ஏராளமான ஓவியங்களை வைத்து இருக்கிறார். அழகான ஓவியங்களை வாங்கி அரண்மனையை அலங்கரிப்பதில் அவருக்கு அலாதி பிரியம்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல ஓவியர் பியர்ஸ் அகஸ்டி ரெனாய்ர் 1892-ல் வரைந்த ஒரு ஓவியம் அவரை மிகவும் கவர்ந்தது. இரு சிறுமிகள் பியானோ வாசிப்பது போல் ரெனாய்ர் வரைந்திருந்த அந்த ஓவியத்தை அவர் 70 மில்லியன் டாலர் (ரூ.570 கோடி) கொடுத்து வாங்கினார்.

Sultan of burunei in tamil

கண்ணீருடன் வெளியேறிய 3-வது மனைவி

ஏற்கனவே இரு மனைவிகள் இருந்த நிலையில், புருனே சுல்தான் மூன்றாவதாக மலேசியாவில் உள்ள ஒரு டி.வி.யில் தொகுப்பாளராக பணியாற்றிய அஜ்ரினாஸ் மசார் ஹக்கீம் என்பவரை 2005-ல் மணந்தார். இந்த பெண் புருனே சுல்தானை விட 33 வயது இளையவர். ஆரம்பத்தில் சுல்தான் இந்த திருமணத்தை ரகசியமாக வைத்து இருந்தார். அதன்பிறகே வெளியுலகுக்கு தெரியவந்தது.

புருனே சுல்தானுக்கு அஜ்ரினாஸ் மூலம் ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். மகன் பெயர் அப்துல் வகீல்; மகள் பெயர் அமீரா. ஆனால் 5 ஆண்டுகளில் அதாவது 2010-ல் அஜ்ரினாஸை அவர் திடீரென்று விவாகரத்து செய்துவிட்டார்.

இதனால், அஜ்ரினாஸ் அரண்மனையை விட்டு வெளியேறும் கட்டாய நிலை ஏற்பட்டது. குழந்தைகளை அவருடன் அனுப்ப சுல்தான் மறுத்து விட்டார். அத்துடன், குழந்தைகளை பார்க்கவும் அனுமதிக்கவில்லை. இதனால் அஜ்ரினாஸ் கண்ணீருடன் புருனேயில் இருந்து மலேசியா திரும்பினார். அப்போது அவரது மகன் அப்துல் வகீலுக்கு 4 வயது; மகள் அமீராவுக்கு 2 வயது.

மலேசியா திரும்பிய அஜ்ரினாஸ் அங்கு ஒரு வேலையில் சேர்ந்து மீண்டும் தனது பழைய வாழ்க்கையை தொடங்கினார். 5 ஆண்டுகால அரண்மனை வாழ்க்கை அவருக்கு ஒரு கனவு போல் தோன்றி மறைந்து விட்டது. இப்போது அவரது மகன் அப்துல் வகீலுக்கு 16 வயதும், மகள் அமீராவுக்கு 14 வயதும் ஆகிறது. விதியின் விளையாட்டில், கோழி ஒரு கூட்டில்... குஞ்சுகள் ஒரு கூட்டில்...

இதற்கிடையே, அஜ்ரினாசுக்கும் அவரது நீண்ட கால நண்பரான பைரோஸ்கான் அப்துல் ஹமீது என்பவருக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்டது. அவரை அஜ்ரினாஸ் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பைரோஸ்கான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த இரண்டாவது கணவர் மூலம் அஜ்ரினாசுக்கு 2 மகள்கள் உள்ளனர். மன்னருடன் அரண்மனையில் வாழ்ந்த அஜ்ரினாஸ் இப்போது ஒரு சாமானியனுடன் குடும்பம் நடத்துகிறார். என்றாலும் இவர்கள் வசதியாகவே வாழ்கிறார்கள்.

அரண்மனையில் வாழும் தனது மகன் அப்துல் வகீலையும், மகள் அமீராவையும் நினைத்தும், அவர்களை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்திலும் அஜ்ரினாஸ் அவ்வப்போது தனிமையில் கண்ணீர் சிந்துகிறார்.

சமீபத்தில் தனது மகள் அமீராவின் பிறந்தநாளையொட்டி, அவளுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜ்ரினாஸ் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில், ''உன்னுடைய நினைப்பு இல்லாமல் எனது நாட்கள் கழிவதே இல்லை. நீ என் அருகில் இல்லாத சோகத்தை நான் உணர்கிறேன். சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் உன்னை பார்த்தேன்.

உன் அம்மா என்பதில் எனக்கு எப்போதுமே பெருமை. நீ வளர்ந்து இருக்கிறாய். பெருமையாக இருக்கிறது'' குறிப்பிட்டு இருந்தார். ''என் பிள்ளைகள் நன்றாக வளர்ந்த பிறகு என்னை உணருவார்கள்'' என்று அஜ்ரினாஸ் கூறி இருக்கிறார். தான் 10 மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளை பார்க்க முடியவில்லையே! கட்டி அணைக்க முடியவில்லையே! என்ற ஏக்கமும், வேதனையும் அந்த தாய்க்கு இருந்துகொண்டேதான் இருக்கிறது. அந்த காயத்துக்கு மருந்தே கிடையாது. அரண்மனையும், சொத்து சுகமும், கொட்டிக் கிடக்கும் பணமும் ஒரு தாயின் வேதனையை போக்குமா என்ன?.

Updated On: 3 Sep 2023 5:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு