/* */

தென் காளகஸ்தி திருத்தலம்

வடக்கே காளகஸ்திக்கு சென்று வணங்க முடியாதவர்கள், தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஸ்ரீ காளகஸ்தி ஈஸ்வரனை வணங்கினால் வடகாளகஸ்திக்கு சென்று வந்த நற்பலன் கிட்டுகிறது.

HIGHLIGHTS

தென் காளகஸ்தி திருத்தலம்
X



சத்திய லோகத்தில் பெற்ற சாபத்தினால் பூலோகம் வந்த துர்வாசர் பல தீர்த்தங்களில் நீராடி, புண்ணிய தலங்களில் வழிபட்டு வந்தார். துர்வாசரின் தவ பயணத்தால் காலத்திற்கும் பலன் தரும் புண்ணிய தலங்களும், பாவம் போக்கும் தீர்த்தகட்டங்களும் உண்டாயின.

துர்வாசர் புண்ணிய நதிகளான கங்கை, யமுனா, சரஸ்வதி நதிகளில் நீராடி தன் வழிபாடுகளையும் தவத்தையும் தொடர்ந்தார். ஆந்திராவில் உள்ள ஸ்வர்ணமுகியில் நீராடி ஸ்ரீ காளகஸ்தி ஈஸ்வரனை ஒரு வருடம் பூஜித்தார். ஈஸ்வரன் துர்வாசரிடம் ஒரு லிங்கத்தை கொடுத்து "இங்கே பூஜை செய்த பூக்கள் தாமிரபரணியில் எங்கு விழுகிறதோ அங்கே இந்த லிங்கத்தை ஸ்தாபித்து வழிபாடு செய்க" என்று அருளினார்.

இறைவனின் அருளியபடி தெற்கே தாமிரபரணி நோக்கி வந்தார் துர்வாசர். தாமிரபரணியில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அந்த பூக்கள் விழுந்தது, அதே இடத்தில்காளகஸ்தி ஈஸ்வரன் தந்த அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். சுவாமிக்கு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் என்றும் அம்பாளுக்கு ஸ்ரீ ஞானாம்பிகை என்றும் திருநாமம் சூட்டினார். தாமிரபரணி நதியில் நீராடி 72 ஸ்லோகங்களை இயற்றி ஒரு வருடம் வழிபாடு செய்தார். துர்வாசர் வழிபாடு செய்த சிறப்பு வாய்ந்த திருத்தலம் கரிசூழ்ந்த மங்கலம். ராகு தோஷத்தை நீக்கும் தென்னகத்து காளகஸ்தியாக இந்த ஆலயம் திகழ்கிறது.

துர்வாசர் தாமிரபரணியில் நீராடிய இடம் துர்வாச தீர்த்தம் என்ற பெயரில் விளங்குகிறது. தாமிரபரணி உற்பத்தியாகி 130 கி.மீ பயணித்து கடலில் சங்கமிக்கிறது. அதில் 65 கி.மீ தொலைவில் பத்தமடை அருகே கரிசூழ்ந்த மங்களம் என்ற இடத்தில் இந்த தீர்த்த கட்டம் உள்ளது.

சனி, ராகு தோஷ நிவர்த்தி வேண்டி அதற்கான நேரங்களில் அந்த ஆலயங்களுக்கு செல்வார்கள். இந்த ஆலயத்தில் ராகுகாலம் மட்டும் அல்லாது எந்த நேரத்திலும் இறைவனை வழிபட சனி ராகு தோஷ நிவர்த்தி ஆகும். அதையே சனைச்வரர் சன்னதி குறிக்கிறது.

சனி பகவான் நாக கொடை பிடிக்க அமர்ந்துள்ளார். இவரின் சிரசிலும் ராகு - கேது உள்ளது. வடக்கே காளகஸ்திக்கு சென்று வணங்க முடியாதவர்கள், தாமிரபரணி நதிக்கரையில் உள்ள இந்த காளகஸ்தி நாதரை வணங்கினால் வடகாளகஸ்திக்கு சென்று வந்த நற்பலன் கிட்டுகிறது. இங்கு வழிபட பிரம்மசாபங்கள் தீரும். கார்கோடன் எனும் நாகம் வழிபட்டு முத்தி அடைந்த தலம் .

இந்தப் பகுதியில் பாய்ந்தோடும் தாமிரபரணி ' மவுத்திக வாகிணி' என்று சிறப்பிக்கபடுகிறது. தாமிரபரணி நதிக்கரையில் நிறைய தீர்த்த கட்டங்கள் உள்ளன , அவற்றில் 'துர்வாசசேத்திரம்' என்று அழைக்கப்படுகிறது இப்பகுதி, இங்குள்ள நதிக்கரை துர்வாச தீர்த்தமாகும். இந்த தீர்த்தத்தில் நீராடினால் துர்வாச முனிவரின் ஆசியோடு இறைவனின் அருளை பெறலாம்.

கி.பி. 1842-ம் ஆண்டில் திருநெல்வேலி அருட்கவி நெல்லையப்பக் கவிராயர் எழுதிய திருநெல்வேலி தலபுராணத்தில் 30-வது சருக்கமாக அமைந்துள்ளது 'துர்வாசேஸ்வர சருக்கம்.' முதல் முப்பத்தாறு பாடல்களில், கரிசூழ்ந்தமங்கலம் என்னும் தாமிரபரணிகரையில் உள்ள கிராமத்தினை பற்றி கூறப்பட்டுள்ளது.

அதில் துர்வாச முனிவர் தாமிரபரணி நதியை மிகவும் புகழ்ந்து பாடியுள்ள வாக்கியங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

"தாமிரபரணி சாதாரண நதி அல்ல. இந்த நதி பெருமையுள்ள நதி. நித்ய மங்கல சுமங்கலி. என்றென்றும் மகிழ்வுடன் மங்களங்களை அளிக்கும் சுமங்கலியே, மலையத்தின் நிலவே, மலையில் தவழும் தென்றலுடன் பிறந்த நாயகியே, சீரும் சிறப்புமிக்க ஆற்றலுடன் வந்த தாமிரபரணி தாயே! பொருணை நதியே! புத்தம் புதிய அம்ருதம் தனைக் கொண்ட வானுலக நதியாக விளங்குபவளே! உன்னிடம் அடைக்கலம் அடைகிறேன்" என்று போற்றுகிறார்.


மேலும் "புனிதமான கங்கை எப்படி தன்னிடம் நீராடுபவர்களின் கடும் பாவங்களைக் களைந்து நற்கதியையும், அருளையும் கொடுக்கிறாளோ! அதைப் போலவே தன்னை நாடி வருபவர்களுக்கு நற்கதி தரும் அருளானவள்தான், தாமிரபரணி தாய். நிறைவு உயர்வான திருக்கயிலாய மலையில் இருந்து உம் மக்களிடம் நீ கொண்ட அன்பு காரணமாக பொதிய மலைக்கு வந்து மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் தாயே. பொருணையே உன்னிடம் சரணடைகிறேன்" என்று அவர் தாமிரபரணியை புகழ்ந்தார். தாமிரபரணியை, முப்பெரும் தேவியர்களான மலைமகள், திருமகள், கலைமகள் ஆகியோருடன் ஒப்பிடு கிறார். அதன்படி முறையே 'காரணியே.., நாரணியே.., பூரணியே..' என்று தாமிரபரணியை புகழ்கிறார், துர்வாசர்.

தாமிரபரணி நதியின் வலது கரை ஓரத்தில்இந்த ஆலயம் கோவில் கிழக்கு நோக்கிய அமைப்பு கொண்டது. இறைவன் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரராகவும், அம்மை ஞான அம்பிகாவாகவும் அருள்பாலிக்கின்றனர். சன்னதிக்கு எதிரே நந்தி மண்டபத்தின் இரு புறமும் கீழேசிவனுக்கு தனது கண்ணை கொடுத்த கண்ணப்ப நாயனார் கல்வெட்டு சிற்பம் உள்ளது. அம்மனின் விமானத்தில் துர்வாச முனிவர் சிவனை பூஜிப்பது போல மற்றொரு சிற்பம் காணப்படுகிறது. கோவிலுக்கு உள்ளே சண்டிகேஸ்வரர், தட்சிணா மூர்த்தி, சனி பகவான் ராகு- கேது, சனைச்வரர் சன்னதி உள்ளது.

இந்த ஆலயத்தில் பிரதோஷம், ஆவணி மாதம் வருஷாபிஷேகம், மாசி சிவராத்திரி உள்பட விழாக்கள் சிறப்பாக நடைபெறும்.இங்கு ஞாயிற்றுக் கிழமை தோறும் சர்பசாந்தி பூஜை நடக்கிறது. சர்ப சாந்தி பூஜை முடிந்து துர்வாச முனிவர் தீர்த்த கட்டத்தில் மூழ்கி எழுந்தால் நினைத்தது நிறைவேறுகிறது. இதற்காக ராகு- கேதுவால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து பரிகாரம் செய்கிறார்கள்.

நடை திறந்திருக்கும் நேரம் :

தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலும் நடை திறந்துவைக்கப்பட்டு இருக்கும்.

(அர்ச்சகர் தொடர்புக்கு :9442725977 )

எப்படி செல்ல ?

திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் 22கி.மீதொலைவில் உள்ளது பத்தமடை. இங்கு பேருந்து நிறுத்தம் உண்டு. அதிலிருந்து 4 கி.மீதொலைவில் கரிசூழ்ந்தமங்கலம் உள்ளது. பத்தமடையில் இருந்து பஸ் மற்றும் ஆட்டோ வசதியில் செல்லலாம்.

Updated On: 9 Jan 2021 3:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?