/* */

தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட என்ன வழி..

கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை 60 % அதிகரித்துள்ளது, 15 முதல் 45 வயது வரையிலான உயிரிழப்பு களுக்கு தற்கொலை ஒரு முக்கிய காரணம்

HIGHLIGHTS

தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட என்ன வழி..
X

நாம் தினமும் இறைவனிடம் வேண்டிக்கொள்வது நானும் என்னை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும் எந்த துன்பமும் இல்லாமல் வாழவேண்டும் என்பதாகவே இருக்கிறது.

இப்படி அனுதினமும் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்வில் முன்னோக்கி பயணிக்கும் பொழுது… பரிட்சையில் தோல்வியடைந்தால் தற்கொலை , அவமானத்தால் தற்கொலை , காதல் தோல்வியால் தற்கொலை, கடன் சுமையால் தற்கொலை , பனிச் சுமையால் தற்கொலை , பொருளாதார நெருக்கடியால் தற்கொலை ,வரதட்சணை கொடுமை , உடல்நலம் பாதிப்பால் தற்கொலை என்றும் பலபல தற்கொலை சாவுகள் நம் முன்னே வந்து மனதை கலங்கடிக்கிறது.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க இப்போது உள்ள நவீன காலத்தில் மொபைல் விளையாட்டில் தோல்வியால் தற்கொலை , ரம்மி விளையாட்டில் பணம் இழந்து தற்கொலை , சமீபத்தில் நாம் அனைவரும் செய்திகளில் பார்த்திருப்போம் குழந்தைகளை மையப்படுத்தி Blue Whale Challenge", "Momo Challenge விளையாட்டால் தற்கொலைக்கு தூண்டப்பட்டு தற்கொலை .. தனக்குப் பிடித்த நடிகர் படம் ஓடாததால் தற்கொலை , பிடித்த விளையாட்டு அணி தோற்று விட்டது அதனால் தற்கொலை என்று அதிர்ச்சிகரமான சில செய்திகள் அடிக்கடி நம் செவிக்குள் நுழைந்து இதயத்தை கலங்கவைத்து விடுகிறது.

இப்படி ஓடியாடி விளையாடி மகிழும் சின்னஞ்சிறுவர் முதல் … மலையையே தகர்த்து சாதிக்கும் இளம் பருவத்தினர் , குடும்பத்தை மேல்நோக்கி நகர்த்தி செல்லும் நடுத்தர வயதினர் என்று மகிழ்ச்சி ததும்பி வாழும் நம்மவர்களிடம் அவமானம், துரோகம், பணம் இழப்பு, தாங்க முடியாத உடல்வலி, தோல்வி என்று எத்தனையோ காரணங்கள் உள் ஊடுருவி நான் இனி வாழக்கூடாது தற்கொலை செய்யலாம் என்ற முட்டாள்தனமான முடிவிற்கு வந்துவிடுகின்றனர்.

நன்கு வாழ்ந்து பக்குவப்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட முதிர்ந்த வயதினர் கூட பிள்ளைகள் எங்களை கைவிட்டு விட்டனர் வாழ்வு தனிமைப் படுத்தி விட்டது போன்ற காரணங்களால் தற்கொலைக்கு தூண்டப் படுகின்றனர் . இது போன்ற முதிர் தற்கொலை கூட இந்த காலக் கட்டத்தில் அதிகரிக்கத் துவங்கி விட்டது .

உலகில், ஒரு வருடத்தில் 8,00,000 தற்கொலைகள் நிகழ்கின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஒவ்வொரு 40 நொடிக் கும் நாம் ஒரு உயிரை தற்கொலையினால் இழக்கின்றோம். தற்கொலை முயற்சிகளோ அதை விட 25 மடங்கு அதிகமாக இருக்கிறது . கடந்த 45 ஆண்டுகளில் தற்கொலை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. 15 முதல் 45 வயது வரை ஏற்படும் உயிரிழப்புகளுக்கு தற்கொலை ஒரு முக்கிய காரணம்.

நம்முடைய தாத்தா பாட்டி எல்லோரும் எத்தனையோ பஞ்சம் , பட்டினி, வறுமை வந்தபோதும் கூட அதை எதிர்த்து நின்று ஜெயிக்கும் மனவலிமையோடு போராடி வென்றிருக்கின் றனர். ஆனால், இன்றைய தலைமுறையினர் ஏன் இப்படி சின்ன விஷயங்களைக் கூட தாங்க முடியாத பூஞ்சை மனதோடு இருக்கின்றனர்..?!

இயற்கையிலேயே நம் ஒவ்வொருவருக்குள்ளிலும் சவால் களை சமாளிக்கும் தன்மை புதைந்து கிடக்கிறது. பின் ஏன் இப்படிப் பட்ட தற்கொலை எண்ணங்கள்…காரணங்களுள் ஒன்று , நாம் பிள்ளைகளை வளர்க்கும் முறை சரியில்லை.

சிறு தோல்வியைக் கூட தாங்கக்கூடிய மன உறுதி இன்றைய பிள்ளைகளிடம் இருப்பது இல்லை. கூட்டுக் குடும்பம் சிதைந்து தனிக் குடித்தனம் என்றான பின் குழந்தைகள் கைபேசியிலும் கணிணியிலும் மட்டுமே உலகை பார்க்கின் றனர்.. அது தவறு ,உலகம் என்பது வேறு என எடுத்துக் கூற வயதில் மூத்தோர் இல்லை.

கைபேசியும், கணிணியும் மட்டுமே உலகம் இல்லை . அதன் மூலம் வரும் நண்பர்கள் மட்டுமே நமக்கு உண்மையான மகிழ்ச்சிகளை கொடுப்பது இல்லை . சமூக வலைத்தளங் களில் பல விஷயங்களை பகிரும் நாம், நம்முடைய துக்கங்களையும், ஏமாற்றங்களையும் பகிர முடிகிறதா என்றால் இல்லை.

நம்மிடையே தற்கொலையை குறித்து சில தவறான புரிதல்கள் நிலவுகிறது. தற்கொலை எண்ணம் என்பது பல்வேறு சூழலில், எல்லா வயதினருக்கும் ஏற்படக் கூடிய எண்ணமே‚ தற்கொலை முயற்சிகள் முன்னெச்சரிக்கை ஏதுமின்றி நிகழ்ந்து விடுவதில்லை. மன அழுத்தம் மட்டும் 90 சதவீத தற்கொலைகளுக்கு காரணமாகிறது.

மது பழக்கத்தினால் தவறான முடிவுகளை தேடுகிறவர்கள் பலர். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களை தற்கொலை யால் இழந்தால், அவர்களுக்கும் அதே எண்ணம் ஏற்படுவ தற்கான மரபணு சார்ந்த ஆபத்து உண்டு. இதைத்தவிர, உளவியல் ரீதியான பிரச்னைகள் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம்.

இரவு, பகல் என்று மாறி, மாறி வேலை செய்ய வேண்டியிருக் கிறது. இதனால் சரியான நேரத்திற்கு, தேவையான அளவு தூங்க முடிவதில்லை. தொடர்ந்து சரியான தூக்கம் இல்லாவிட்டால், மன அழுத்தம் அதிகரித்து, தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக ஆய்வு உறுதி செய்கிறது.

எப்பொழுதும் எதார்த்தமான எண்ணங்களையே கையாள வேண்டும் இல்லாவிட்டால் நம்மையும் அறியாமல் ஏற்படும் மன அழுத்தம், காலப்போக்கில், பலவித உடல் பிரச்னைக ளையும், எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தும்.

பிரச்னைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. ஆனால், சில சிக்கல்கள் நம் அன்றாட வாழ்க்கை முறையையே சிதைத்து, `என்னடா வாழ்க்கை இது' என்ற விரக்தி ஏற்படுத்துகிறது , ஆயிரம் கோடி கணக்கில் கடன் கட்ட முடியாதவர்கள் எல்லாம் ஓஹோ என்று தானே வாழ்கிறார்கள்.

கோடி கணக்கில் கொள்ளை அடித்தவர்கள் எல்லாம் அமோக அந்தஸ்தில் தானே ஊர்வலம் வருகிறார்கள்… சாதாரண அற்ப விஷயத்திற்கு எல்லாம் தன்னை மாய்த்துக் கொள்வது தவறு தானே தற்கொலை எண்ணம் தோன்றும் போது தனக்கு நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களிடம் மனக் குறையைச் சொல்லிவிட வேண்டும்.

அல்லது இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு நமக்கு பிடித்த துணையுடன் சென்று வரவேண்டும். அதை விட்டுவிட்டு எதிர்மறை எண்ணங்களை மனதில் சுமந்து கொண்டு இருந்தால் பேராபத்து நிச்சயம். இந்தப் பிரபஞ்சத்தில் லட்சக்கணக்கான வாய்ப்புகள் கிடக்கிறது , அதையெல்லாம் சிந்தித்து நம்முடைய பிரச்னைகள் எதுவாக இருப்பினும் அதற்கு மாற்றுத் தீர்வுகளை ஆராய வேண்டும் .

தற்கொலை செய்து கொள்பவர்களிடம் ஏற்படும் மாற்றங்கள் :

பதற்றத்தை உண்டாக்கும் வகையில் ஒரு தற்கொலைச் செய்தியைக் கேள்விப்படும் போது , அடுத்த இரண்டு வாரங்களில் அதே மாதிரியான சூழலில் 13 சதவிகித தற்கொலைகள் அதிகரிக்கும் என்கிறது முக்கியமான புள்ளி விவரம் ஒன்று. அதாவது இந்த விஷயம் சிலரின் மனதில் எதிர்மறையான எண்ணங்களை உண்டாக்கும். பொதுவாக எந்த ஒரு தற்கொலைச் செய்தியாக இருந்தாலும், அவர்கள் எப்படி இந்தத் துயர முடிவைத் தேடிக்கொண்டனர் என்பதை ஆராய துவங்கி விடுகிறார்கள் .

சரியாக தூங்க மாட்டார்கள் சரியாகச் சாப்பிடாமல் இருப்பது அல்லது அதிகம் சாப்பிடுவார்கள் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள் .கடவுளே கதி என்று இருப்பவர்கள் கடவுள் நம்பிக்கை இழந்து காணப்படுவார்கள்.வழக்கத்துக்கு மாறாகக் குணநலன்களில் இருப்பார்கள் அதிக கோபப்படு வார்கள் .தனிமையை தேடுவார்கள், தடாலடியாக முடிவெடுப்பார்கள் .

தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் பிரச்னையை ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தி உதவி கேட்கும் பொழுது அவர்கள் மனம் முழுமையாக நம்பிக்கைக்குரியவராகிய நாம் , அந்த நபருக்குத் தற்கொலை எண்ணம் ஏன் வந்தது என்பதையும், அவரின் உணர்வுகளையும் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பதை அறிய வெளிப்படையாக பேசிவிட வேண்டும் .நாம் தற்கொலைப் பற்றி பேசுவதால் ஒருவர் தற்கொலைக்கு தூண்டப்படுவாரோ என்ற பயம் இருக்க கூடாது . அவருக்கு இருப்பது பணம், பொருள், படிப்பு, உடல், மனம், வேலை என எது சம்பந்தப்பட்ட பிரச்னையாகவும் இருக்கலாம்.

அந்தச் சிக்கல் லாஜிக் ஆனது அல்லது லாஜிக் இல்லாதது என ஆராய்வதை விட்டு அவரை நாம் முழுமையாகப் புரிந்து கொண்ட உணர்வுடன், `உனக்கு நான் பக்கபலமா இருக்கேன்' என்ற நம்பிக்கையை அவரது மனதில் ஆழமாக விதைக்க வேண்டும். பக்க பலமாக இருக்க வேண்டும்.

பின்னர், சம்பந்தப்பட்ட நபரின் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கான எல்லாவிதமான ஆலோசனைகளையும் எடுத்து கூற வேண்டும். . நம்முடைய அணுகுமுறையில் அவர்கள் எமோஷனல் ஆகாமல் நம்பிக்கையுடன் முடிவெடுக் கும் தன்மைக்கு மாற்றிவிடலாம்.

அதன் பிறகு இயல்புநிலைக்குத் திரும்பி, தற்கொலை எண்ணத்திலிருந்து அவரே விடுபட்டு விடுவார்கள் . அதுவும் கை கொடுக்காத நிலையில் அதீத மன அழுத்தத்தில் இருக்கும் அவர்களை , மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் . அவர்களை நாம் கையாளும் பொழுது அவர்களுக்கு எந்தவித அவமான எண்ணத்தையும் கொண்டு சேர்த்து விட கூடாது.

சட்டத்தின் பார்வையில், தற்கொலை முயற்சி குற்றமாக பார்க்கப்பட்ட காலம் இப்போது இல்லை, அது சிகிச்சை தரப்பட வேண்டிய மனரீதியான சிக்கல் என்றே கருதப்படுகிறது. தற்கொலை தடுக்கப்படக் கூடிய ஒன்றுதான். நம்பிக்கையும் ஒற்றுமையும் தான் தற்கொலையின் எண்ணிக்கையையும், தாக்கத்தையும் குறைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை

அனைவருமே சாதிக்க பிறந்தவர்கள், தற்கொலை செய்து கொள்ள அல்லதற்கொலை என்பது சமூகம் செய்யும் கொலை என்பதே என் கருத்து. தற்கொலைப் பற்றிய விழிப்புணர்வை, நம் சமூக வட்டத்தில் ஏற்படுத்த வேண்டும்.தற்கொலை தடுக்க இலவச ஆலோசனை மையம் எல்லா இடத்திலும் இருக்க வேண்டும்.எந்த நிலையிலிலும் நம்முடைய சொல் ஒருவரு டைய மனதை பாதித்து விட கூடாது.உனக்கு நான் இருக்கிறேன்உன் வாழ்க்கை இருட்டல்ல என்று அவர்களுக்கு நம்பிக்கை ஒளி காட்ட வேண்டும்.

நன்றி ~ ஈரநெஞ்சம் மகேந்திரன்.

Updated On: 29 Sep 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  2. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  3. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  4. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  9. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்