/* */

சிவகாசி அருகே லோடு மேன் கொலை வழக்கில் 6 பேர் கைது

சிவகாசி அருகே லோடுமேன் கொலை... சம்பவத்தில் தொடர்புடைய அதிமுக, திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட 6 பேர் அதிரடி கைது..

HIGHLIGHTS

சிவகாசி அருகே லோடு மேன் கொலை வழக்கில் 6 பேர் கைது
X

ganja news in tamil-கைது கார்ட்டூன் படம்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சேனையார்புரம் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் அரவிந்தன் என்கிற பார்த்தீபன் (27). இவர் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி அரவிந்தன் மற்றும் அவரது நண்பர் துரைப்பாண்டி (27) இருவரும், எம்.புதுப்பட்டி அருகேயுள்ள கள்ளிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு குடோனுக்கு சென்று சரக்குகள் இறக்கும் பணிகளை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சிவகாசிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது காட்டுப்பகுதியில் மறைந்திருந்த சிலர், அரவிந்தனை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். துரைப்பாண்டிக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனலிக்காமல் அரவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். சிகிச்சை பெற்ற துரைப்பாண்டி குணமடைந்து வீடு திரும்பினார். துரைப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில், எம்.புதுப்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிவகாசி முத்துராமலிங்கம் நகரை சேர்ந்த அருண்பாண்டியன் (31), பார்த்தீபன் (32), முத்துகிருஷ்ணன் (23), பழனிசெல்வம் (37), பாண்டியராஜ் (19), மாரீஸ்வரன் (19), மதன் (32), நேருஜிநகரைச் சேர்ந்த மாரீஸ்வரன் (27), ரிசர்வ்லைன் சிலோன் காலனியைச் சேர்ந்த ஹரிகுமார் (21) மற்றும் 18 வயது சிறுவன் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கொலை சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் பாபுபிரசாந்த் உத்தரவின் பேரில், ஏற்கனவே பிடிபட்டவர்களின் செல்போன்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகித்த சிலரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த சம்பவத்தில் ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவரும் , அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருமான லட்சுமிநாராயணன் (38), தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் பிரவீன் (35), தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் அந்தோணிராஜ் (35), முத்துராமலிங்கம் நகர் பொன்ராஜ் (25), சௌந்தர் (25), சமத்துவபுரம் காலனி ஜோதிலிங்கம் (22), ஆகிய 6 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சுமைதூக்கும் தொழிலாளி கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சுமைதூக்கும் தொழிலாளி படுகொலை சம்பவத்தில் அதிமுக, திமுக கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 7 Jun 2022 3:57 PM GMT

Related News