/* */

வடகிழக்கு பருவ மழை தீவிரம்; பள்ளிகளுக்கு விடுமுறை

Vada Kilakku Paruva Malai -விழுப்புரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

வடகிழக்கு பருவ மழை தீவிரம்; பள்ளிகளுக்கு விடுமுறை
X

கொட்டும் மழையில், விழுப்புரம் நகர மக்கள் நனைந்தபடி பயணம் செய்தனர்.

Vada Kilakku Paruva Malai -விழுப்புரம் மாவட்டத்தில், தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை கடந்த 29-ம் தேதி முதல் தொடங்கி, பரவலாக பெய்து வருகிறது. இதனிடையே வடஇலங்கை கடற்கரை பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், வருகிற 4-ம் தேதி வரை, தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும், நள்ளிரவில் மழை பெய்த நிலையில் நேற்றும் இந்த மழை நீடித்தது. விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், காலை 10 மணி முதல் மிதமான மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை 11.30 மணி வரை இடைவிடாமல் தூறிக்கொண்டே இருந்தது. இதனால், மக்கள் நடமாட்டம் குறைந்தது.

அதன் பிறகு சில மணி நேரம் மழை ஓய்ந்த நிலையில், மீண்டும் மாலை 3 மணிக்கு மேல் மிதமான மழை பெய்தது. இந்த மழை, இரவு வரை விட்டுவிட்டு தூறிக்கொண்டே இருந்தது. இதனால் மாணவ-மாணவிகளின் சிரமத்தை போக்கிடும் வகையில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே பாட வேளை முடிக்கப்பட்டு மாணவ- மாணவிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மழையின் காரணமாக, சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது. பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் குடைபிடித்தபடி சென்றனர். அவ்வப்போது விட்டுவிட்டு சாரல் மழை தூறிக்கொண்டே இருந்ததால் இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தவாறு சென்றதை காண முடிந்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் பலர் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்ததால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருவதால், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. கடந்த காலங்களில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மழை வெள்ளம் ஏற்பட்டால் மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் ஊழியர்கள் இருக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் கிராம மக்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கவும் உரிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்டம் முழுவதும், தயார் நிலையில் உள்ளது, அதனால் இன்று மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Nov 2022 6:12 AM GMT

Related News