/* */

"கிராமத்து பாட்டுக்காரன்" நொச்சிப்பட்டி திருமூர்த்தி..! போராடி சாதித்த ஒரு இளைஞனின் கதை..!

கண் பார்வை இரண்டும் இழந்த அந்த கிராமத்து பாட்டுக்கார தம்பி நொச்சிப்பட்டி திருமூர்த்தி, தன்னம்பிக்கையை மட்டும் இன்னும் இழக்கவில்லை...! காரணம், அதுதான் அந்த இளைஞனின் முகமாகவும், அடையாளமாகவும் இருக்கிறது.

HIGHLIGHTS

கிராமத்து பாட்டுக்காரன் நொச்சிப்பட்டி திருமூர்த்தி..! போராடி சாதித்த ஒரு இளைஞனின் கதை..!
X

உலக நாயகன் பத்மஸ்ரீ நடிகர் கமலஹாசனுக்கு பிளாஸ்டிக் குடத்தில் தாளம் தட்டி, பத்தல, பத்தல பாடலை பாடி காண்பிக்கும் நொச்சிப்பட்டி கிராமத்து பாட்டுக்காரன் திருமூர்த்தி. 

2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏதோ ஒரு மாதம் அது. அந்த மாதத்தின் ஒரு நாள் வயல் வெளியில், கிழிந்த பாயில், ஏழ்மையான வீட்டின் மண் தரையில்,அமர்ந்து அந்த இளைஞர் கையில் ஒரு குடத்துடன் தாளம் போட்டு பாட்டு ஒன்றை பாடினார். அந்த பாடல் தான், நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான விஸ்வாசம்-கண்ணான கண்ணே...

இசையமைப்பாளர் இமான் இசையில் இருந்த குழைவும், வரிகளில் இருந்த மிதமிஞ்சிய சோகமும், அதனை டிக்டாக்கில் பாடி குடத்தில் தட்டித்தட்டி, தாளம் போட்ட அந்த இளைஞனின் முகமும் தமிழக மக்கள் மனதை பிசைந்து, அப்படியே வேப்பமர பிசின் போல ஒட்டிக்கொண்டது. அதனால் தான், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அஜீத் ரசிகர்கள் அந்த பாடகனை வெகுவாக கொண்டாடினார்கள். அப்படி பிரபலமான அந்த கிராமத்துப்பாட்டுக்காரன் தான் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா, நொச்சிப்பட்டி திருமூர்த்தி.

திருமூர்த்தியின் தொடர்பு விவரங்கள் யாரிடமாவது இருக்கிறதா? என உடனடியாக ட்விட்டரில் இசையமைப்பாளர் இமான் பதிவு போட்டார். சில வாரங்களுக்குப் பிறகு, இமானின் அடுத்த படத்தில் இளைஞன் திருமூர்த்தி பின்னணி பாடகராக அறிமுகம் செய்யப்படுவார் என அறிவிப்பு வெளியானது.

2019 ஆம் ஆண்டு ஜீவா நடித்த 'சீரு' படத்திற்கான பாடலின் மூலம் திருமூர்த்தியை பின்னணி பாடகராக அறிமுகப்படுத்தினார். 2019 அக்டோபர் 23-ல் இசையமைப்பாளர் இமானின் டுவிட்டர் பதிவு ஆங்கில வாசக தமிழ் அர்த்தம் இது தான். அனைவருக்கும் நல்ல நாள். தம்பி நொச்சிப்பட்டி திருமூர்த்தியை பின்னணிப் பாடகராக அறிமுகம் செய்வதில் மகத்தான மகிழ்ச்சி. அடுத்து வெளிவரவிருக்கும் ஜீவா நடிக்கும் சீருவில் திருமூர்த்தி பாடுகிறார் என அவர் அறிமுகம் செய்தார்.

மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்தே' படத்தில் பாடகர் திருமூர்த்தியை பயன்படுத்தினார். 'வா சாமி' என்னும் பாடலை பின்னணிப் பாடகர் முகேஷ் முகமது, இணைய உணர்வாளரும் பாடகருமான நொச்சிப்பட்டி திருமூர்த்தி மற்றும் மற்றொரு புதிய பாடகர் கீழக்கரை சம்சுதீன் ஆகியோர் பாடினர்.

இப்படத்தின் மூலம், மேலும் பிரபலமான பாடகர் திருமூர்த்தி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தில் பாடுவதற்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர் டி இமானுக்கு நன்றி தெரிவித்தார். பாடலின் டீஸர் வீடியோவைப் பகிர்ந்த அவர், இமான் இசையமைப்பாளர் சார், எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு ஜாம்பவான் ரஜினிகாந்துக்காக பாடுவது எனது வாழ்நாள் கனவு. இது என் வாழ்நாளில் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என நெகிழ்ந்திருந்தார்.

இந்த பின்னணியில் தான் மீண்டும் பத்தல, பத்தல பாடல் மூலம் திருமூர்த்தி முகத்தில் டார்ச் லைட் வெளிச்சம் பாய்ந்துள்ளது. ஆமாம். நடிகர் கமல் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போடும் விக்ரம் படத்தின் 'பத்தல பத்தல' பாடலைப் பாடி தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார், திருமூர்த்தி.

கண்ணான கண்ணே போலவே, வலை தளங்களில் வைரலான அந்த வீடியோ கமல் கவனத்திற்கு சென்றது. இதனால் நெகிழ்ந்தும், மகிழ்ந்தும் போன உலக நாயகன் கமல், திருமூர்த்தியை நேரில் அழைத்து தோளில் தட்டி பாராட்டினார். ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பள்ளியில் திருமூர்த்தி முறையாக இசை கற்க ஆகும் அனைத்து செலவையும் கமல் ஏற்றுக்கொண்டார்.

அந்த சந்திப்புக்கு முந்திய நாள் தான், நாளை நீங்க சென்னைக்கு வர முடியுமா? என கமல் தரப்பில் போனில் கேட்டுள்ளனர். மறுநாள் சந்திப்பு நடந்துள்ளது. பிளாஸ்டிக் குடம் தான் திருமூர்த்தி இன்ஸ்ட்ரூமெண்ட் என தெரிந்த கமல், அதனை வாசிக்க எடுத்து வரக் கூறியுள்ளார். அப்போது, பார்த்து... தண்ணியோடு குடத்த எடுத்து வந்திராதீங்க-னு கமல் தனக்கே உரிய பாணியில் காமெடி செய்துள்ளார்.

ஜூலை 11 ஆம் தேதி முதல் பிரபல இசையமைப்பாளர் ரஹ்மான் இசைப்பள்ளிக்கு திருமூர்த்தி முறைப்படி இசை கற்க செல்கிறார். இந்த இசைப்பயணம் நொச்சிப்பட்டியின் வயற்காட்டில் இருந்து தலைநகர் சென்னைக்கு இமான் மூலம் தொடங்கியுள்ளது. திருமூர்த்தி தமிழ்ச்சினிமாவில் இன்னும் நெடுந்தூரம் பயணிப்பார்; சாதிப்பார்.

வடமாநிலம் மேற்கு வங்க ரயில் நிலையத்தில் லதா மங்கேஷ்கர் பாடலை பாடி, பிச்சை எடுக்கும் பெண் ராணு மோண்டல் பற்றிய செய்தியும் வீடியோவும் வைரல் ஆனது. அதைத் தொடர்ந்து ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது.

அத்துடன் நிற்கவில்லை...

நடிகர் -இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷம்மியா ஹேப்பி ஹார்டி அண்ட் ஹீர் படத்திற்காக அவரைப் பாட வைத்தது. இதேபோல தற்போது தெற்கில் கோடம்பாக்கத்தில் ஒரு கிராமத்து பாட்டுக்காரன் திருமூர்த்தி வாழ்க்கையின் மீது இத்துணை புகழ் வெளிச்சம் விழுவதற்கு இசையமைப்பாளர் இமான் அளித்த வாய்ப்பும், இமானின் இளகிய இதயமுமே காரணம்..!

உங்களுக்கு ஒரு சல்யூட் இமான் சார்..!

அதுசரி..

ரஜினி, கமல், ஏ.ஆர்.ரஹ்மான், இமான், யுவன் என பயணிக்கும் இத்துணைக்கு பிறகும் நொச்சிப்பட்டி திருமூர்த்தியை கொண்டாடுவதில் தமிழ் ஊடகங்கள் மவுனித்து கிடப்பது ஏன்? மில்லியன் டாலர் கேள்விகள்..!

Updated On: 4 July 2022 10:39 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!