/* */

மனசாட்சி இல்லாத 'குடி'மகன்கள்: பரிதவிக்கும் பள்ளி நிர்வாகங்கள்

மனசாட்சி இல்லாத குடிமகன்களின் கேவலமான செயல்களால் பல அரசு பள்ளி நிர்வாகங்கள் பரிதவித்து வருகின்றன.

HIGHLIGHTS

மனசாட்சி இல்லாத குடிமகன்கள்: பரிதவிக்கும் பள்ளி நிர்வாகங்கள்
X

பைல் படம்.

வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகள் பெருகி வரும் நிலையில், அனுமதியற்ற மதுபார்களின் எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தவிர அனுமதியில்லாமல் பாட்டில் விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் 24 மணி நேரமும் தாராளமாக மதுபாட்டில்களை வாங்க முடியும்.

இப்போது பார்களை கட்சிக்காரர்கள் நடத்தி வருவதால், பார்களில் ஸ்நாக்ஸ்களின் விலைகள் எல்லாம் சற்று அதிகமாகவே விற்கப்படுகிறது. அதாவது பாட்டில் வாங்க எவ்வளவு செலவு செய்ய வேண்டி உள்ளதோ, அதற்கு இணையாக ஸ்நாக்ஸ் செலவுகளும் ஆகி விடுகின்றன. வெளியில் கிடைக்கும் சிக்கன், மட்டன், குடல் கிரேவிகள், பொறியல், ரத்த பொறியல், முட்டை பொறியல், அவித்த முட்டை, முட்டை கிரேவி, கப்பைக்கிழங்கு, பயறு வகைகள், ஊறுகாய், தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர் இவற்றின் விலைகளை விட பார்களில் கிடைக்கும் பொருட்களின் விலைகள் இரு மடங்கு வரை அதிகமாக உள்ளது. தரமும் மிக குறைவு. சுகாதாரமோ மிக, மிக குறைவு. அதேபோல் மதுபார்களில் குடித்து விட்டு, போதையுடன் வாகனம் ஓட்டிக் கொண்டு வீடுகளுக்கு செல்ல முடியவில்லை. அந்த அளவு போலீஸ் கெடுபிடி, அபராதம் என பல தொல்லைகள் உள்ளன.

இந்த சிக்கலுக்கு எல்லாம் தீர்வாக, தேவையான தரமான ஸ்நாக்ஸ்களை வெளியில் வாங்கிக் கொண்டு, பாட்டில் வாங்கிக் கொண்டு அமைதியான இடமாக அமர்ந்து மது அருந்த குடிமகன்கள் தேர்வு செய்யும் இடம் அரசு பள்ளிகள். இரவு நேரத்தில் யாருடைய தொல்லைகளும் கிடையாது. தண்ணீர் வசதி உள்ளது. பாத்ரூம், டாய்லெட் வசதி உள்ளது. அமர்ந்து மது அருந்த குளிர்ந்த காற்றுடன், இருளடைந்த சூழல் உள்ளது. இதனால் பள்ளிகளுக்குள் சென்று மது அருந்துகின்றனர்.

இவ்வளவும் போதை ஏறும் வரை தான். போதை ஏறியதும் அவர்கள் செய்யும் அலம்புகள் தாங்க முடியவில்லை. பள்ளி வளாகம் என்ற நினைப்பையே மறந்து வெட்ட வெளியில் மலம் கழித்து விடுகின்றனர். வாந்தி எடுத்து விடுகின்றனர். பாத்ரூம்களை பயன்படுத்தாமல் கண்ட இடங்களில் சிறுநீர், மலம் கழித்து வாந்தி எடுத்து பள்ளி வளாகத்தை அல்லோகலப்படுத்தி விடுகின்றனர். இன்னொரு விஷயத்தை சொன்னால் வாசகர்கள் மனது தாங்காது என்பதால் சொல்லாமல் மறைத்துள்ளோம்.

தண்ணீர் தொட்டியை உடைத்து விடுகின்றனர். தண்ணீர் தொட்டியின் மேல், மலம், சிறுநீர் கழித்து விடுகின்றனர். மறுநாள் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் அலறி விடுகின்றனர். ஆசிரியைகள் கண்ணீர் வடித்த காட்சிகளும் கூட உண்டு. இப்போது உள்ள சூழலில் பள்ளி மாணவ, மாணவிகளை இந்த அசிங்கங்களை சுத்தம் செய்யும் பணிக்கு பயன்படுத்த முடியாது. அப்படி பயன்படுத்தினால் அந்த ஆசிரியர் வேலையிழந்து சிறை செல்ல நேரிடும். எனவே ஆசிரியர்களும், ஆசிரியைகளும், பள்ளி பணியாளர்களும் தான் இதனை சுத்தம் செய்கின்றனர்.

தினம், தினம் இந்த சித்திரவதைகளை அனுபவிக்கும் ஆசிரியைகள் எப்படி மனதை ஒருநிலைப்படுத்தி, பாடம் நடத்த முடியும். இந்த பிரச்னை தேனி மாவட்டத்தில் மட்டுமல்ல; மதுரை, விருதுநகர், திண்டுக்கல் என பல மாவட்டங்களில் உள்ளது. வடமாவட்டங்களின் நிலை பற்றி தெரியவில்லை.

இந்த சிக்கலை தீர்க்க ஒரே வழி, இரவு போலீஸ் ரோந்தின் போது, போலீசார் திடீரென பள்ளிகளுக்குள் சென்று, அங்கு தங்கி மது அருந்தும் குடிமகன்களை கைது செய்து, அவர்கள் செய்யும், அசிங்கத்தை செய்தது இவர்கள் தான் ஊர் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்களையும், ஆசிரியைகளையும், மாணவ, மாணவிகளையும் மனதளவில் சித்திரவதை செய்த பிரிவில் கைது செய்து, கடும் தண்டனை வழங்க வேண்டும். இப்படி அசிங்கப்படுத்தினால் தான், இது போன்ற இரக்கமற்ற குடிமகன்களை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Updated On: 2 Dec 2022 2:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி