சொந்தக்கட்சியால் சூனியம் வைக்கப்பட்ட இரண்டு தமிழக அமைச்சர்கள்

சொந்தக்கட்சியால் சூனியம் வைக்கப்பட்ட இரண்டு தமிழக அமைச்சர்கள் பற்றி அறிய இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க. வை வீழ்த்த மத்திய பாரதிய ஜனதா அரசு பல வகைகளிலும் முயன்று வருகிறது. ஆனால் அது எடுக்கும் முயற்சிகள் எதுவும் இதுவரை பலன் அளிக்கவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே தி.மு.க. வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என பா.ஜ.க. போட்ட கணக்கு பலிக்காமல் போனதால் அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டதன் விளைவு தான் தி.மு.க.வுக்கு எதிராக பரப்பப்பட்டு வரும் பிரச்சாரங்கள். தி.மு.க. உடைக்கப்படும் தி.மு.க.விலிருந்து சில எம்.எல்.ஏ.க்கள் மூத்த அமைச்சர் ஒருவர் தலைமையில் விலகி பா.ஜ.க. விற்கு ஆதரவு கொடுப்பார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய ஆட்சி உருவாகும் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது.

இது உண்மையா, அப்படி ஒரு திட்டம் இருக்கிறதா? அப்படி இருந்தாலும் வலுவான ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக உள்ள தி.மு.க.வில் இருந்து ஒரு சட்டமன்ற உறுப்பினரை கூட பா.ஜ.க.வால் தங்கள் பக்கம் இழுத்துச் செல்ல முடியுமா? என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வியாகும். இது ஒருபுறம் இருக்க மத்திய அரசு தனது வழக்கமான மிரட்டல் பாணியை கையில் எடுத்திருக்கிறது. அந்த மிரட்டல் பாணியில் சிக்கியிருக்கிறார்கள் தமிழகத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்கள். அவர்கள் வேறு யாரும் அல்ல ஒருவர் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டமான திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் தற்போது தமிழக அரசில் மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக இருக்கிறார். இன்னொருவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் பாலாஜி. இவர் தமிழக அரசின் மின்வாரியத்துறை அமைச்சராக உள்ளார். இரண்டு பேருமே கட்சியில் மாவட்ட பொறுப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். மற்ற அமைச்சர்களில் இருந்து இந்த இருவருக்கும் நிறைய வேறுபாடு உண்டு. ஏனென்றால் இவர்கள் இருவருமே அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள். அதன் பின்னர் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.க.விற்கு தாவியவர்கள்.

செந்தில் பாலாஜி ஜெயலலிதா அமைச்சரவையில் 2011 முதல் 16 வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் போக்குவரத்து துறையில் டிரைவர், கண்டக்டர் பணியாளர் நியமனத்திற்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு பணி நியமனம் செய்ததாக கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்தது வேறு யாரும் அல்ல. தி.மு.க. தரப்பில் தான் இந்த இந்த வழக்கு தொடரப்பட்டது. காலச்சக்கரம் வேகமாக சுழன்றது. ஜெயலலிதா மறைந்தார். கட்சியில் ஏற்பட்ட பிளவு, அசாதாரண சூழல்கள் காரணமாக செந்தில் பாலாஜி முதலில் டி.டி.வி.தினகரனுடன் பவனி வந்தார். பின்னர் அங்கிருந்து அதிரடியாக விலகி தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். இணைந்ததோடு மட்டுமல்ல அந்த கட்சியிலும் தனது செல்வாக்கை பயன்படுத்தி தற்போது வலுவான அமைச்சராக இருக்கிறார். அத்துடன் தி.மு.க.வின் கொங்கு மண்டல பொறுப்பாளராகவும் உள்ளார். இதன் காரணமாக கட்சியில் மூத்த அமைச்சர்களே வியக்கும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் உள்ளன.

இதற்கிடையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர்ந்தவர் அவரது வழக்கை வாபஸ் வாங்கி விட்டதால் சென்னை ஹைகோர்ட் இந்த வழக்கை ரத்து செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்கியதாக பதிவு செய்யப்பட்ட பின்னர் அதனை வழக்கு தொடுத்தவரே திரும்ப பெற்றாலும் சட்டப்படி அது தவறு. ஆதலால் இந்த வழக்கை மீண்டும் சென்னை ஐகோர்ட்டு விசாரிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது. ஆக செந்தில் பாலாஜி மீதான வழக்கு மீண்டும் நடைபெறும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அவர் தற்போது அமைச்சர் பதவியில் இருந்தாலும் அவருக்கு எதிரான இந்த வழக்கில் சட்டப்படி சரியான தண்டனை கிடைக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். இதனால் அவரது தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கின் விசாரணைகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. எனவே மத்திய அரசின் கழுகு பார்வையில் இருந்து அவர் தப்ப முடியாது என்பது மட்டும் உண்மை. ஒட்டுமொத்த தி.மு.க. அரசையே மிரட்டுவதற்கு மத்திய அரசு இதனை ஒரு வலுவான ஆயுதமாக பயன்படுத்தலாம்.

அடுத்து அனிதா ராதாகிருஷ்ணன். தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ராதாகிருஷ்ணனின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது எல்லாம் நான்மாடக்கூடல் எனப்படும் மதுரை நகரில் தான். மதுரையில் அனிதா மெட்டல் என்ற பெயரில் பாத்திர வியாபாரம் செய்து வந்த அவருக்கு ஏற்பட்ட அரசியல் ஆர்வத்தின் காரணமாக அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக களம் இறங்கினார். ஆரம்பத்தில் அவருக்கு எல்லாமே டி.டி.வி. தினகரன் தான் அரசியல் குருவாக இருந்தார்.அதன் விளைவாக 2001 முதல் 2006 வரையிலான ஜெயலலிதா அமைச்சரவையில் அவர் கால்நடை பராமரிப்பு துறையில் அமைச்சர் பதவி வகித்து வந்தார்.அப்போது அவர் மீது அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த தி.மு.க. தரப்பால் வழக்கு தொடரப்பட்டது. மத்திய அமலாக்க துறையும் விசாரணை நடத்தியது. இதில் அவரது குடும்பத்திற்கு சொந்தமான ரூ. 6.5 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் முதலில் அமலாக்க துறையின் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் அந்த தடை நீக்கப்பட்டு விட்டது. கால சக்கரத்தின் சுழற்சியில் அனிதா ராதாகிருஷ்ணன் தன்னை பாதுகாத்துக் கொள்ள தி.மு‌.க.வில் இணைந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் தற்போது தி.மு.க. அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்து வருகிறார். ஆனாலும் அவர் மீதான வழக்குகள் தொடர்ந்து அவருக்கு நெருக்கடியை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. மாநில அரசிலும் அவர் மீது வழக்கு உள்ளது. மத்திய அமலாக்க துறையிலும் வழக்கு உள்ளது. இந்த இரண்டு வழக்குகளில் இருந்தும் அவர் தப்புவது மிக கடினம் என கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜி,அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய இந்த இரண்டு பேருமே அ.தி.மு.க., தி‌.மு.க. என மாறி மாறி பதவி வகித்து வந்திருக்கிறார்கள். அதுதான் இப்போது அவர்களுக்கு பிரச்சினையாக இருந்து வருகிறது. தி.மு.க. ஆட்சியின் போது தொடரப்பட்ட வழக்குகள் தான் இப்போது அவர்களுக்கு தலைக்கு மேல் கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது. கிராமப்புறங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வது என்பது தான் அந்த பழமொழி. அதேபோல இன்றயை சொந்த கட்சியால் அன்று அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் தான் இன்று அவர்களுக்கு சூனியமாக வந்துவிட்டது என கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இந்த வழக்குகளை வைத்து தி.மு.க. அரசை மிரட்ட பார்க்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. இதன் காரணமாக வரும் காலங்களில் அதாவது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே தமிழக அரசியல் களத்தில் எதிர்பாராத அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என்றும் டெல்லி தரப்பு வட்டாரங்கள் கூறுகிறது. மத்திய பா.ஜ.க. அரசின் பிடியிலிருந்து இந்த இரண்டு அமைச்சர்கள் மட்டுமல்ல இன்னும் சில அமைச்சர்களும் தி.மு.க. அரசும் எப்படி வெளியே வரப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Updated On: 19 Sep 2022 1:04 PM GMT

Related News