திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா
திருவண்ணாமலை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்
HIGHLIGHTS

அண்ணாமலையார் கோயிலில் உள்ள ஸ்ரீ சம்பந்த விநாயகர்
இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏராளமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரசாயனக்கழிவுகள் மற்றும் பிளாஸ்ட் ஆப் பாரிஸ் பவுடரைக் கொண்டு விநாயகர் சிலை தயாரிக்க அரசு தடை விதித்துள்ளதால், பெரும்பாலும் களிமண் மற்றும் எளிதில் கரையும் பொருட்களைக் கொண்டு இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஒரு அடி உயரம் முதல் சுமார் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆவலுடன் வாங்கிச் சென்று வீடுகளிலும், பொது இடங்களிலும் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள ஸ்ரீ சம்பந்த விநாயகர் சன்னதியில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. இன்று அதிகாலை மூலவர் சம்பந்த விநாயகருக்கு பால், பழம், பன்னீர், தயிர் உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருட்களை பயன்படுத்தி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து தங்க கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாளிக்க சம்பந்த விநாயகருக்கு சிவாச்சாரியார்கள் மகா தீபாரதனை காண்பித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இரவு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உற்சவர் விநாயகர் கோயில் மாட வீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இரட்டை பிள்ளையார் கோவில், கோபால விநாயகர், ஶ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் உள்ள செழிஞ்சுடர் விநாயகர், கிரிவல பாதையில் உள்ள கற்பக விநாயகர் ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் பெருமான் அருள் பாலித்தார்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் திரண்டனர். அவல், பொரி, பழ வகைகள், சோளம், பூக்கள், பூஜை பொருட்களை, திருவூடல் தெரு, தேரடி வீதி உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் உள்ள கடைகளில், மக்கள் ஆர்வமாக வாங்கிச் சென்றனர்.
நகரின் பல்வேறு பகுதிகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் பல்வேறு வண்ணங்களில், பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்பட்டன. இதனை பொதுமக்கள் மிகவும் ஆர்வமாக பார்வையிட்டு வாங்கி சென்றனர். மேலும் விநாயகர் சிலைகளை அலங்காரிப்பதற்காக சிறிய வண்ண அலங்கார குடைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் ஸ்ரீ சுந்தர விநாயகருக்கு, கொழுக்கட்டை, சுண்டல், கரும்பு பொறி உள்ளிட்ட உணவு பொருட்களை வைத்து படையிலிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினம் செய்தனர்.
மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறையினர் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.