/* */

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
X

மிகவும் பழுதடைந்துள்ள தெற்கு கோபுர கிரிவல சாலை

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலையை சுற்றும் பாதையில் கிரிவலம் செல்வார்கள்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.16 மணிக்கு தொடங்கியது. இதனால் நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். பகலில் வெயில் குறைந்து காணப்பட்டதால் பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

மேலும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும், அருணாசலேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதால் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தற்காலிக பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

இன்று காலை 9 மணி அளவில் பவுர்ணமி நிறைவு பெறுவதால் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். நாளை முதல் மூன்று நாட்கள் திங்கட்கிழமை வரை விடுமுறை தினம் என்பதால் கிரிவலம், அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று தரிசித்து விட்டு மீண்டும் கிரிவலம் தொடங்கும் பக்தர்கள் திருமஞ்சனம் கோபுரம் வழியாக அதாவது தெற்கு கோபுரம் வழியாக கோவிலில் இருந்து வெளிவருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மாட வீதி முழுவதும் கான்கிரீட் சாலைகள் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இதனால் அந்த சாலை முழுவதும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அந்த சாலையில் பக்தர்கள் நடந்து வருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். குறிப்பாக வயதானவர்கள் சிறுவர்கள் வெறும் காலோடு காலணிகள் அணியாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதை காண முடிந்தது. சாலை பணிகள் முடியும் வரை பௌர்ணமி தினம் மட்டும் ஆவது கோவிலை சுற்றி உள்ள சாலையில் மணல்களை கொட்டி தற்காலிகமாக வழிவகை செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 12 Aug 2022 1:10 AM GMT

Related News