கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சகோதரர்கள் புகார்
கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சகோதரர்கள் புகார் அளித்தனர்.
HIGHLIGHTS

கந்துவட்டி கொடுமையால் பாதிப்பு; போலீசில் புகார் (கோப்பு படம்)
கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சகோதரர்கள் புகார் அளித்தனர்.
செங்கம் அருகே மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன்கள் மகேந்திரன், ஜெயக்குமார். இதில் மகேந்திரன் திருமணமாகி அபிராமி என்ற மனைவியும், 1 வயதில் ருத்ரா என்ற பெண் குழந்தையும் உள்ளது. ஜெயக்குமாருக்கு திருமணமாகவில்லை. இவர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். மகேந்திரன், ஜெயக்குமார் செங்கம் துக்காப்பேட்டையில் கார்பெண்டர் வேலை மற்றும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகின்றனர்.
மகேந்திரன் தொழில் செய்வதற்காக கடந்த 2019-ம் ஆண்டு செங்கம் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், மற்றொருவரிடம் ரூ.1 லட்சமும் கடனாக பெற்றுள்ளார்.அதேபோல் ஜெயக்குமாரும் ஒருவரிடம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரமும், மற்றொருவரிடம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும் கடன் வாங்கினார். 2 பைசா வட்டிக்கு கடன் பெற்ற நிலையில் சில நாட்களில் 10 பைசா வட்டியாக தர வேண்டும் என்று அவர்கள் மகேந்திரனையும், ஜெயக்குமாரையும் மிரட்டி வந்து உள்ளனர்.
பின்னர் கடன் அளித்த நபர்கள் கடைக்கு சென்று, இருவரையும் மிரட்டி பல லட்சம் பெற்று வந்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் குடும்பத்துடன் அழித்து விடுவோம் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கொரானாவால் தொழில் முடங்கிப் போன நிலையில் அவர்கள் அபிராமியின் நகைகளை விற்று லட்சக்கணக்கில் வட்டி செலுத்தியுள்ளனர். கடந்த சில மாதங்களாக வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 4 பேரும் இணைந்து அவர்களின் கடையை மூடியதுடன் வட்டியுடன் சேர்ந்து அசலையும் விரைவில் செலுத்த வேண்டும் என லட்சக்கணக்கில் கந்து வட்டி கேட்டு நேரிலும், செல்போனிலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அவர்கள் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 1 வயது கை குழந்தையுடன் ஜெயக்குமார், மகேந்திரன், அபிராமி ஆகியோர் நேற்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
புகாரை பெற்று கொண்ட போலீசார் இதுகுறித்து உரிய விசரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.