/* */

அணை நீர் திறப்பு நிகழ்ச்சிக்கு சென்ற துணை சபாநாயகரின் காரை முற்றுகையிட்ட பெண்கள்

படவேடு செண்பகத்தோப்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சிக்கு சென்ற துணை சபாநாயகரின் காரை பெண்கள் முற்றுகையிட்டனர்

HIGHLIGHTS

அணை நீர் திறப்பு நிகழ்ச்சிக்கு சென்ற துணை சபாநாயகரின் காரை முற்றுகையிட்ட பெண்கள்
X

தண்ணீரில் மலர் தூவி ஷட்டரை திறந்து விட்ட துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு பெருமாள்பேட்டை பகுதியில் உள்ள செண்பகத்தோப்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அண்ணாதுரை எம்.பி., சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் அணையின் முதல் ஷட்டரை திறந்து விட்டனர். பின்னர் வெளியேறிய தண்ணீரில் மலர் தூவினர்.இதில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் செல்வராஜ், ராஜகணபதி, படவேடு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், படவேடு ரேணுகாம்பாள் கோவில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறும் 48 ஏரிகளில் தண்ணீர் சேமிக்க 181.44 கன அடி தண்ணீர் வருகிற 25-ந்தேதி வரை திறக்கப்படுகிறது. எனவே செண்பகத்தோப்பு அணையில் இருந்து திறந்து விடும் தண்ணீர் விவசாய பயன்பாட்டுக்கு ஏரிகளில் நிரம்பும் என பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க கோரி துணை சபாநாயகரின் காரை முற்றுகையிட்ட பெண்கள்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு பகுதியில் பெருமாள்பேட்டை கிராமம் செண்பகத்தோப்பு அணை செல்லும் சாலையில் உள்ளது. ராமநாதபுரம் கிராமத்தில் இருந்து செண்பகத்தோப்பு செல்லும் சாலை வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் அந்த சாலை சேறும், சகதியுமாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று செண்பகத்தோப்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்துவிட்டு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திரும்பினார். அவருடன் அண்ணாதுரை எம். பி., சரவணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் வந்திருந்தனர்.

பெருமாள்பேட்டை பகுதியில் வந்த போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி காரை, அப்பகுதி பெண்கள் வழிமடக்கி முற்றுகையிட்டு, சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என வாக்குவாதம் செய்தனர்.

அப்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் கீழ்செண்பகத்தோப்பு கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் அணை தண்ணீர் தேங்கி நின்றால் இரும்பு பாலத்தின் மீது நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றோம். எனவே, அதனை கூடுதலாக நீட்டிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On: 6 May 2023 1:41 AM GMT

Related News