பர்வதமலை கோயிலின் உச்சி பகுதிக்கு செல்ல சாலை அமைக்கத் திட்டம்.. அதிகாரிகள் குழு ஆய்வு...
பர்வதமலை கோயிலின் உச்சிப் பகுதிக்கு செல்ல சாலை அமைக்கும் திட்டம் குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
HIGHLIGHTS

பர்வதமலை கோயிலின் உச்சிப் பகுதி.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலுக்கு அடுத்தப்படியாக பிரசித்தி பெற்ற சிவன் தலம் பர்வத மலை ஆகும். இந்த மலை மிகவும் தொன்மையானது. கைலாயத்திற்குச் சமமானது என்ற பெயர் பெற்றது. கலசப்பாக்கம் அருகே உள்ள தென்மகாதேவமங்கலம், கடலாடி ஆகிய கிராமங்களுக்கு இடையே சுமார் 4 ஆயிரத்து 560 அடி உயரம் கொண்டது பர்வதமலை.
பர்வதமலை உச்சியின் மீது மல்லிகாஜூவனேஸ்வரர் உடனுறை பிரம்பராம்பிக்கை தாயார் கோயில் உள்ளது. அந்தக் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். பர்வதமலை மீது ஏறி செல்லும் வழியில் ஏனி படி, கடப்பாறை நெட், தண்டவாளம் பாதை, தொங்கு பாலம் போன்றவற்றை கடந்து சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள மலைக் கோவில்களில் 5 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு பாதைகள் அமைக்கப்பட உள்ளது. அதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் தொகுதியில் பர்வதமலையும், போளூர் தொகுதியில் லட்சுமிநரசிம்ம பெருமாள் கோயில் என இரண்டு கோயில்கள் அடங்கி உள்ளன. இந்த இரண்டு கோயில்களுக்கும் மலை உச்சிக்கு செல்ல பாதை அமைக்கும் பணி உட்பட 5 கோவில்களுக்கும் சேர்த்து ரூபாய் 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
அதன் அடிப்படையில், பர்வதமலையில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படுவதற்காக சென்னை தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி மற்றும் இந்து சமய அறநிலைத்துறை செயற்பொறியாளர் அன்பரசன், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் உட்பட பலர் அடங்கிய குழுவினர் பர்வத மலையை ஆய்வு மேற்கொண்டனர். பர்வதமலைக்குச் சென்று பச்சையம்மன் கோயிலில் இருந்து வீரபத்திரன் கோயில் மற்றும் மலையேறும் பாதையில் பாதி தூரம் வரை சென்று அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நவீன கேமராக்களை கொண்டு 4 ஆயிரத்து 560 அடி உயரம் கொண்ட பர்வத மலையை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து மலைக்கு மேலே செல்வதற்கு மாற்று பாதை அமைக்கும் பணி தீவிரப்படுத்தி வருகின்றன. இதன் மூலம் வாகனங்கள் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்படும் அதிகாரிகள் குழுவினர் என தெரிவித்தனர்.