காளை விடும் விழா; வேடிக்கை பார்த்த தொழிலாளி மாடு முட்டி பலி
கலசப்பாக்கம் அருகே காளை விடும் விழாவில் மாடு முட்டி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
HIGHLIGHTS

மாடு முட்டி தொழிலாளி பலி (கோப்பு படம்)
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்சோழங்குப்பம், வீரளூர், ஆதமங்கலம் புதூர், கேட்டவரம்பாளையம், கீழ்பாலூர், கடலாடி உள்பட பல்வேறு கிராமங்களில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் விழா நடைபெற்றது
காலை விடும் விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து போலீஸ் கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இந்நிலையில், கீழ்பாலூர் கிராமத்தில் நேற்று காளை விடும் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கலசபாக்கம் அருகே குப்பம் கிராமம் பூங்காவனத்தம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 50), கூலித் தொழிலாளி. இவர் கீழ்பாலூர் கிராமத்தில் காளை விடும் திருவிழாவை பார்க்க செல்வதாக மனைவி குமாரியிடம் கூறிவிட்டு வந்துள்ளார்.
காளை விடும் விழாவை பார்த்துக்கொண்டு, ஓரமாக நின்றிருந்த கார்த்தி மீது திடீரென காளை மாடு ஒன்று முட்டி மோதி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த கார்த்திக்கை உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கார்த்திக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.