/* */

செய்யாறை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஊர்வலம்

செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக்கோரி பொதுமக்கள் ஊர்வலம் சென்றதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

HIGHLIGHTS

செய்யாறை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஊர்வலம்
X

செய்யாறை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி மனு அளிக்க ஊர்வலமாக வந்த பொதுமக்கள்.

செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக்கோரி பொதுமக்கள் ஊர்வலம் சென்றதை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர்கள் வாகனங்களில் சார்-ஆட்சியா் அலுவலகத்துக்கு சென்று மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வருவாய் கோட்டத்தில் மாவட்ட தலைநகர் திருவண்ணாமலையில் அமைந்துள்ள அரசு அலுவலகங்கள் அதற்கு இணையான இரண்டாம் நிலை அலுவலகங்கள் அனைத்தும் அமையப்பெற்றுள்ளன. தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை, சுமார் 30,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரியும் செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை, பல தனியார் கம்பெனிகள், பல தனியார் கல்லூரிகள் , பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என பல அமைய பெற்றுள்ள செய்யாற்றை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும் என வியாபாரிகள் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தற்போது செய்யாறு வருவாய் கோட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம் , சேத்துப்பட்டு ஆகிய வட்டங்கள் அமைய பெற்றுள்ளன. மாவட்ட தலைநகரான திருவண்ணாமலைக்கு செய்யாறு தொகுதியை சேர்ந்த தூசி, அப்துல்லாபுரம், பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து ஒரு நாள் முழுவதும் பயணம் செய்து சுமார் 130 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணிக்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

புதிதாக செய்யாறு வருவாய் மாவட்டம் அமையப்பெற்றால் அரசு அலுவலர்கள் ,வியாபாரிகள் ,நெசவாளர்கள், உடல் ஊனமுற்றோர் ,பள்ளி மாணவ மாணவியர்கள் ஆகியோர் பெரிதும் பயனடைவார்கள். மேலும் செய்யாற்றை மையமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைந்தால் சுமார் 25 முதல் 45 கிலோமீட்டர் தூரத்திற்குள் மாவட்ட எல்லை அமையும் அனைவரும் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் மாவட்ட தலைமை இடத்திற்கு வந்து செல்ல வசதியாக இருக்கும் என பொதுமக்கள் வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தை 2 ஆக பிரித்து செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் புதிய மாவட்டம் அறிவிக்கக்கோரி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஊர்வலம் திருவோத்தூர் வேதபுரீஸ்வரர் கோவில் முன்பிருந்து ஊர்வலமாக புற்பட்டனர்.

ஊர்வலம் பெரியார் சிலை அருகே வரும்போது பாதுகாப்பு பணியில் இருந்த செய்யாறு இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் ஊர்வலம் செல்ல அனுமதி இல்லை என கூறி அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கலைந்த பொதுமக்கள் தங்களது மோட்டார் சைக்கிள்களில் காந்தி சாலை, மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், ஆற்காடு சாலை வழியாக சென்று சார்-ஆட்சியா் அலுவலகம் சென்றடைந்தனர்.

அங்கு அவர்கள், ''வேண்டும் வேண்டும், செய்யாறு மாவட்டம் அறிவிக்க வேண்டும்'' என கோஷங்கள் எழுப்பினர். இதில் அனைத்து கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் தங்களது கோரிக்கை மனுக்களை சார்-ஆட்சியா் அனாமிகாவிடம் வழங்கினர்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2016-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் செய்யாறை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்கப்படும் என தெரிவித்த வாக்குறுதியினை நிறைவேற்றிட வேண்டும் என செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

Updated On: 11 April 2023 1:22 PM GMT

Related News