/* */

திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்

குட்டையில் மீன் பிடிக்க சென்ற இரண்டு சிறுவர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
X

திருப்பூர் மாவட்ட பகுதிகளில் நடந்த குற்ற நிகழ்வுகளின் தொகுப்பு.

குட்டையில் மூழ்கி சிறுவர்கள் பலி

திருப்பூர், மங்கலத்தை அடுத்த 63வேலம்பாளையம் அருகே உள்ள அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கல்பனா. இவர்களது மகன் கிஷோர்(9). அதே பகுதியை சேர்ந்தவர் வேலன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதி. இவர்களது மகன் கதிர்வேல் (11). கிஷோர், கதிர்வேல் இருவரும் நண்பர்கள். 63 வேலம்பாளையம் அரசுப்பள்ளியில் கிஷோர் 4-ம் வகுப்பும், கதிர்வேல் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர். இருவரும் அருகே உள்ள மூணுமடை பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள குட்டையில், மீன்பிடிக்க சென்றனர். அதன்பின், மாலை 6 மணி ஆகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இருவரது பெற்றோர்களும் சிறுவர்களை தேடினர். மூணுமடை பகுதியில் செம்மண்குட்டையில் மாணவர்களின் செருப்புகள் மிதந்துள்ளது. இதனால் மாணவர்கள் குட்டை நீரில் மூழ்கியிருக்கலாம் என்பதால், மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மங்கலம் போலீசார் அங்கு உடனடியாக வந்தனர். திருப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த திருப்பூர் தீயணைப்பு வீரர்கள், செம்மண்குட்டையில் மூழ்கிய சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கதிர்வேல், கிஷோர் சடலங்கள் மீட்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீன்பிடிக்கச் சென்று நீரில் மூழ்கி சிறுவர்கள் பலியானது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

பல்லடம் அருகே கவுண்டம்பளையம்புதூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 50). வெல்டிங் பட்டறை தொழிலாளி. இவர் ராஜேஸ்வரி (36) என்பவரை திருமணம் செய்து, இருவரும் ஒன்றாக வசித்தனர். ராஜேஸ்வரி ஏற்கனவே திருமணமாகி முதல் கணவருடன் விவாகரத்து பெற்று, அதன்பிறகு கருப்புசாமியை 2-வது திருமணம் செய்து இருந்தார். இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது. கடந்த 3-11-2012 அன்று அதிகாலை 2 மணிக்கு கருப்புசாமிக்கும், ராஜேஸ்வரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த கருப்புசாமி, ராஜேஸ்வரியை குளியலறையில் தள்ளி, மண்எண்ணை ஊற்றி தீ பற்ற வைத்து விட்டு சென்றார். இதன்பிறகு மின்சாரம் தாக்கி, தனது மனைவி இறந்ததாக உறவினர்களிடம் கூறினார். இந்நிலையில் தனது மகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக ராஜேஸ்வரியின் தாயார், பல்லடம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை வழக்கில், கருப்புசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் தீர்ப்பு கூறப்பட்டது. மனைவியை கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக கருப்புசாமிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், கொலை குற்றத்துக்காக ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார்.

பாம்பு கடித்து 4 வயது சிறுவன் பலி

முத்தூர் அருகே வேலம்பாளையம் ஊராட்சி ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஜெயபால். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி லாவண்யா. இந்த தம்பதிக்கு நிவாஷ் (வயது 4), நிகிலன் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம், ஜெயபாலின் மூத்த மகன் நிவாஷ் வீட்டை சுற்றி கட்டப்பட்டு உள்ள தென்னங்கீற்று தடுப்பை, காலால் எட்டி உதைத்து விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு இருந்த பாம்பு, சிறுவன் நிவாசை கடித்தது. அலறி துடித்த சிறுவன் சத்தத்தை கேட்டு ஓடிவந்த நிவாசின் பெற்றோர், உடனடியாக முத்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவனை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு நிவாஷ் முதலுதவி சிகிச்சை பெற்ற பின், மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் நிவாஷ் உயிரிழந்தான். வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ரோட்டோரத்தில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்

பல்லடம் அருகே தெற்கு பாளையம் பிராமிஸ் நகர் பகுதியில், 100-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளது. நேற்று இந்த குடியிருப்புக்கு பின் பகுதியில் உள்ள காலி இடத்தில், அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குப்பை கொட்டுவதற்காக சென்றார். அப்போது, அங்கு ரோட்டோரத்தில் ஈக்கள் மொய்த்தபடி, பச்சிளம் பெண் குழந்தை சடலம் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், குழந்தையின் சடலத்தை கைபற்றினர். 7 மாத குறைபிரசவத்தில் பிறந்த பெண் குழந்தை என்பது தெரியவந்தது. பச்சிளங்குழந்தையின் சடலம், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நாரணாபுரம் விஏஓ மோகன்தாஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

4 போலீசார் பணியிடை நீக்கம்

திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரை சேர்ந்தவர் நடராஜ் (வயது 34). இவர் அவினாசி போக்குவரத்து போலீஸ் இரண்டாம் நிலை காவலர். கடந்த 12-ம் தேதி இரவு, மகாராஜா கல்லூரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி, சோதனை செய்தார். தலைக்கவசம் அணியாமல் வந்ததால், அவரிடம் ரூ.500 அபராதம் விதிப்பதாக கூறினார். இந்நிலையில் நடராஜின் செல்போன் தவறி கீழே விழுந்து, சேதமடைந்ததாக தெரிகிறது. உடனே பைக்கில் வந்த வாலிபரின், செல்போனை வாங்கி, சிம்கார்டை அவரிடம் கழற்றி கொடுத்து விட்டு, 'உன்னால் தான் செல்போன் சேதமானது. ரூ.26 ஆயிரம் கொடுத்து விட்டு, உனது செல்போனை வாங்கி செல்' என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர், பெருமாநல்லூர் போலீசில் புகார் அளித்தார். இதையறிந்த போலீஸ்காரர் நடராஜ், அந்த வாலிபரிடம் செல்போனை திருப்பிக்கொடுத்துள்ளார். இருப்பினும் இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பிக்கு புகார் சென்றது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணைக்கு பிறகு, ஒழுங்கீனமாக நடந்து கொண்ட போலீஸ்காரர் நடராஜை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் எஸ்.பி சசாங் சாய் உத்தரவிட்டார்.

மற்றொரு சம்பவம்: பெருமாநல்லூர் அருகே ரோட்டோரத்தில், கடந்த 17-ம் தேதி இரவு காரை நிறுத்தி ஆண், பெண் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக, பெருமாநல்லூர் போலீஸ் இரண்டாம் நிலை காவலர்கள் தனபால், தமிழ்அரசன், கதிரவன் ஆகியோர் ரோந்து சென்றுள்ளனர். கார் நிற்பதை பார்த்ததும், காரில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் உறவினர்கள் என்று தெரிவித்தும் அவர்களிடம் கார் எண், பெயர் விவரம், காரின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி விசாரித்தனர். அதன்பிறகு அவர்களை மிரட்டி பணம் கேட்டுள்ளனர். இதனால் பயந்து போன அவர்கள், ரூ.34 ஆயிரத்து 500-ஐ போலீஸ்காரர்களுக்கு கொடுத்தனர். அவர்கள் அதை பெற்று பங்குபிரித்துக்கொண்டனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட இருவரும் போலீஸ் எஸ்.பி சசாங் சாயை சந்தித்து நடந்த விவரத்தை கூறி புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து, அந்த போலீஸ்காரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பணியின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட போலீஸ்காரர்கள் தமிழ்அரசன், கதிரவன், தனபால் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி உத்தரவிட்டார்.

Updated On: 16 Oct 2022 8:39 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  2. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  3. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  4. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  9. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  10. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்