/* */

சிறுவனை கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திருப்பூர் அருகே சிறுவனை கொலை செய்த வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட் தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

சிறுவனை கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
X

சிறுவனை கொலை செய்த வழக்கில், வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பூர் அருகே ஊத்துக்குளி நடுப்பட்டி சொட்ட கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ்-சுமதி தம்பதியின் மகன் பவனேஷ் (வயது 8). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 11-6-2020 அன்று, வெளியே விளையாட சென்ற பவனேஷ் வீடு திரும்பவில்லை. சிறுவனை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் ஊத்துக்குளி போலீசில் புகார் அளித்தனர். மறுநாள் காலை புத்தூர் பள்ளபாளையம் அருகே புதரில் சிறுவன் பவனேஷ் கொலை செய்யப்பட்டு கிடந்தான். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில், ஊத்துக்குளி நடுப்பட்டி சொட்டகவுண்டம்பாளையத்தை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் அஜித்குமாரும் (23), 17 வயது சிறுமியும் சேர்ந்து சிறுவனை கொலை செய்தது தெரியவந்தது. அஜித்குமாரும், சிறுமியும் முந்தையநாள் தனிமையில் இருந்துள்ளனர். இதனை சிறுவன் பவனேஷ் பார்த்துள்ளான். 'வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது' என்று அஜித்குமார் கூறியும் சிறுவன் 'வெளியே கூறுவேன்' என்று சொல்லியுள்ளான். இதனால் கோபமடைந்த அஜித்குமாரும், சிறுமியும் சேர்ந்து சிறுவனை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி மறுநாள் காலையில் சிறுவனை, அந்த சிறுமி தனியாக அழைத்துக்கொண்டு புத்தூர் பள்ளபாளையம் சுடுகாடு குட்டைக்கு சென்றாள். அங்கு ஏற்கனவே தயாராக அஜித்குமார் இருந்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து சிறுவனின் வாயில் துணியை வைத்து திணித்து, பாட்டிலால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொலை செய்து, பின்னர் உடலை அருகே உள்ள புதருக்குள் வீசி விட்டு சென்றது தெரியவந்தது. சிறுவன் பவனேஷை இரக்கமின்றி, கொடூரமாக அவர்கள் கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. சிறுவனை, சிறுமி அழைத்து சென்றதை சிலர், பார்த்த நிலையில், போலீசார் விசாரணையில், சிறுமி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அஜித்குமாருடன் இணைந்து, இருவரும் சிறுவனை கொலை செய்து, புதரில் வீசிச் சென்றது உறுதியானது.

இதைத்தொடர்ந்து அஜித்குமார், சிறுமி 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது.இந்த வழக்கில், சிறுவனை கடத்திக்கொலை செய்து, தடயத்தை மறைத்த குற்றத்துக்காக அஜித்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். சிறுமி இளம்சிறார் என்பதால் அந்த வழக்கு தனியாக நடந்து வருகிறது. சிறுவனை கொலை செய்த வழக்கில், வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது, கோர்ட் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 24 Nov 2022 2:17 PM GMT

Related News