/* */

எங்கிருந்து வருகிறது போதை சாக்லெட்? அதிர்ச்சியில் திருப்பூர் போலீசார்

திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில், போதை சாக்லெட், கஞ்சா, குட்கா விற்பவர்கள் அதிகரித்து வருவது, போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

HIGHLIGHTS

எங்கிருந்து வருகிறது போதை சாக்லெட்? அதிர்ச்சியில் திருப்பூர் போலீசார்
X

கோப்பு படம் 

திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், அவினாசி, பல்லடம் உள்ளிட்ட சில இடங்களில், சமீபத்தில் போதை சாக்லெட் விற்பனை செய்வோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆங்காங்கே, தடை செய்யப்பட்ட, பான் மசாலா, குட்கா ஆகியவையும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

வட மாநிலத்தவரே இலக்கு

இது குறித்து போலீசார் கூறியதாவது: பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, போதை சாக்லெட் ஆகியவை ஒடிசாவில் இருந்து வட மாநில தொழிலாளர்களால் எடுத்து வரப்படுகிறது. அங்கிருந்து, போதை சாக்லெட், ஒரு ரூபாய்க்கு வாங்கி வந்து, இங்கு, 10 ரூபாய்க்கு விற்கின்றனர்.ஐந்து கிராம் எடையுள்ள கஞ்சா, 200 ரூபாய்க்கு விற்கின்றனர். பெரும்பாலும், வட மாநில தொழிலாளர்கள் மட்டும் தான் கஞ்சாவை வாங்குகின்றனர்.

அதேபோன்று, கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து, குறைந்த விலைக்கு பான் மசாலா, குட்கா ஆகியவற்றையும் வாங்கி வந்து, இங்கு விற்கின்றனர்.இம்மாநிலங்களில் இருந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கும் கட்டுமானப் பொருட்கள், தளவாட பொருட்கள், காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை எடுத்து வரும் சரக்கு வாகனங்களில், அவை கொண்டு வரப்பட்டு, மொத்த வியாபாரிகள் மூலம், விற்பனை செய்யப்படுகிறது என்ற விவரம் விசாரணையில் தெரிய வருகிறது.

எப்படி கட்டுப்படுத்துவது?

கடந்த சில நாட்களாக, டிராவல்ஸ் நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் பஸ்களில், பயணிகள் போர்வையில், போதை சாக்லெட், குட்கா, கஞ்சா போன்றவற்றை எடுத்து வந்து, இங்குள்ள வியாபாரிகளிடம் வழங்குகின்றனர். பொதுவாக, டிராவல்ஸ் மூலம் வரும் பயணிகளின் பொருட்கள், சோதனைக்கு உட்படுத்தப்படுவது இல்லை; இது, அவர்களுக்கு சாதகமாகி விடுகிறது.கர்நாடகா உட்பட பிற மாநிலங்களில் இருந்து திருப்பூர், கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு செல்லும் இணைப்பு சாலையாக அவிநாசி இருப்பதால், இத்தகைய தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வந்து, வியாபாரிகளிடம் சேர்ப்பது. எளிதாக உள்ளது.

எனவே, மாநில எல்லையில் உள்ள 'செக்போஸ்ட்'களில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும். டிராவல்ஸ் வாகனங்களில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ள பயணிகள் எடுத்து வரும் பொருட்களை சோதனையிட அனுமதிக்க வேண்டும்.

தேவை, கடும் நடவடிக்கை!

பனியன் நிறுவன உரிமையாளர்கள், தங்கள் நிறுவன விடுதியில் தங்கி பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களின் அறையை அவ்வப்போது சோதனையிட்டு, குட்கா, போதை சாக்லெட், கஞ்சா போன்றவை உள்ளதா என்பதை அறிய வேண்டும். இது, நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம் என்றாலும் கூட, இத்தகைய சட்ட விரோத செயல்களை தடுக்க வேறு வழியில்லை.

போதை சாக்லெட் விற்கும் கடைக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உணவு பாதுகாப்பு பிரிவினரும், அக்கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அக்கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே, அவற்றின் புழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

போதை சாக்லெட் விற்கும் கடைக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உணவு பாதுகாப்பு பிரிவினரும், அக்கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அக்கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே, பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Updated On: 16 April 2022 1:30 AM GMT

Related News