/* */

பகலில் ரயில் பயணம்-இரவில் கொள்ளை- உல்லாச வாழ்க்கையில் ஒரு கொள்ளையன்

பகலில் ரயில் பயணம் செய்து இரவில் கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை நடத்திய ஒரு கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளான்.

HIGHLIGHTS

பகலில் ரயில் பயணம்-இரவில் கொள்ளை-  உல்லாச வாழ்க்கையில் ஒரு கொள்ளையன்
X

 கைது செய்யப்பட்ட கொள்ளையன் சுடலை பழம் மற்றும் அவனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் சமீபத்தில் நடந்த சில சம்பவங்களில் பூட்டிய வீட்டை உடைத்து நகை, பணத்தைக் கொள்ளையடிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. கைரேகை கூட விட்டுச் செல்லாத அளவுக்கு மிகக் கவனமுடன் கொள்ளை நடந்ததால் அதில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர்.கொள்ளையரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பண்ணைசங்கரய்யர் நகரில் கணேசன் என்பவரின் வீட்டில் கடந்த ஜூலை 4-ம் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது. இரவு நேரத்தில் பூட்டிய வீட்டை உடைத்து 6 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. அக்டோபர் 30-ம் தேதி சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியில் ருபினா பர்வீன் என்பவரின் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

போலீஸாருக்கு சவால் விடும் வகையில் நடந்த இத்தகைய கொள்ளைகளில் ஈடுபட்ட நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய தென் மண்டல ஐ.ஜி-யான ஆஸ்ரா கார்க் தீவிரம் காட்டினார். அதனால் நெல்லை மாவட்ட எஸ்.பி-யான சரவணன், ஏ.எஸ்.பி-யான பல்வீர் சிங் ஆகியோர் கண்காணிப்பில் தனிப்படை அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீஸார், தொடர் கொள்ளை சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

கொள்ளை நடந்த வீடுகளில் கைரேகை எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அந்தப் பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளைக் கொண்டு விசாரித்தனர். அப்போது கொள்ளை நடந்த பகுதிகளில், இரவு நேரத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒருவர் சாலையில் சென்றது தெரியவந்தது. அந்த நபர் யார் என தெரியாததால், அருகில் உள்ள மாவட்ட காவல்நிலையங்களுக்கும் அவரின் புகைப்படத்தை அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சந்தேகத்துக்கு இடமான நபரின் பெயர் சுடலைபழம், 44 வயதான அவர் குமரி மாவட்டம், முகிலன் குடியிருப்பு, கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரைத் தேடிச் சென்றபோது வீட்டில் அவர் இல்லை. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக அவர் ஊருக்கே வரவில்லை என்பதும் தெரியவந்தது.

நெல்லை மாவட்டத்தில் நடந்த பல கொள்ளைச் சம்பவங்களில் அவருக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவரைப் பிடிக்க தனிப்படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில், அம்பாசமுத்திரம் பகுதியில் அவரின் நடமாட்டம் இருப்பதைத் தெரிந்துகொண்ட போலீஸார் கடந்த 22-ம் தேதி அவரை கைது செய்தனர்.

கைதான சுடலைப்பழம் வைத்திருந்த பையில் 1.48 கிலோ தங்க நகைகளும் அரை கிலோ வெள்ளிப் பொருட்கள், 50,000 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை இருந்தன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அத்துடன், கொள்ளையடிக்கும்போது கைரேகை பதிவாகாமல் இருக்க கையுறைகளைப் பயன்படுத்தியுள்ளார். கொள்ளைக்குப் பயன்படுத்திய இரும்புக் கம்பிகளும் கைப்பற்றப்பட்டன. அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், நெல்லை, தூத்துக்குடி, குமரி, சேலம், நாமக்கல், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

பகலில் ரயிலில் ஏறும் அவர், இரவு வந்ததும் அந்த ஊரில் இறங்கி, அங்கு பூட்டிக் கிடக்கும் வீடுகளில் கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். கொள்ளை சம்பவங்களுக்கு யாரையும் கூட்டாளியாகச் சேர்க்காமல் தனி நபராகச் சென்றுள்ளார். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து சென்னை சென்று துணை நடிகைகள் உள்ளிட்டோருடன் உல்லாசமாக இருந்ததையும் ஒப்புதல் வாக்கு மூலமாக அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சுடலைபழம் மீது தமிழகம் முழுவதும் 50-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவரை அம்பாசமுத்திரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீஸார் பின்னர் நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.

Updated On: 25 Nov 2022 9:04 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  3. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  6. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  8. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  10. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி