ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
HIGHLIGHTS

ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
சூரத் நீதிமன்றத்தில் நடந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.க்கு இரண்டு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்கள் இரண்டு வருடமோ அல்லது அதற்கு மேல் வருடங்களோ குற்ற வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் அவர்கள் தங்களது பதவியை இழக்கும் வகையில் சட்டம் உள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில் ராகுல் காந்தி எம்.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மக்களவை செயலகம் பறித்து உள்ளது.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் பல்வேறு கட்சி தலைவர்களும் ராகுல் காந்தியின் பதவி பறிப்புக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் இன்று புதன்கிழமை மத்திய பா.ஜ. அரசின் செயல்பாடுகளை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் சரவணன் தலைமையில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி கோர்ட் முன்பாக நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தியால் பிரதமர் மோடியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல வலியுறுத்தப்பட்டது. பிரதம அமைச்சர் மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவுமுறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினரும் வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவருமான எம். ராஜேந்திரகுமார், மாநிலச் செயலாளர் கிருபாகரன், வழக்கறிஞர்கள் சரவணன், தியாக சுந்தரம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மலைக்கோட்டை முரளி பஜார்மைதீன் ஜி எம் ஜி மகேந்திரன் மாவட்ட பொறியாளர் அணி தலைவர் சுதர்சன் சோசியல் மீடியா மாநிலத் தலைவர் அபூ என்கிற அபுதாபிகர் நாகமங்கலம் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.