மகளிர் உரிமைத் திட்டம்: தூத்துக்குடி ஆட்சியர் நேரில் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து பொதுமக்களிடம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS

எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்து உரிமைத்தொகை கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்களிடம் இருந்து வரப்பெறும் விண்ணப்பங்களின் நிலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை நிவர்த்தி செய்திடவும், மேல்முறையீடு தொடர்பாக தெளிவுரை வழங்கிடவும் ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்து உரிமைத்தொகை கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்களின்; சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை நிவர்த்தி செய்திட உதவி மையத்தினை அணுகி சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து பொதுமக்களிடம் இருந்து வரப்பெறும் விண்ணப்பங்களின் நிலை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை நிவர்த்தி செய்திடவும், மேல்முறையீடு தொடர்பாக தெளிவுரை வழங்கிடவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு உதவி மையங்களும், தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகம், திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகங்களில் தலா ஒரு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 5 உதவி மையங்களும், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3 உதவி மையங்களும், ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2 உதவி மையங்களும், சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 4 உதவி மையங்களும், திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 4 உதவி மையங்களும், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 4 உதவி மையங்களும், எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 5 உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 4 உதவி மையங்களும், கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 5 உதவி மையங்களும், கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் 3 உதவி மையங்களும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 44 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு, இன்று முதல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
எனவே, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட உதவி மையங்களை அணுகி தங்கள் விண்ணப்பங்களின் நிலையினை அறிந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
ஆய்வின்போது, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஷ்டி பாய், எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.