/* */

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.. 2 குறும்படங்கள் வெளியீடு...

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில், மாவட்ட ஆட்சியர், மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.. 2 குறும்படங்கள் வெளியீடு...
X

விழிப்புணர்வு பேரணியில் ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் குறும்படங்கள் வெளியீட்டு விழா ஆகியவை தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியின்போது, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் எடுக்கப்பட்ட நற்கருணை வீரர், குட்டிக் காவலர் கவி ஆகிய குறும்படங்களை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சாலைகளில் ஏற்படும் மரணங்களை குறைப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம். காவல்துறை, வருவாய் துறை, உள்ளாட்சி அமைப்புகள், போக்குவரத்து துறை ஆகிய துறைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

ஒவ்வொரு மாதமும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு கரு பொருளை மையமாகக் கொண்டு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதுபோல், இந்த மாதம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மேயருடன் நானும் சேர்ந்து இரண்டு சக்கர வாகனம் ஓட்டி ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.

குட்டி காவலர் கவி என்ற குறும்படம் முழுக்க, முழுக்க சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் ஆகும். பள்ளி குழந்தைகளிடம் ஆரம்ப கட்டத்தில் இருந்தே, சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினால் ஒரு நல்ல சமுதாயம் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும்.

ஒவ்வொரு பள்ளிகளிலும் சாலை பாதுகாப்பு குழு என்ற ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுக்கள் மூலமாக சாலை பாதுகாப்பு விஷயங்கள் அனைத்தையும் சொல்லிக் கொடுக்கிறோம். இன்றைய தினமும் நாம் சாலை பாதுகாப்பு குழு மூலமாக, அனைத்து பள்ளிகளிலும் குட்டி காவலர் கவி என்கின்ற குறும்படத்தினை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் சாலை விபத்துகளால் சுமார் 400 பேர் இறந்து உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுக்கு சராசரியாக 14 ஆயிரத்தில் இருந்து, பதினைந்தாயிரம் இறப்புகள் சாலையில் நடைபெறும் விபத்துகளால் ஏற்பட்டு வருகிறது.

அனைத்து துறைகளும் சேர்ந்து செயல்பட்டால் இந்த எண்ணிக்கையினை குறைக்க முடியும். சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, ஒவ்வொரு மாதமும் சாலை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தக் கூட்டங்களில் முடிவெடுக்கப்பட்டு எந்தெந்த சாலைகள் பலதடைந்துள்ளதோ, அதை சரி செய்யும் பணிகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

அதேபோல், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வுகள் அவ்வப்போது ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொழுது சாலைகளினால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையினை நம் அனைவராலும் கணிசமாக குறைக்க முடியும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

விழிப்புணர்வு பேரணி: இதற்கிடையே, சாலை பாதுகாப்பை வழியுறுத்தி மில்லர்புரம் ஆயுதப்படை காவலர் அலுவலகம் முன்பிருந்து முத்துநகர் கடற்கரை வரை ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.ய

பேணியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு, மோட்டார் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகளில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் விநாயகம் (தூத்துக்குடி), நெடுஞ்செழியபாண்டியன் (கோவில்பட்டி), மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்செல்வி, தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Dec 2022 4:32 PM GMT

Related News