/* */

தூத்துக்குடியில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவியாக புதிய தொடர்பு எண் அறிமுகம்

வடமாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இந்தி மொழி தெரிந்த காவலரை நியமனம் செய்து புதிய தொடர்பு எண் தூத்துக்குடியில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவியாக புதிய தொடர்பு எண் அறிமுகம்
X

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன். (கோப்பு படம்).

தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் குறித்து திடீரென பரவிய வதந்தியால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்லும் நிலை ஏற்பட்டது. இருப்பினும், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு எந்தவித தாக்குதல்களும் நடைபெற வில்லை என்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அறிவித்தது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் இந்தி மொழி தெரிந்த காவலர் ஒருவரை நியமனம் செய்து புதிய தொடர்பு எண்ணையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிமுகம் செய்துள்ளார்.

இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

வடமாநில தொழிலாளர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ குறைகள் இருந்தாலோ அதை நிவர்த்தி செய்யும் வகையில், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் இந்தி மொழி தெரிந்த காவலர் செந்தட்டி என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

8249331660 என்ற புதிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள காவலர் இந்தி மொழியிலேயே பேசி பிரச்சனைகள் என்ன? என்பதை கேட்டறிந்து கொண்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையம் மற்றம் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பார்.

சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீஸார் அழைப்பு விடுத்த வடமாநில தொழிலாளர் இருக்கும் இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று நடவடிக்கை எடுப்பார்கள். வடமாநில தொழிலாளர்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இடங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது நேரில் சென்று, அவர்களது குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்குரிய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

வடமாநில தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு காவல்துறை 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 9 March 2023 7:22 AM GMT

Related News