/* */

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு செக் வைத்த திமுக தலைமை... ஆதரவாளரின் கட்சிப் பதவி பறிப்பு…

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான உமரி சங்கரின் கட்சிப் பதவியை பறித்து திமுக தலைமை செக் வைத்துள்ளது.

HIGHLIGHTS

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு செக் வைத்த திமுக தலைமை... ஆதரவாளரின் கட்சிப் பதவி பறிப்பு…
X

மாநில மாணவரணி துணை அமைப்பாளராக இருந்த உமரி சங்கர்.

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். அதிமுகவில் இருந்து திமுகவில் ஐக்கியமாகி அமைச்சர் ஆனவர்களில் இவரும் ஒருவர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் மனசாட்சியாக திகழ்பவர் சங்கர் என்ற உமரி சங்கர். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காலையில் எழுந்து இரவு படுக்கைக்கு செல்லும் வரை கூடவே இருந்து அவரை கவனித்துக் கொள்வதில் வல்லவர் உமரி சங்கர்.

மாமா மகன் என்ற தூரத்து உறவு முறையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அத்தான்.. அத்தான் என்று வாஞ்சையோடு அழைப்பது உமரி சங்கரின் ஸ்டைல். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகளாக இருந்தாலும், மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளாக இருந்தாலும் எதைப் பற்றி அமைச்சரிடம் பேச வேண்டும் என யார் முற்பட்டாலும் அவர்கள் உமரி சங்கரை கவனிக்காமல் அமைச்சரை சந்தித்துப் பேச முடியாது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் நிழல், மனசாட்சி என கட்சியினரால் வர்ணிக்கப்படும் உமரி சங்கரின் கட்சிப் பதவியான மாநில மாணவரணி துணை அமைப்பாளர் பதவியை தற்போது பறித்து திமுக தலைமை அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த பதவி பறிப்பு மூலம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு செக் வைக்கும் முயற்சியில் கட்சித் தலைமை ஈடுபட்டுள்ளதாக திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

யார் இந்த உமரி சங்கர்?: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள உமரிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். சிறு வயதிலேயே மும்பைக்குச் சென்ற இவர், 1992 ஆம் ஆண்டு சொந்த ஊர் திரும்பினார். அதன் பிறகு உமரிக்காடு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த அருள் என்பவருக்கு கார் ஓட்டுநராக பணியைத் தொடங்கினார்.

பின்னர், திமுக மாவட்டச் செயலாளராக இருந்த பெரியசாமியுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அப்போதைய ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வினுடன் பெரியசாமிக்கு மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால், டேவிட் செல்வினுக்கு எதிராக கட்சியில் ஒரு ஆள் வர வேண்டும் என்ற நோக்கில் சங்கருக்கு ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவி வழங்கி அரசியலில் வளர்த்து விட்டார் பெரியசாமி. இவரது, சகோதரர் கோட்டாளம் தற்போது ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளார்.

அதன் பிறகு, தனது ஊரின் பெயரில் பாதியான உமரியை தனது பெயரோடு இணைத்துக் கொண்டு திமுகவில் வேகமாக வளரத் தொடங்கினார் உமரி சங்கர். அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அனிதா ராதாகிருஷ்ணன் திமுக மாவட்டச் செயலாளர் பெரியசாமியுடன் மோதல் போக்கை கடைபிடித்தபோது அவருக்கு துணையாக இணைந்துக் கொண்டார் உமரி சங்கர்.

உமரி சங்கருக்கு இண்டு மகன்கள். ஒருவர் பெயர் ஸ்டாலின். மற்றொருவர் பெயர் ராஜா சங்கர். திமுக தலைவர் ஸ்டாலின் பெயரையும், அவரது குடும்ப நண்பரான ராஜா சங்கர் பெயரையும் தனது மகன்களுக்கு சூட்டியுள்ளார் உமரி சங்கர். சில ஆண்டுகள் அதிமுகவில் இருந்த விசுவாசத்தால் தனது இடது கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பச்சைக் குத்தி உள்ளார். பலருக்கு தெரியாத ரகசியம் அது.

கடந்த 2016 ஆம் ஆண்டு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது முதல் அவருடன் மிகவும் நெருக்கத்தில் இருந்து வருகிறார் உமரி சங்கர். திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் பொறுப்பு வகித்து வந்த உமரி சங்கரின் கட்சிப் பதவியை தற்போது திமுக தலைமை பறித்து உள்ளது.

யாருக்கு வைக்கப்படுகிறது செக்?

உமரி சங்கரின் கட்சிப் பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளதன் மூலம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு கட்சியின் தலைமை ஏதோ ஒன்றை உணர்த்த முயல்கிறது என்றே திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. திமுக உட்கட்சி தேர்தலின்போது அதிகளவு பணம் விளையாடியதாகவும், பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட்டதாகவும் எழுந்த புகாரால் திமுக தலைமை அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திமுகவில் இருந்த மூத்த நிர்வாகிகள் பலர் உமரி சங்கரின் நடவடிக்கை குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்தும் அவர் எந்தவித கண்டிப்பும் செய்யாததால், கட்சியின் தலைமைக்கு புகார் கடிதங்கள் பறந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே தற்போது உமரி சங்கரின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மனைவிக்கு பதவி.. கணவருக்கு கல்தா? இதற்கிடையே, உமரி சங்கரின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டதற்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது, தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியின் 15 ஆவது வார்டு உறுப்பினராக இருந்த உமரி சங்கரின் மனைவி பிரம்மசக்தி கடந்த 8 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஏற்கெனவே, திமுகவில் பொதுக்குழு உறுப்பினர் பதவியில் இருக்கும் பிரம்மசக்திக்கு தற்போது மாவட்ட ஊராட்சித் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டதால், அவரது கணவரான உமரி சங்கரின் கட்சிப் பதவியை திமுக தலைமை பறித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

அமைச்சரின் ராஜதந்திரமா?: இதுஒருபுறம் இருக்க, மற்றொரு தகவலும் தற்போது தூத்துக்குடி மாவட்ட திமுகவில் வேகமாக பரவி வருகிறது. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவி பொறுப்பை தனது மனைவிக்கு வழங்க வேண்டும் என உமரி சங்கர் வைத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அதற்காக காய் நகர்த்தி பணத்தையும் தண்ணீராக செலவு செய்து அந்த பொறுப்பை பெற்றுக் கொடுத்துள்ளார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

இந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்றும் அடுத்த தேர்தலில் பிரம்மசக்திதான் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் என்றும் தனது நெருங்கி வட்டாரத்தினரிடம் உமரி சங்கர் பேசினாராம். திமுக தலைவர் ஸ்டாலின் குடும்ப நண்பராக உள்ள ராஜா சங்கர் தனது உறவினர் என்பதால் அது சாத்தியம் என்றும் உமரி சங்கர் சிலாகித்துள்ளார்.

இந்த தகவல் தனது காதுக்கு வந்ததும் அதிர்ச்சியடைந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜதந்திர நடவடிக்கையாக உமரி சங்கரை இனிமேல் தன்னிடம் நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்ள முடிவு செய்து, திமுக தலைமைக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையிலேயே கட்சிப் பதவி பறிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

எது எப்படியோ? திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளராக இருந்த உமரி சங்கரின் கட்சிப் பதவி பறிப்பு பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது. இதில், எது உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும் என்கின்றனர் தூத்துக்குடி மாவட்ட திமுக உடன்பிறப்புகள்.

Updated On: 26 Nov 2022 2:05 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...