/* */

இட்லி மாவு விற்பனையும் ரோட்டுக்கு வந்தாச்சு...

Idli Maavu -சாலையோர வணிகம் பெருகி வரும் தமிழகத்தில் இட்லி மாவும் ரோட்டோர விற்பனைக்கு வந்து விட்டது.

HIGHLIGHTS

இட்லி மாவு விற்பனையும் ரோட்டுக்கு வந்தாச்சு...
X

மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உசிலம்பட்டியில் இருந்து ஆறு கி.மீ., தொலைவில் திருமங்கலம் விலக்கில் ரோட்டின் சந்திப்பில் இட்லி மாவு விற்கும் பெண்.

Idli Maavu -சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பயணிப்பவர்களுக்கு நன்கு தெரியும் இவ்வளவு துார பயணத்தில் எங்குமே தனிமை தென்படாது. எல்லா இடங்களிலும் டீக்கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்க்குகள், அசைவ உணவகங்கள் (ஓட்டல்களுக்கும், உணவகங்களுக்கும் சிறிய வித்தியாசம் உண்டு) இருக்கும். அதே போல் பழக்கடைகள், ஜவுளிக்கடைகள், செருப்பு விற்பனை செய்யும் கடைகள், கம்மங்கூல் கடைகள், சர்பத், ஜூஸ் கடைகள், நுங்கு கடைகள் என புதுப்புது வணிகங்கள் சாலையோரங்களை தேடி வந்து அமர்ந்துள்ளன. சில கிராமங்களில் காய்கறி கடைகள் உள்ளன. காய்கறி சந்தைகள் கூட சில கிராமங்களில் உள்ளன. சில இடங்களில் நாட்டுக்கோழி விற்பனை கூட நடக்கிறது. இரவு நேர பயணத்தில் கூட இவைகள் திறந்திருப்பதை பார்க்க முடியும்.

நகர் பகுதிக்குள், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நெரிசல், பார்க்கிங் வசதியின்மை, அமர்ந்து சாப்பிட போதிய இடம் இல்லாதது போன்ற சூழல்களே இப்படி சாலையோர வணிகம் பெருக காரணமாக அமைந்து விட்டது. கிட்டத்தட்ட தமிழகத்தில் நான்கு வழிச்சாலை எங்கெங்கு உள்ளதோ.... அங்கெல்லாம் இப்படிப்பட்ட வணிகங்கள் பெருகி விட்டது. தேசிய நெடுஞ்சாலைகளிலும் இதே வணிகங்கள் உள்ளது.

இப்படி எல்லாமும் சாலையோரங்களை தேடி வந்துள்ள நிலையில் புதிய வரவாக பட்டியலில் சேர்ந்திருப்பது இட்லிமாவு. நான்கு வழிச்சாலைகளும், தேசிய நெஞ்சாலைகளும் சந்திக்கும் இடங்கள், கிராம சாலைகள் நான்கு வழிச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணையும் சந்திப்புகளில் இந்த இட்லி மாவு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை 4 மணிக்கு வந்து இரவு 7 மணிக்குள் இவர்கள் தங்கள் வணிகத்தை நிறைவு செய்து விடுகின்றனர்.

இட்லி மாவினை ரோட்டோரம் விற்க காரணம் என்ன என கேட்ட போது, இவர்கள் கூறியது வியக்க வைத்தது. நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு திரும்புவர்களில் பலர், ஓட்டல் சாப்பாட்டினை விரும்புவதில்லை. செலவு அதிகமாகும் என கருதுகின்றனர். அது போன்ற நபர்கள் வீட்டிற்கு சென்றதும் எளிதில் இட்லி, தோசை வார்க்க வசதியாக நாங்கள் மாவு தயார் செய்து, பாக்கெட் போட்டு தருகிறோம். இரண்டு கிலோ எடையை தொட்டு நிற்கும் இந்த மாவு பாக்கெட் விலை இடத்திற்கு ஏற்ப 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை மட்டுமே. ஒரு பாக்கெட் வாங்கினால், அப்பா, அம்மா, இரண்டு குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு போதுமானதாகி விடும். சிக்கனத்தை விரும்புபவர்களுக்கும், செலவை குறைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கும், ஓட்டல் உணவை தவிர்த்து உடல் ஆரோக்கியம் கருதி வீட்டில் சாப்பிட நினைப்பவர்கள் என பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட மக்களுக்காக, நாங்கள் ரோட்டோர இட்லி மாவு கடையினை தொடங்கி உள்ளோம். வியாபாரம் நன்றாக உள்ளது, என்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 Nov 2022 10:44 AM GMT

Related News