/* */

இந்தியாவிலேயே சவாலான பணி நிறைந்த தேவிகுளத்தில் நடக்கும் அதிசயம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தேவிகுளத்தில் ஒன்பது ஆண்டுகளில் பதினைந்து சப்- கலெக்டர்கள் பணியிட மாறுதலில் சென்றுள்ளனர்

HIGHLIGHTS

இந்தியாவிலேயே  சவாலான பணி நிறைந்த  தேவிகுளத்தில் நடக்கும் அதிசயம்
X

பைல் படம்

தேனி மாவட்டம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் தாலுகா என்றாலே, அங்குள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் ஒரு பதற்றம் தொற்றிக் கொள்ளும். நேர்மையாக பணிபுரிய விரும்புவோர்களுக்கு, இதை விட சவாலான ஒரு இடம் இந்தியாவில் இல்லை என்றே கூறலாம்.

அவசர கோலத்தில் தமிழகத்திலிருந்து தட்டிப் பறிக்கப்பட்ட தேவிகுளம், நிலவியல் ரீதியாக இன்னமும் வரைபடங்களால் முழுமைப்படுத்த முடியாத ஒரு தாலுகா. மலையும் மலை சார்ந்த இடமாக மட்டுமே உள்ள தேவிகுளம் தாலுகா, இன்றைக்கு கேரளாவில் அதிக வருவாயை தன்னிகரற்ற சுற்றுலா மூலம் ஈட்டி தருகிறது.

1970கள் வரை வெளியுலகத்தின் பார்வைக்கு வந்திராத இந்த தேவிகுளம் தாலுகா, இன்று உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. அதற்குக் காரணம் அங்குள்ள தமிழர்கள். விஷயத்திற்கு வருவோம்...

கடந்த 2016 ஆம் ஆண்டு தோழர் பினராயி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி ஏற்பட்டதிலிருந்தே, ஒரு மோசமான நிர்வாகம் தேவிகுளம் தாலுகாவில் நடந்து வருகிறது. 2016 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டுக்குள், அதாவது மூன்று ஆண்டுகளுக்குள், 5 சப் கலெக்டர்கள் தேவிகுளத்திலிருந்து தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

சபின் சமீத், என்.டி.எல் ரெட்டி, ஸ்ரீராம் வெங்கட்ராமன், வி.ஆர். பிரேம்குமார், ரேணு ராஜ் ஆகியோர் தான் அந்த ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகள்.

உழைப்பாளிகளுக்கு போராட வந்த கம்யூனிஸ்டுகள் எதற்காக இந்த நேர்மையான அதிகாரிகளை மாற்ற வேண்டும். அதிகாரிகளை அடிக்கடி மாற்றினால் நிர்வாகம் என்னவாகும். மூணாறு நகரை சுற்றி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கும் நில மாபியாக்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றும் அதிகாரிகளை மாற்றுவதன் பின்னணியில் இருப்பது யார்...?

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அடக்கி வாசிக்கும் நில மாஃபியக்கள் இடதுசாரிகளின் ஆட்சியின் போது புற்றீசல் போல கிளம்பி வருவது யாருடைய பின்னணியில்...?

ஆக்கிரமிப்பு கட்டிடம் ஒன்றை இடித்தார் என்பதற்காக, இடித்த மூன்றாவது நாள், தேவிகுளம் சப் கலெக்டர் சபின் சமித் மாற்றப்பட்டதின் பின்னணியில் இருந்தது, அன்றைக்கு மின்சாரத்துறை அமைச்சராக இருந்த எம் எம் மணி.

அவருக்குப் பின்னால் தேவிகுளம் சப் கலெக்டராக நியமிக்கப்பட்ட என் டி எல் ரெட்டி, ஒரு மாதம் கூட தாக்கு பிடிக்க முடியாமல் இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்குக் காரணமாக இருந்ததும் எம் எம் மணிதான். ரெட்டிக்கு பின்னால் வந்த ஸ்ரீராம் வெங்கட்ராமனை அசைத்துப் பார்க்க முடியவில்லை இந்த எம் எம் மணியால்...சகல பலமும் பொருந்திய ஸ்ரீராம் வெங்கட்ராமன் எம். எம். மணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். உலக மகா யோக்கியனை போல தன்னை காட்டிக் கொண்ட இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினரும், ஹை ரேஞ்ச் சம்ரக்ஷண சமதியின் பிதாமகனுமான அட்வகேட் ஜோயிஸ் ஜார்ஜுக்கு, கொட்டக்கம்பூரில் அவர் ஆக்கிரமித்த நிலம் தொடர்பாக நோட்டீஸ் முதலில் விட்டவர் இந்த ஸ்ரீராம் வெங்கட்ராமன்.

ஒரு எம்பி கே சம்மனா என்று கொதித்தெழுந்த எம் எம் மணி, அன்றைக்கு இடுக்கி மாவட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த கே கே ஜெயச்சந்திரன், தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகிய மூவரும் ஓரணியில் நின்று ஸ்ரீராம் வெங்கட்ராமனை உண்டு இல்லை என்று ஆக்கினார்கள்.நெருக்கடிக்கு பணிய மறுத்த இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர், அன்றைக்கு மின்துறை அமைச்சராக இருந்த எம் எம் மணியுடன் இணைந்து தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஸ்ரீராம் வெங்கட்ராமரை தூக்கி அடித்தார்கள்.

இந்த ஸ்ரீராம் வெங்கட்ராமன் மூணாறில் இடித்து தள்ளிய ஆக்கிரமிப்பு கட்டிடங்களின் எண்ணிக்கை மட்டும் 86. மொத்தம் 112 ஆக்ரமிப்பு கட்டடங்களுக்கு அவர் சம்மன் கொடுத்திருந்த நிலையில் தான், பணியிட மாறுதல் வந்து சேர்ந்தது.அந்தோ பரிதாபம்... அவருக்கு பின்னால் வந்த தேவிகுளம் சப் கலெக்டரான வி.ஆர். பிரேம்குமார், வந்த வேகத்தில் கொட்டக்கம்பூர் நிலவகாரம் தொடர்பாக இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினருக்கு சமன் அனுப்பினார். கொட்டக்கம்பூர் பகுதியில் பெரும்பான்மையாக வாழும் சில தமிழர்களிடம் ஏமாற்றி பிடுங்கப்பட்ட நிலம் குறித்த ஆவணங்களை சேகரித்த சப் கலெக்டர் பிரேம்குமார், அசல் ஆவணங்களை எடுத்துக்கொண்டு சப் கலெக்டர் அலுவலகம் வருமாறு தொடர்ந்து மூன்று முறை எம்.பி க்கு சம்மன் அனுப்பினார்.

ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட சம்மனை திரும்பப் பெறுமாறு இடுக்கி எம்.பி அனுப்பிய பதிலை சப் கலெக்டர் பிரேம்குமார் ஏற்க மறுத்ததால், அவரையும் தூக்கி அடித்தது எம். எம். மணி தலைமையிலான மூவர் கூட்டணி. இதே பிரேம்குமார் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த 2017 நவம்பர் 28 ஆம் தேதி இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோயிஸ் ஜார்ஜுக்கு சொந்தமான 28 ஏக்கர் நிலத்தின் பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்டது கேரள மாநில வருவாய்த்துறை.

அவருக்குப் பின்னால் வந்த டாக்டர் ரேணு ராஜ், அடிப்படையில் ஒரு மருத்துவர். இதற்கு முன்னால் தேவிகுளம் சப் கலெக்டர் ஆக இருந்த ஒரு தைரியக்காரனான ஸ்ரீராம் வெங்கட்ராமன் இவரது கணவர். அவரும் ஒரு மருத்துவர். தேவிகுளம் சப் கலெக்டராக பதவியேற்றதும் டாக்டர் ரேணு ராஜ் செய்த முதல் காரியம், இடுக்கி எம்.பி நேரில் ஆஜராகவில்லை என்றால், பட்டாவை ரத்து செய்வேன் என்று கடிதம் அனுப்பினார். ஒன்றுக்கு பலமுறை சம்மன் சென்றது., ஆனால் இடுக்கி எம் பி யோ,கேரள மாநில உயர் நீதிமன்றத்தை நாடி, தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சம்மன் நியாயமற்றது என்று மனுத்தாக்கல் செய்தார்.தனது 28 ஏக்கர் நிலத்திற்கான பட்டாவை பிரேம்குமார் ரத்து செய்து இட்ட உத்தரவையும் நிலுவையில் வைத்த எம்பி யால், டாக்டர் ரேணுராஜை எதிர்கொள்ள முடியவில்லை.

தேவிகுளம் தாலுகாவில் உள்ள வட்டவடை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொட்டக்கம்பூரில் பிளாக் எண் 58 இல் 32 ஏக்கர் நிலம் இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமாக இருந்தது. அதில் 28 ஏக்கர் நிலத்தை ஏற்கனவே மாநில வருவாய்த்துறை ரத்து செய்து உத்தரவிட்டிருந்த நிலையில், டாக்டர் ரேணுராஜ் அதை முறைப்படுத்தினார்.

ஒரு கட்டத்தில் தேவிகுளம் எம்.எல்.ஏ ராஜேந்திரன் களத்தில் இறங்கி, தேவிகுளம் சப் கலெக்டருக்கு மூளை இல்லை என்று வர்ணிக்கும் அளவிற்கு நிலைமை தீவிரமானது.

பெண்ணுரிமை பேசும் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாதர் சங்கம், கவனமாக அடக்கி வாசித்த காலகட்டம் இது. இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோயிஸ் ஜார்ஜின் தந்தை பாலியத் ஜார்ஜ், கொட்டக்கம்பூர் பகுதியில் உள்ள தமிழ் வம்சாவளிகளிடமிருந்து அட்டர்னி அதிகாரத்தை பயன்படுத்தி, நிலத்தை கையகப்படுத்தியதாக டாக்டர் ரேணு ராஜ் குற்றம் சாட்டினார்.

இடுக்கி எம் பி யின் மனைவி அனூபா ஜார்ஜ், அவரது சகோதரர் ஜார்ஜி ஜார்ஜ், ராஜீவ் ஜோதிஷ், அவரது மைத்துனர் டேவிட் ஜாய்ஸ், எம் பி யின் இன்னொரு சகோதரர் ஜஸ்டின் மனைவி ஜிஸ், மற்றும் எம் பி யின் தாய் மேரி ஜார்ஜ் ஆகிய அனைவர் பெயரிலும் கூட்டு பட்டாவாக இருந்த 28 ஏக்கர் நிலம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இதற்கிடையில் பாதர் டாம் ஜக்கரியா,எம் எம் மணியின் உடன் பிறந்த சகோதரர் லும்பாதரன்...அவரது மனைவி சரோஜினி லும்பாதரன்...போல இன்னும் ஆயிரக்கணக்கான நிலமாபியாக்கள் தேவிகுளம் தாலுகாவை சுற்றி வரும் நிலையில்...எதற்காக மாநில அரசு 1964 நிலச் சீர்திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்கிறது.ஆக்கிரமிப்பு விவகாரம் வெட்ட வெளிச்சமாகும் போதெல்லாம் இடுக்கி மாவட்டத்தில் இடதுசாரிகள் மட்டும் களத்திற்கு வருவது ஏன்...?

இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறியதாவது: தேவிகுளம் தாலுகாவில் சப்-கலெக்டராக பணியாற்றுவது தான் இந்தியாவில் சவால் நிறைந்த பணியாகும். இங்கு மட்டும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் பதினைந்து சப்-கலெக்டர்கள் நிலவிவகாரத்தில் மாற்றப்பட்டு உள்ளனர். அந்த தாலுகாவில் கிறிஸ்தவ மிஷனரிகள் வளைத்து போட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுவது எப்போது...? ஆக்ரமிப்பாளர்களின் பிடியில் சிக்கிக் கிடக்கும் தேவிகுளம் தாலுகாவில் எந்த அடிப்படையில் கேரள மாநில அரசு டிஜிட்டல் ரீ சர்வேயை மேற்கொள்ள போகிறது...?

கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பின் தேவிகுளம் தாலுகாவில் மலையாள நில மாஃபியா கும்பலால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் எவ்வளவு என்பது குறித்த வெள்ளை அறிக்கையை கேரள சட்டமன்றத்தில் தாக்கல் செய்யுமா இடதுசாரி அரசு...? இடுக்கி எம்.பி யால் கொட்டக்கம்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட 28 ஏக்கர் நிலத்தின் பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்ட கேரள மாநில வருவாய்த்துறை,,,

எம் எம் மணியின் தம்பி லும்பாதரன் மற்றும் அவரது மனைவி சரோஜினி லும்பாதரன் மற்றும் பாதர் டாம் ஜக்கரியா போன்ற ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கும் நிலத்தின் பட்டாக்களை ரத்து செய்யப் போவது எப்போது...?140 ஆண்டுகளாக இடுக்கி மலையகத்தில் தங்கள் ரத்தத்தையும் வியர்வையும் சிந்தி உழைக்கும் அப்பாவி தமிழ் தேயிலைத் தோட்ட தொழிலாளிகளுக்கு குடியிருக்க நிலம் இல்லாத நிலையில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு இந்த இடதுசாரி அரசாங்கம் கொம்பு சீவி விடுவது ஏன்...?

கேரளத்து இடதுசாரிகளே மனசாட்சியோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள். கிழக்கு ஐரோப்பிய நாடுகளான போலந்து ருமேனியா, ஹங்கேரி, ஜெர்மன் மற்றும் சோவியத் ரஷ்யாவில், 1989 காலகட்டங்களில், அங்கு நிலை கொண்டிருந்த கம்யூனிஸ்ட் அரசாங்கங்களுக்கு மக்கள் கொடுத்த மரண அடியை, கேரளத்து மக்கள் கொடுக்க தயங்க மாட்டார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

Updated On: 25 Oct 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  2. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  4. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  5. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  6. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி ட்ரோன் பறக்கத் தடை