/* */

அரசு அதிகாரிகளின் அலட்சியம்: விவசாயிகள் கடும் வேதனை

அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கையும், அவர்களின் விமர்சனங்களை கண்டும் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

அரசு அதிகாரிகளின் அலட்சியம்: விவசாயிகள் கடும் வேதனை
X
முல்லை பெரியார் அணை (பைல் படம்).

முல்லைப்பெரியாறு அணையில் நீர் மட்டத்தை மீண்டும் 152 அடியாக உயர்த்துவது மிகவும் சவாலான விஷயம். இந்த விஷயத்தில் கேரளா அத்துமீறி செயல்பட்டு, அணையினை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பரப்புரை செய்து வருகிறது. கேரள அரசு அப்படி பரப்புரை செய்பவர்களை ஆதரிப்பதோடு, அவர்களுக்கு நிதி ஆதாரமும் செய்து கொடுத்து வருகிறது.

ஆனால் தமிழகத்திலோ நிலைமை தலைகீழாக உள்ளது. தமிழக அரசு முல்லைப்பெரியாறு அணை விஷயத்தில் சற்று கவனக்குறைவாக செயல்படுவதாகவே விவசாயிகள் பகிரங்கமாக குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். இதற்கு காரணம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட அதிகாரிகள் தான் என்பது விவசாயிகளின் திட்டவட்டமான குற்றச்சாட்டாக உள்ளது.

தமிழக- கேரள அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலோ, நேருக்கு சந்திக்க நேர்ந்தாலோ, கூட்டாக ஆய்வு நடத்த வேண்டியிருந்தாலும், சமமான கேடரில் உள்ள தமிழக அதிகாரிகள் கூட கேரள அதிகாரிகளை தங்களின் 'பிக்பாஸ்' போல் கருதி பம்முகின்றனர். கேரள அதிகாரிகளின் நடை, உடை, பாவனை, அதிகார தோரணையுடன் ஒப்பிடுகையில் தமிழக அதிகாரிகள் மிக, மிக பின்தங்கி உள்ளனர்.

இதனை கண்கூடாக பார்க்கும் விவசாயிகள் தமிழக அதிகாரிகளின் செயல்பாட்டை கண்டு மனவேதனை அடைகின்றனர். உண்மையை சொன்னால் 'இவர்கள் எப்படி உரிமையை மீட்டுத்தரப்போகிறார்கள்' என தமிழக அதிகாரிகள் மீது நம்பிக்கையிழந்து விடுகின்றனர்.

இதனால் நாமாவது முயற்சிப்போம் என முல்லைப்பெரியாறு அணையினை பாதுகாக்க போராட்டம் நடத்துகின்றனர். அதேபோல் மதுரைக்கு குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். அதனை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் தேனி மாவட்டத்திற்கு பாதுகாப்பான ஒரு திட்டம் தாருங்கள் என விவசாயிகள் கேட்கின்றனர். இப்படி கேட்கும் விவசாயிகளை முட்டாள்களை போல் சித்தரித்து அதிகாரிகள் தரக்குறைவாக நடத்துகின்றனர். தினமும் தேனி மாவட்டத்தில் இருந்து பல நுாறு லோடுகள் மண், மணல், கல் கேரளாவிற்கு கடத்திச் செல்லப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்துங்கள் என விவசாயிகள் கேட்டால், 'பேசாம இருய்யா, உனக்கும் ஏதாவது தரச்சொல்றேன். அதுக்கு தானே போராடுற' என கடும் சொற்களை உதிர்க்கின்றனர்.

உரிமைக்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் போராடும் விவசாயிகளை 'வேறு வேலை இல்லையா, யாரிடம் காசு வாங்கிக் கொண்டு போராடுகிறாய்' என கேட்கின்றனர். இது மட்டுமின்றி விவசாயிகளை பற்றி அரசுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தவறான தகவல்களை அனுப்பி விடுகின்றனர்.

இது குறித்து கூறிய விவசாயிகள், 'அரசு அதிகாரிகளுக்கு மாதம் பிறக்கும் முன்பே, பல லட்சம் சம்பளம் வங்கி கணக்கில் ஏறி விடுகிறது. அதுவும் ஒரே வீட்டில் இரண்டு பேர் அரசு அதிகாரிகளாக இருந்து விட்டால் பணம் கொட்டுகிறது. சம்பளம் தவிர இதர வருவாயும் வருகிறது'. ஆனால் வாழ்வாதாரத்திற்கு போராடும் விவசாயிகளை பற்றியோ, சுற்றுச்சூழல் பற்றியோ அவர்கள் கவலைப்படுவதில்லை. விவசாயிகளை மிகவும் தரக்குறைவாக மிரட்டுகின்றனர். திட்டுகின்றனர். நடத்துகின்றனர். தங்களின் அதிகாரத்தை காட்ட வேண்டிய இடத்தில் (கேரளாக்கார அதிகாரிகளிடம்) காட்டுவதில்லை. அங்கு பம்மி விட்டு எங்களிடம் வீராப்பு காட்டுகின்றனர். எங்கள் விதிநாங்கள் போராடி வாழ வேண்டிய நிர்பந்தம். அதற்காக எங்கள் கோரிக்கைகளின் நியாயம், உண்மைத்தன்மையை கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியவில்லை. அதிகாரிகள் மட்டும் சரியாக இருந்தால் 90 சதவீதம் பிரச்னைகள் தீர்ந்து விடும். அரசியல்வாதிகளை விட அதிகாரிகள் மட்டமாக செயல்படுகின்றனர். என்ன நடந்தாலும் நாங்கள் விவசாயம் செய்யாவிட்டால், அவர்கள் பட்டினி கிடக்க நேரிடும் என்ற உண்மையை கூட புரிந்து கொள்ளவில்லை. தேனி மாவட்டம் மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு இதேநிலை தான் உள்ளது' என வேதனை தெரிவித்தனர்.

Updated On: 9 July 2022 4:58 AM GMT

Related News