/* */

முல்லை பெரியாறு அணை விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு எதிர்ப்பு

Mullaperiyar Dam Issue -அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது

HIGHLIGHTS

முல்லை பெரியாறு அணை விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு எதிர்ப்பு
X

முல்லை பெரியாறு அணை - கோப்புப்படம் 

Mullaperiyar Dam Issue -முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவுக்காக காத்திருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்த கருத்து முல்லை பெரியாறு வைகை பாசனப்பகுதி விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன், மதுரை, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டல நீர்வளத்துறை ஆய்வுக்கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் கூட்டத்தில் பேசியதாவது: நீண்ட ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கபட்ட பணி தாமிரபரணி ஆறு - நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு திட்டம். நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் நதிநீர் இணைப்பு திட்டத்தின் முதல் 2 பகுதிகள் 100 சதவீதம் முடிந்துள்ளது. 3-ம் பகுதி 99 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 4-ம் பகுதி 58 சதவீதம் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் மாதத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்டம் பெருமளவு நிறைவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தாமிரபரணி நதி நீர் இணைப்பு திட்டம் மொத்தமாக மார்ச் 2023-ல் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும்.

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக எதுவும் இனி பேச மாட்டோம். முல்லைப் பெரியாறு தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் தெரிவித்த இந்தக் கருத்துக்கு முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வாயிலாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்:

1) முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, கேரளாவோடு எப்போது பேச்சுவார்த்தை நடத்தினீர்கள், அது எப்போது முடிவுக்கு வந்தது...?

2) முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு நடத்தும் வழக்கு ஏதாவது, நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கிறதா...?

3) கடந்த 2014 -ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகளை அமல்படுத்துவதற்கே இன்னும் நடவடிக்கை எடுக்காத நிலையில், மறுபடியும் எந்த நீதிமன்றத்திற்காக காத்திருக்கிறீர்கள்...?

4) மக்களுக்கே தெரியாமல் உச்ச நீதிமன்றத்தில் தனியாக எதுவும் வழக்குப் போட்டிருக்கிறீர்களா...?

5) எதேச்திகாரமாக மத்திய நீர்வள கமிட்டி மூலம், முல்லைப் பெரியாறு அணை மீது கேரளா திணித்திருக்கும் ரூல் கர்வ் முறைக்கு எதிராக இதுவரை வாயே திறக்காத நீங்கள், எதற்காக இனி பேச மாட்டோம் என்று சொல்கிறீர்கள்...?

6) கேரள மாநில முதல்வரை சந்தித்து முல்லைப் பெரியாறு அணை, நெய்யாறு அணை குறித்து பேசப் போகிறேன் என்று தமிழக முதல்வர் இரண்டு நாட்களுக்கு முன் அறிவிக்கும்போது நீங்கள் உடன் இல்லையா...?

அல்லது உங்களுடைய கவனத்துக்கு வராமல் தமிழக முதல்வர் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள மாநில முதல்வருடன் பேசப் போகிறேன் என்று அறிவித்தார்களா...!

7) எந்த நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறீர்கள் அமைச்சர் துரைமுருகன்....?

அரசினுடைய நல்ல செயல்களை ஆதரிக்கிறோம். தி.மு.க., அரசு பதவியேற்ற நாள் முதல், இன்று வரை முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகளை நம்முடைய முதல்வர் எடுத்து வந்தாலும் அதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது கேரளா. இது உங்களுக்கும் தெரியும்.

ஒரு முறைக்கு பலமுறை பினராயியை நம்ப வேண்டாம் என்கிற எங்களது அறைகூவல், முதல்வருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை.பதவியேற்ற பிறகு நம்முடைய முதல்வர் கேரளாவிற்கு ஒரு முறையும், கேரள முதல்வர் தமிழகத்திற்கு ஒரு முறையும் வந்திருக்கிறார்கள். ஆனால் இரண்டு சந்திப்பிலும் முல்லை பெரியாறு அணை குறித்து பேசவே இல்லை... என்கிற நிலையில் அமைச்சர் துரைமுருகனின் இந்த வெற்று அறிவிப்பு எதற்காக...? இவ்வாறு கேள்விகளை தொடுத்துள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 Sep 2022 9:15 AM GMT

Related News