/* */

ராகுல் காந்தி தண்டிக்கப்பட்டது சரியா? அது செல்லுமா?

ஒரு குற்ற வழக்கில் தண்டிக்கப்படும் போது, உச்சபட்ச தண்டனையை வழங்கும் முன் நீதிபதிகள் பல முறை யோசிப்பார்கள்

HIGHLIGHTS

ராகுல் காந்தி தண்டிக்கப்பட்டது சரியா? அது செல்லுமா?
X

பைல் படம்

ராகுல்காந்தி கோர்ட்டில் தண்டனை பெற்றது, தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து சட்ட வல்லுநர்கள் பலரும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.

இது பற்றி ஒரு சட்ட நிபுணரின் விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம்: பொதுவாக நீதிபதிகள் ஒரு வழக்கினை விசாரிக்கும் போது, அதுவும் குற்றம் சாட்டப்பட்டவர் மிக உயரிய இடத்தில் இருப்பவர் என்றால், அந்த வழக்கில் மிக, மிக கவனமுடன் தான் தீர்ப்பு வழங்க முயற்சி செய்வார்கள். குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்க முடியாது என்ற இக்கட்டான தவிர்க்க முடியாத சூழல் ஏற்படும் போது தான் அந்த வழக்கிற்கான குறைந்த பட்ச தண்டனையை, மேல் முறையீட்டுக்காக கொஞ்சம் சலுகைகளுடன் வழங்குவது என்பது வழக்கம். அதை பல கடந்த கால வழக்குகளை அடிப்படை சான்றாக ஒப்பிட்டு பார்க்கலாம்.

ஆனால், ராகுல்காந்திக்கு கொடுத்த தண்டனை என்பது அதிகபட்சமானது. அதன் நோக்கம் அவரின் பதவி பறிக்கப்படும் என்று நன்கு உணர்ந்த பின் கொடுக்கப்பட்ட தண்டனை. இப்படிப்பட்ட தீர்ப்பினை மிகவும் தீவிரமாக யோசித்த பின்பு தான் ஒரு நீதிபதி செய்வார். ஆனால் அதையும் தாண்டி அந்த தீர்ப்பு எழுதுகிறார் என்றால் ஆகச்சிறந்த வக்கீல்களை கொண்டு அதை எப்படியும் உடைப்பார்கள் என்று அந்த நீதிபதிக்கு நன்கு தெரியும்.

நாளை இது தவறான தீர்ப்பு என்று கூட மேல்மட்ட கோர்ட்டுகள் தீர்ப்பு சொன்ன நீதிபதிக்கு குட்டு வைக்கலாம். ஆனால் அதையும் தாண்டி அந்த நீதிபதி இப்படி ஒரு தண்டனை கொடுக்கிறார் என்றால் அந்த தீர்ப்பின் ஆழம் எப்படிப்பட்டது என்று தான் பார்க்க வேண்டும். ஏனெனில் அதன் அடிப்படையில் தான் அந்த வழக்கை நிறுத்தி வைக்கவோ அல்லது தள்ளுபடி செய்யவோ முடியும்! அதற்காக ஒரு மாதிரி வழக்கை மாதிரியாக காணலாம்.

ஒரு நண்பரின் தாய், தந்தை மற்றும் வேலைக்கு இருந்த சிறுவனையும் எதிரிகள் முன் விரோதம் காரணமாக வெட்டியதில், அவரது தந்தை அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். தாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அந்த சிறுவனின் தலையில் இரண்டு வெட்டுக்கள், அதில் V வடிவத்தில் மண்டை ஓடு வெளியே வந்து விட்ட பின்னரும் அந்த சிறுவன் தப்பித்துக் கொண்டான். அவன் தான் நேரடியான சாட்சி மட்டுமல்ல, கடுமையாக பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி பிழைத்தவன் எனும் போது அவன் வேறு யாரையோ கைகாட்டுவான் என்பது விபரீதம். எனவே அவனின் சாட்சிப்படி மாவட்ட நீதி மன்றத்தில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது.

ஆனால் அந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு வந்த போது, வழக்கு அந்த ஒரு சாட்சியையே, பாதிக்கப்பட்டவன் என்ற ரீதியில், அவனின் உயிருக்கு ICU வில் போராடிக்கொண்டு இருந்தவனின் வாக்கு மூலத்தை ஏற்க முடியாது என்று நிராகரித்தது மட்டுமல்ல, அந்த வழக்கு மேல் முறையீட்டுக்காக சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் செய்ய தகுதியில்லாதது என்று தீர்ப்பில் சொல்லப்பட்டு விட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மூத்த மகன் நேர்மையான போலீஸ் அதிகாரி. பின்னாளில் அவர் பல தமிழக அரசின் விருதை மட்டுமல்ல, தேசிய அளவிலும் விருது வாங்கினார். ஆனால் அந்த வழக்கை மேல் முறையீடு செய்ய முடியாத அளவிற்கான தீர்ப்பு அவரை மிகவும் பாதித்தது. நேர்மையான அதிகாரி என்பதால், அவர் கடன் வாங்கித்தான் பெரிய வக்கீல்கள் மூலம் வாதாடி, முதலில் அந்த வழக்கை மேல் முறையீடு செய்ய அனுமதி வாங்கினார். பின்பு சுப்ரீம் கோர்ட்டில் கீழ் கோர்ட்டில் கொடுத்த தண்டனையை உறுதி செய்தது மட்டுமல்ல, உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை மோசமான முன்னுதாரனமாக சாடியது.

எனவே இங்கும் அப்படி ஒரு தீர்ப்பு சொல்லப்பட்டிருந்தால், அது தீர்ப்பு கொடுத்த நீதிபதியை பாதிக்கும் என்பதை நன்கு உணர்ந்த பின் தீர்ப்பு எழுதியுள்ளார் என்றால், அந்த தீர்ப்பின் ஆழத்தை விரிவாக பார்க்க வேண்டும். அதில் தொய்வு இருந்தால், சில நாட்களில் அது உடைக்கப்பட்டு விடும். அது மட்டுமல்ல, இதுவரை மீடியாவில் கிழித்தெடுத்து இருக்க மாட்டர்களா?

இன்று வரை, மோடியை விமர்சிப்பவர்கள் அந்த தீர்ப்பை விமர்சிக்கவில்லை என்பதை கூர்ந்து பார்க்க வேண்டும். எனவே பா.ஜ., வழக்கறிஞர்கள் அந்த தீர்ப்பின் ஆழத்தை படித்து விரிவாக பதிவு செய்ய வேண்டும். இப்போது, இந்த வழக்கின் தீர்ப்பு ஆழமாக, தெளிவான ஆதாரங்களுடன் தீர்ப்பு சொல்லப்பட்டிருப்பதால், உடனே சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு செல்ல முடியாது. கீழ் கோர்ட்டில் அதை மீண்டும் விசாரித்து, அங்கே நீதி கிடைக்காத போது தான் மேல் கோர்ட் செல்ல முடியும். மேலும் இந்த வழக்கின் தண்டனையை தான் நிறுத்தி வைத்துள்ளார்களே தவிர, தீர்ப்பை நிறுத்தி வைக்கவில்லை. தீர்ப்புக்கு தனியாக ஸ்டே வாங்கினால் தான் அதை செய்ய முடியும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்பதை வழக்கறிஞர்கள் உணர்வார்கள்.

அப்படியே கொண்டு சென்றாலும், ஏற்கெனவே கோர்ட்டில் RSS முதல், மோடி வரை பலரை பலமுறை ராகுல் தவறாக விமர்சித்து கோர்ட்டில் மன்னிப்பு கேட்டவர் என்ற வகையில், இந்த கேஸையும் மன்னித்து மறக்க வேண்டும் என்று கேட்க முடியாது. அதாவது usual offender என்றே அவரை கோர்ட் பார்க்க வேண்டிய சூழல் ராகுலுக்கு எதிராக இருக்கும்.

பலர் இது ராகுலுக்கு அனுதாப அலையை கொடுக்கும் என்ற ரீதியில் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அந்த தீர்ப்பு வந்த சூழலை பாருங்கள்! இங்கிலாந்தில், இந்தியாவை பற்றி மட்டுமல்ல, இந்தியாவின் தூண்களான நீதி மன்றத்தின் நம்பிக்கை கூட இல்லாமல், மேலை நாடுகள் உதவ வேண்டும் என்று ராகுல்காந்தி தன் பேச்சில் கோரியது தான் உச்சகட்ட அபத்தம். அதுவும் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளைக்காரன் நாட்டில் பேசியது. அதாவது, காங்கிரஸ் கட்சி வெள்ளைக்காரனிடம் சுதந்திரம் வாங்கியதை நியாயப்படுத்துகிறாரோ? என்றும் நினைக்கத்தோன்றுகிறது. அவர் பேசியது எல்லாம் அவருக்கான எதிர் நிலையை தோற்றுவிக்காதா?

சரி, ஆதரவு என்றால், இவர் மீது தொடுக்கப்படட வழக்கு, பொய் என்று சொல்லும் அளவிற்கானது அல்ல. அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக பேசப்பட்டது எனும் போது, இவருக்கான ஆதரவு எப்படி சாத்தியம்? மேலும் எதிர்பார்த்த அளவிற்கு காங்கிரஸில் இருந்தோ அல்லது மக்களிடம் இருந்தோ எதிர்ப்பு தோன்றாத நிலையில், நிலுவையில் உள்ள அடுத்தடுத்த வழக்குகள் இவர் மீது தொடர்ந்து பாயும். அப்போது இவர் அடுத்த தேர்தலுக்கு வேலை செய்வாரா, இல்லை கோர்ட் வழக்கின் பின் திரிவாரா?

அதுவும் 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத ஒரு தீர்ப்பு, அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்த நிலையில், பிரதமர் கனவிற்கு பெரும் தடையாக இருக்கும் என்ற சூழலில், பிரதமர் நாற்காலி யாருக்கு கிடைக்கும் என்கிற ஒரு நப்பாசை மற்றும் எதிர்பார்ப்பில் காங்கிரஸ் ஒருவரை அங்கீகரிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே துண்டு துண்டாய் கிடக்கும் எதிர்கட்சிகளுக்கு மேலும் பின்னடைவை தரும். அதுமட்டுமல்ல, காங்கிரஸில் அடுத்து நமக்கு வாய்ப்பு கிடைக்க ஏதாவது செய்ய அடுத்த கட்ட தலைவர்கள் நூல் விடுவார்கள், அது மேலும் பின்னடைவையே தரும். ஒரு வேளை காங்கிரஸ், ஒரு திறமையான தலைவரை முன் நிறுத்தினால், அது காங்கிரஸுக்கு மட்டுமல்ல, இந்திய நாட்டிற்கும் நல்லதே.

என்னதான் மாநில கட்சிகளுக்கு தேர்தல் சாதகமாக அமைந்தாலும், காங்கிரஸுக்கு 100+ இடங்கள் கிடைக்கா விட்டால் எதிரணி என்பது சத்தியமல்ல எனும்போது, தலையில்லாத காங்கிரசின் நிலை பரிதாபம் தான்.

இந்த சூழலில். மேலும், மேலும். வழக்குகள் ராகுல் காந்தி, சோனியா காந்தி மீது பாயும் எனும் போது, காங்கிரஸ் சிதறுண்டு அதற்கு முக்தியை சொன்ன படி மோடி கொடுப்பார் என்று தான் தோன்றுகிறது. ஆனால் காங்கிரஸின் வீழ்ச்சி, நாட்டுக்கு நல்லதல்ல, அதே வேளையில் தற்போதைய காந்திகளும் நாட்டுக்கு நல்லதல்ல. மாறாக தற்போதைய காந்திகளுக்கு பதிலாக ஒரு நல்ல தலைவர் கிடைத்தால் காங்கிரசுக்கும், நாட்டுக்கும் நல்லது. ஏனெனில் மாநில கட்சிகள் நாட்டிற்கு ஆபத்தானது! ஆனால் அடுத்த 15 ஆண்டுகளில் மாநிலக் கட்சி என்பது பாரதத்தில் இல்லாமல் போய்விடும் என்பது முக்கியமான அரசியல் கணிப்பு. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Updated On: 26 March 2023 5:45 PM GMT

Related News