/* */

இந்தியாவின் பிரம்ம ரிஷி ஐ.என்.எஸ் துருவ்: சிக்கிக் கொண்டதா சீனா?

சீன உளவுக்கப்பலால், இந்தியாவின் பாதுகாப்பில் ஏற்படும் அச்சுறுத்தல்கள் பற்றி அறிய ஆவலாக உள்ளோம் என இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியது தீயாய் பற்றி உள்ளது.

HIGHLIGHTS

இந்தியாவின் பிரம்ம ரிஷி ஐ.என்.எஸ் துருவ்: சிக்கிக் கொண்டதா சீனா?
X

ஐஎன்எஸ் துருவ்

இந்திய பத்திரிக்கைகளும் சில வெளிநாட்டு ஊடகங்களும் சீன கப்பலின் இலங்கை வருகையினை தொடர்ந்து சில விஷயங்களை கசியவிடுகின்றன, இது ஊடகங்களின் செய்தி என்றாலும் இந்திய அரசின் ரகசிய அனுமதி இல்லாமல் அது வெளிவர வாய்ப்பே இல்லை.

அந்த செய்தி இந்திய கப்பல் ஐ.என்.எஸ் துருவ் பற்றியது. இந்த கப்பலை பார்க்கும் முன்னால் இந்திய தமிழக ஊடகங்கள் செய்யும் அழிச்சாட்டியம் பற்றி பார்க்கலாம். இந்திய ஊடகங்கள் அந்த சீன கப்பல் யுவான் வாங் ராக்கெட் ஏவும் கப்பல், அணுகுண்டை வீசும் கப்பல், இன்னும் வானத்துக்கே செயற்கைகோளை ஏவும் கப்பல் என்றெல்லாம் அள்ளிவிடுகின்றன. ராக்கெட்டை வானுக்கு ஏவும் கப்பல் என உலகில் ஒன்றுமே இல்லை என்பது மீடியாக்களுக்கு தெரியவில்லை.


ஸ்ரீஹரிகோட்டாவினை கப்பலில் ஏற்றமுடியாது என்பதுதான் நிஜம். சீன கப்பல் ராக்கெட் வீசும் என்பதெல்லாம் அபத்தம், அவ்வகை நாசகாரி கப்பல் என்றால் இம்முறை ஹம்பந்தோட்டாவுக்கு வரவே முடியாது காரணம் தாக்குதல் கப்பலுக்கு இலங்கை ஹம்பாந்தோட்டையில் அனுமதி இல்லை. இது முழுக்க முழுக்க சிக்னல்களை கிரகிக்கும் கப்பல். அதாவது சமிக்கைகளை மட்டும் அது கிரகிக்குமே தவிர தாக்குதல் எதையும் செய்யாது.

தெளிவாக சொல்லவேண்டும் என்றால் செயற்கைகோள்களில் இருந்து வரும் சிக்னல்களை அவை உறுதிசெய்யும், பலவகை ஏவுகணைகள் செயற்கைகோள் வழிகாட்டலில் பாய்வதால் இந்த சிக்னல்கள் முக்கியம். இன்னும் ராணுவத்தின் பலமே தொலைதொடர்பு என்பதால் இவை பல விஷயங்களை கிரகித்து கொடுக்கும்.

அப்படியே எதிரி நாட்டு சிக்னல்களை இவை குழப்பும் அல்லது முடக்கும். இந்த சீனாவின் "யுவான்" எனும் சொல்லுக்கு தொலைதூரம் என பொருள், யுவான் வாங்க் என்பது தொலைவில் இருந்து பார்ப்பதை குறிக்கும். இவ்வகை கப்பல்கள் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, பிரான்ஸ் என ஐந்து நாடுகளிடம் மட்டும் உண்டு.

கடைசியில் 2000ம் ஆண்டுகளில் இணைந்தது சீனா. மோடி இந்திய பிரதமரான 2014ம் ஆண்டின் அடுத்த மாதமே இதை தயாரிக்க உத்தரவிட்டார். மோடியின் முதல் திட்டமே அந்த கப்பலை கட்டுவது. அதற்கு ஐ.என்.எஸ் துருவ் என பெயரிடப்பட்டது. இது முழுக்க முழுக்க செயற்கைகோள் நகர்வுகளையும் எதிரிநாட்டு கப்பல், விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களின் நகர்வுகளையும் கண்டறியும். இதன் செலவும் தொழில்நுட்பமும் அதிகம்.

முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு என்றாலும் பிரான்ஸின் சில ஆலோசனைகளும் இருக்கலாம். இக்கப்பல் 2020ம் ஆண்டு சோதனை ஓட்டம் எல்லாம் முடிந்து கடந்த வருடம் ஓசையில்லாமல் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இக்கப்பல் 2020ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டதாக சொன்னாலும் 2018ம் ஆண்டுகளிலே அதன் தொழில்நுட்பம் ஓரளவு பயன்பாட்டுக்கு வந்தது.

இந்தியாவின் மிகபெரிய சாதனையான செயற்கைகோள் தகர்ப்பு ஏவுகணையின் வெற்றியினை மோடி அறிவித்த பொழுது இக்கப்பல் செயலாற்ற தொடங்கிற்று. முழுவதும் பயன்பாட்டுக்கு வந்த அக்கப்பல் இப்பொழுது இந்திய கப்பல் படையில் இருந்தாலும் அக்கப்பல் எங்கே என்ன செய்கின்றது என்பது பற்றி இந்தியா வாயே திறக்கவில்லை. மிக ரசியமான கப்பல் அது.

ஒப்பீட்டளவில் சீன கப்பலை அது எளிதாக சமன் செய்யும் என்பது கப்பல்படை வல்லுனர்கள் கருத்து. இந்தியா இது போக சுமார் 40 கப்பல்களை கட்டிகொண்டிருக்கின்றது. இதில் பல உளவுக்கப்பல்கள் என்பதும் பெரிய உண்மையாகும். சீன கப்பல் இலங்கைக்கு வந்திருக்கும் நேரம் இந்தியாவின் சில ஊடகங்களும் சில வெளிநாட்டு ஊடகங்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.

துருவ் கப்பலின் ஆற்றலும் பலமும் மெல்ல வெளிவருகின்றது. உண்மையில் சீனா இந்தியாவினை உளவுபார்க்க வேண்டுமென்றால் சீன கப்பல் பாகிஸ்தானுக்கு செல்லலாம். வங்கதேசம் பர்மா என செல்லலாம். அதைவிடுத்து தெற்கே இலங்கைக்கு வந்திருப்பது சில சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

அதாவது நெல்லை மாவட்டம் நாங்குனேரி அருகே அமைந்துள்ள சுமார் 3000 ஏக்கர் பரந்து விரிந்த கப்பல்படைக்கு சொந்தமான சிக்னல் நிலையத்தை உளவு பார்க்கலாம் என்பது மட்டும் ஒருதியரி இல்லை அங்கிருந்து கொண்டு வேறு எதனையோ இலக்கு வைத்து உளவு பார்க்கலாம் என்பது இன்னொரு தியரி.

நிச்சயம் இந்தியாவின் பாதுகாப்பும் அவ்வளவு ஓட்டையாக இருக்காது. அதுவும் சீன கப்பல் வரும் செய்தி வந்த பின் இந்தியா நிச்சயம் தன் தரவுகளை பாதுகாக்காமல் இருக்காது. இந்நிலையில் சீன கப்பலின் வருகையினை முதலில் அனுமதிக்க மறுத்த இலங்கை, தற்போது அனுமதித்துள்ளது. அதாவது இந்தியாவின் அனுமதியில்லாமல் இலங்கை சீன கப்பலுக்கு அனுமதியும் வழங்கியிருக்காது என்ற வாதமும் வலுவாக உலா வருகிறது.


சீன உளவு கப்பல்

இதற்கு வலு சேர்க்கும் வகையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சீன கப்பலின் வருகையால் இந்தியாவின் பாதுகாப்பு அம்சங்களில் ஏற்படும் அச்சுறுத்தல்களை அறிய ஆவலாக உள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார். இதன்படி பார்த்தால், 'சீன கப்பல் வரட்டும் அதில் என்ன தான் உள்ளது என்பதை அறிய நாங்களும் தயார் நிலையில் இருக்கிறோம்' என்பது தான் அர்த்தம்.

அதாவது கிராமத்து பாணியில் 'அவனாக வந்து சிக்குகிறான், அதனை ஏன் தடுக்க வேண்டும்' என பொருள்பட கூறியிருக்கிறார். இந்த விஷயம் தான் இப்போது காட்டுத்தீயாய் பற்றி எரிகிறது. சீனா தனது கப்பல் மூலம் இந்தியாவை உளவு பார்க்கிறதா? அல்லது இந்தியாவின் உளவு வளையத்திற்குள் வந்து சீனா சிக்கிக்கொண்டதா? என்பது தான் பெரும் விவாதப்பொருளாக உள்ளது. நம் வெளியுறவு அமைச்சர் சிரித்துக் கொண்டே கூறிய விஷயம் இப்படித்தானே சிந்திக்க வைக்கும்.

அதுவும் சீனா தன் பலம் பற்றி எதையோ சொல்ல, அப்பக்கம் வரும்பொழுது இந்தியா தன் துருவ் கப்பல் செய்தியினை மெல்ல கசியவிடுகின்றது.

இனி பாருங்கள், இந்தியாவின் துருவ் கப்பல் பிலிப்பைன்ஸ், வியட்நாம், தைவான், ஜப்பான் என இந்தியாவின் நட்பு நாடுகளின் துறைமுகங்களுக்கு அதாவது சீனாவினை தொட்டுக்கொண்டிருக்கும் நாடுகளுக்கு "நல்லெண்ண" பயணம் செல்லும் எனும் செய்தி வந்தாலும் வரலாம். அதாவது தங்களிடமும் பலமான உளவு கப்பல் உண்டு என்பதை சீனாவுக்கு சொல்கின்றது இந்தியா. சொல்லியும் விட்டது இந்தியா.

மோடி மேல் குறைசொல்வோர் ஆயிரம் சொல்லட்டும். இம்மாதிரி நவீன உளவுகப்பலை மோடி அரசு தான் செய்து இன்று சீனாவுக்கு சரிக்கு சரி சவால் விடுகின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. நிச்சயம் வல்லரசுகளுக்கு இணையான சக்தி கொண்டது கப்பல் இந்திய கப்பல். சும்மா ஒன்றும் எல்லையில் சீனா அடங்கியிருக்கவில்லை மோடியின் இந்தியா அவர்களை அடக்கி வைத்திருக்கின்றது.

Updated On: 20 Aug 2022 3:32 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?