135 அடியை எட்டியது முல்லை பெரியாறு அணை: மழை தொடர்ந்தால் 142 அடிவரை உயரும்
முல்லை பெரியாறு அணைக்கு கூடுதல் நீர் சென்றுவிடாமல் தடுப்பதிலேயே கேரள அரசு கவனம்செலுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
HIGHLIGHTS

முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் நுாற்றி முப்பத்தைந்து அடியை கடந்துள்ளது. கேரள போலீசார் அணையின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் இன்று 135 அடியை எட்டியது. மழை தொடர்வதால் நீர் மட்டம் இந்த ஆண்டாவது 142 அடிவரை தேக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் உருவாகி உள்ளது.
முல்லை பெரியாறு அணைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைக்கு விநாடிக்கு 3100 கனஅடி வரை நீர் வரத்து இருந்து வருகிறது. இன்று பிற்பகல் அணை நீர் மட்டம் 135 அடியை கடந்தது. அணையில் இயல்பான சூழலில் 136 அடி வரை தண்ணீர் தேக்கலாம். அதற்கு மேல் நீர் தேக்க ஷட்டர்களை மூட வேண்டும். தற்போது வரை ஷட்டர்கள் மூடப்பட்ட நிலையில் உள்ளன. தவிர கடந்த வாரம் முல்லைப்பெரியாறு அணை மிகவும் வலுவுடன் உள்ளதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கலாம் என சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஆனால், கோர்ட் உத்தரவை இதுவரை நடைமுறைப்படுத்தவிடாமல், கேரள அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை வனப்பகுதிகளி்ல் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டி கேரளாவிற்குள் திருப்பி விட்டுள்ளது. இதன் விளைவு தான் தற்போது கேரளாவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு, பேரழிவு ஏற்பட்டுள்ளது. தவிர இடுக்கி அணையும் முழுமையாக நிரம்பி வழிவதால், கேரளாவில் மிகப்பெரும் வெள்ள அபாயம் உருவாகி உள்ளது.
இந்நிலையிலும், முல்லை பெரியாறு அணைக்கு வரும் கூடுதல் நீர் சென்றுவிடாமல் தடுப்பதிலேயே கேரள அரசு கவனம் செலுத்தி வருகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் மழை அதிகளவு பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. மழை தொடர்ந்தால் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை சேமிக்க விடுவதைத்தவிர கேரளாவிற்கு வேறு வழியில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை சேமிக்க கூடுதல் மழை பெய்ய வேண்டும் என தேனி மாவட்ட விவசாயிகள் பலத்த எதிர்பார்ப்புடன் வருண பகவானை வழிபாடு செய்து வருகின்றனர்.